May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அறிவோம் தேர்தல் வரலாறு/ 1967: காங்கிரசின் வீழ்ச்சியும், திமுகவின் எழுச்சியும்

1 min read

Election/Commission./Oct.1951,A31a “Two Bull with Yoka On” (Election symbol of the Congress Party of India).

Knowledge Election History / 1967: Congress Fall, DMK Rise

1967-ம் ஆண்டு தமிழக தேர்தல், மாநில வரலாற்றில் மட்டுமல்ல; இந்திய
அரசியல் வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
முந்திய தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர்கள்
எண்ணிக்கை 206 ஆக இருந்தது. தொகுதி மறுவரையறையில் இது 234 ஆக
அதிகரிக்கப்பட்டது. இதில் பட்டியலினத்தவருக்காக 45 தொகுதிகள்
ஒதுக்கப்பட்டன.
1963-ல் காமராஜர் விட்டுக்கொடுத்த காங்கிரஸ் ஆட்சியை பக்தவத்சலம்
தொடர்ந்ததில் கட்சியின் பெயரும், ஆட்சியின் பெயரும் கடுமையாக
பாதிக்கப்பட்டு இருந்தன. விலைவாசி உயர்வு, அரிசி விலை உயர்வு என
பிரச்சினைகள் துரத்தியபோது பக்தவத்சலத்தால் சமாளிக்க முடியவில்லை.
எதிர்க்கட்சியான திமுகழகம் இப்பிரச்சினைகளை கையில் எடுத்து தொடர்
போராட்டங்களை நடத்தியது.
எல்லாவற்றுக்கும் சிகரமாக மத்திய காங்கிரஸ் அரசு இந்தியை
வலுக்கட்டாயமாக திணித்ததால் தமிழகமே கிளர்ந்து எழுந்தது. இங்கு

மாநிலத்தில் பதவியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசிடம் நிலைமையை
எடுத்துரைக்காமல் இந்திக்கு வக்காலத்து வாங்கியதால் இளைஞர்கள்
கொந்தளித்து போராடி, அரசின் அடக்குமுறைக்கு இரையானார்கள்.
எம்ஜிஆர் சுடப்பட்ட அனுதாபம்
1967 தேர்தல் நெருங்கும் வேளையில் நடிகவேள் எம்ஆர் ராதாவால் எம்ஜிஆர்
சுடப்பட்ட சம்பவம், அனுதாப அலையாக மாறி, திமுகவின் வாக்குவங்கியை
அதிகரித்தது.
இந்த சம்பவம் நடந்தது, ஜனவரியில். அடுத்த மாதம் 5,18,21 ஆகிய தேதிகளில் 3
கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆளும் காங்கிரசை எதிர்த்து, திமுகழகம்
மிகப்பெரும் கூட்டணி அமைத்திருந்தது. “கிராண்ட் அலையன்ஸ்” என
வர்ணிக்கப்பட்ட அந்தக் கூட்டணியில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு, பிரஜா சோசலிஸ்டு, முஸ்லிம் லீக், சங்கத சோசலிஸ்டு ஆகிய
கட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர், மபொ
சிவஞானத்தின் தமிழரசு கழகம் ஆகிய கட்சிகளும் திமுக கூட்டணியை
ஆதரித்ததுடன் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டன.
ஐக்கிய முன்னணி என்று பெயரிடப்பட்ட இந்தக் கூட்டணி மிகப்பெரும்
ஆதரவைப்பெறும் என்பது கண்கூடாகவே தெரிந்தது. எம்ஜிஆர் சுடப்பட்டு
கழுத்தில் கட்டுப்போட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காட்சி தமிழகம்
முழுவதும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது.
காங்கிரசுக்கு ஆதரவாக நடிகர்திலகம் சிவாஜிகணேசன். நடிகை பத்மினி
ஆகியோர் பிரசாரம் செய்தனர். சிவாஜியும், நாகேசும் நடித்த “வாழ்க நம் தியாகம்”
என்ற பிரசாரப்படமும் மாநிலம் முழுவதும் காட்டப்பட்டது. திராவிடர் கழகமும்
காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது.
ஆனால் திமுக தலைமையிலான ஐக்கிய முன்னணியின் தாக்கத்தை
காங்கிரசால் எதிர்கொள்ளமுடியவில்லை. தேர்தல் முடிவு, காங்கிரசை ஆட்சியில்
இருந்து அகற்றியது.

திமுகழகம் 137 இடங்களை கைப்பற்றியது. அதன் தோழமைக்கட்சிகளான
சுதந்திரா 20, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11, பிரஜா சோசலிஸ்டு 4, மு.லீக் 3, சங்கத
சோசலிஸ்டு 2, திமுக ஆதரவு சுயேச்சை 2 என வெற்றிகளை குவித்தன.
காங்கிரஸ் கட்சி 51 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
தனித்துப்போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களிலும், பார்வர்டு
பிளாக் 1 இடத்திலும் வெற்றி பெற்று இருந்தன.
இந்த மாபெரும் வெற்றியின் வாயிலாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு
முடிவுரை எழுதிய அண்ணா, திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல் முதல்-
அமைச்சராக 6-3-67 அன்று பதவி ஏற்றார்.
1967&ல் அவர் சட்டமன்றத்துக்கு போட்டியிடாமல் தென் சென்னை
நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார்.
Êசட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி கிட்டியதால் அவர் எம்பி பதவியை
ராஜினாமா செய்து விட்டு, முதல்வர் பதவி ஏற்று, மேல்-சபைக்கு தேர்வானார்.
தமிழ்நாடு தந்தவர், அண்ணா
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைத்த முதல் மாநிலக்கட்சி என்ற
பெருமையுடன் அவர் ஆட்சி நடத்தி, மதராஸ் மாகாணம் என்பதை ஒழித்துக் கட்டி,
“தமிழ்நாடு” என்று பெயர் சூட்டினார். இந்தி ஆதிக்கத்தை தடுக்கும் விதமாக
“தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே” என இருமொழிக் கொள்கையை
அமல்படுத்தியவரும் அண்ணாவே.
மதராஸ் மாகாணத்தின் கடைசி முதல்-அமைச்சரும், தமிழ்நாட்டின் முதல்
முதல்-அமைச்சரும் அண்ணா தான். அதாவது அவர் ஒழித்த மதராஸ் மாகாணம்
என்ற பெயர் 13-1-69 வரை நடைமுறையில் இருந்தது. தாய்த்தமிழகம், தமிழ்நாடு
என்ற பெயரில் 14-1-69ல் மலர்ந்தது.
ஆனால் காலம், காலன் வடிவில் புற்று நோயாக வந்து 1969 பிப்ரவரி 3-ல் அவர்
மரணம் அடைந்தார். அவருக்குப்பின் தற்காலிக முதல் அமைச்சராக 6 நாட்கள்
நெடுஞ்செழியன் பதவியில் அமர்ந்தார்.

பின்பு சட்டமன்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மு. கருணாநிதி 10-3-

69ல் முதல்-அமைச்சர் பதவி ஏற்று, திமுக ஆட்சியைத் தொடர்ந்தார்.

அறிஞர் அண்ணா
(6-3-67 முதல் 13-1-69 வரை மதராஸ் மாகாணம்;
14-1-69 முதல் 3-2-69 வரை தமிழ்நாடு)

நெஞ்செழியன்
(4-2-69 முதல் 9-2-69 வரை)

மு. கருணாநிதி

(10-3-69 முதல் 5-1-71 வரை).

பெருந்தலைவரின் தோல்வி

1967 தேர்தல் முடிவுகள் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றியதை பலரும்
முன்னதாகவே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அந்தத்
தேர்தலில் தோற்றது பேரதிர்ச்சியாக அமைந்தது.
விருதுநகரில் போட்டியிட்ட அவர் திமுக மாணவர் அணியைச் சேர்ந்த பெ.
சீனிவாசனிடம் 1,285 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முதல்-அமைச்சர் பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர்
ராஜரத்தினத்திடம் 8,926 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.
அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பூவராகனைத்தவிர மற்ற
அனைவருமே தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.
காங்கிரசுக்கு எதிராக வீசிய அலையில் காமராஜரும் தோற்றது தான் அந்தத்
தேர்தலில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
கருணாநிதி, எம்ஜிஆரின் வெற்றி
திமுக சார்பில் கருணாநிதி சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு,
காங்கிரஸ் வேட்பாளர் எஸ்ஜி வினாயகமூர்த்தியை 20,482 ஓட்டு வித்தியாசத்தில்
தோற்கடித்தார்.

எம்ஜிஆர் 1967 தேர்தலில் தான் முதல் முறையாகப்போட்டியிட்டார். பரங்கிமலை
தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் டிஎல் ரகுபதியை 27,674 ஓட்டு
வித்தியாசத்தில் வென்றார்.

-மணி, திருநெல்வேலி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.