June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 15 பேர் நீக்கம்

1 min read

Fifteen people have been sacked, including former minister Anandan, who spoke to Sasikala on the phone

14..2021

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

சசிகலாவின் ஆடியோ பேச்சு

சசிகலா அ.தி.மு.க. தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தினமும் ஒரு ஆடியோ என்று பல்வேறு அதிமுக உறுப்பினர்களிடம் போனில் பேசி, அதை இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

சசிகலா அ..தி.மு.க.விலேயே இல்லை எனவே அவரது ஆடியோ பற்றி கவலையில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். ஆனால் சசிகலா ஆடியோ குறித்து ஓ.பன்னீர்செல்வம் எந்தவொரும் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நேற்று (திங்கட்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நேற்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அ.தி.மு.க.வினரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சசிகலா

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா, இப்போது அதிமுக இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவுபடுத்துகிறோம்.

அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கடந்த 23.5.2021-ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

நீக்கம்

இந்த நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அதிமுக வேட்பாளர்களுக்கும், அதிமுகவின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, 75 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ததோடு, 234 தொகுதிகளிலும் தங்களின் பொன்னான வாக்குகளை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் கரம்கூப்பி நன்றி கூறுகிறோம்.

கண்ணின் மணியென அதிமுகவைக் காப்போம். எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்குவோம்.

எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்”.

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். அனைத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *