June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

1 min read

The campaign for the Tamil Nadu Assembly elections has come to an end

4/4/2021

தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

சட்டசபைத் தேர்தல்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் அடங்குவார்கள்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்தே, தேர்தல் பிரசாரமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது.
இன்று இரவு 7 மணிக்கு முன்னதாக, பிரசாரத்திற்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விடவேண்டும். இனி கருத்து கணிப்புகளும் வெளியிட முடியாது. டாஸ்மாக் மதுக்கடைகளும் இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுகின்றன.

வாக்குச்சாவடிகள்

தமிழகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்காக, மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இவற்றுடன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ‘விவிபேட்’ கருவி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 807 எந்திரங்களும் இணைக்கப்பட உள்ளது.
நாளை (திங்கட்கிழமை) காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களும், அழியாத அடையாள மை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்கள் அனுப்பும் பணிகளும் தொடங்க இருக்கிறது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் 4 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ந்தேதி காலை, இந்த பெட்டிகளில் உள்ள ‘சீல்’ உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். அன்று காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மாலைக்குள் ஆட்சி அமைப்பது யார்? என்பதும் தெரிந்துவிடும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *