April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பாராட்டிய இன்ஸ்பெக்டர்/ நகைச்சுவை சிறுகதை

1 min read

Inspector who praised the tens of thousands

28.6.2021

மர்ம வாலிபர்கள் காட்டு பங்களாவில் கடத்தி வைத்திருந்த பஞ்சகல்யாணி கழுதையை கண்ணாயிரம் தலைமையிலான குழுவினர் மீட்டு வந்தனர். பின்னர் கழுதையை கடத்த முயன்ற முரடர்கள் இரண்டு பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க கண்ணாயிரம் தலைமையில் புறப்பட்டு சென்றனர். பஞ்சகல்யாணி கழுதை, மீட்கப்பட்ட ஆண்கழுதை முன்னே செல்ல அவர்கள் வெற்றிநடை நடந்து சென்றனர். ஊர்வலத்தை மக்கள் ஆர்வமாக பார்த்தனர். கண்ணாயிரத்துக்கு அது வெட்கமாக இருந்தது. போலீஸ் நிலையத்தை அவர்கள் சென்றார்கள்.
ஒரு வாலிபர் போலீஸ் நிலையத்துக்குள் சென்று இன்ஸ்பெக்டரிடம் கண்ணாயிரம் கழுதையை மீட்ட கதையை சொன்னார்.
இரண்டு முரடர்களை் மடக்கி பிடித்த விதத்தையும் கூறினார். இன்ஸ்பெக்டர் ஆச்சரியத்துடன் கண்ணாயிரமா பரவாயில்லையே என்று பாராட்டினார். அவரை உள்ளே கூட்டிவாருங்கள் என்றுசொன்னார். உடனே கண்ணாயிரம் மற்றும் பிடிபட்ட இரண்டு முரடர்களும் உள்ளே சென்றனர். போலீஸ்காரர்கள் அந்த முரடர்களை பிடித்து அவர்கள் கைகளில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்தனர். பின்னர் அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் முன் ஆஜர்படுத்தினர். இன்ஸ்பெக்டர் மீசையை முறுக்கியபடி எந்த ஊரு உங்களுக்கு என்று கேட்டார். அதற்கு அவர்கள்… மெட்ராஸ் என்றனர். சரி.. பஞ்சகல்யாணி கழுதையை ஏன் பாழடைந்த பங்களாவில் அடைச்சி வைச்சிங்க என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
உடனே முரடர்கள், அய்யா என்னை பார் யோகம் வரும் என்ற பஞ்சகல்யாணி படம் போட்டபோர்டு தமிழ் நாடு முழுவதும் அதிகமாக விற்பனையானது. கடை, வீடு எல்லா இடங்களிலும் இந்த போர்டு தொங்கியது. இந்த கழுதை படத்தை பார்த்த சென்னையை சேர்ந்த ஒருபணக்காரர் இந்த பஞ்சகல்யாணி கழுதையை கொண்டு வந்தா ஒரு லட்சம் தருவதாக ஆசைகாட்டினார். புதுவையில் இந்த கழுதை இருப்பதாக கேள்விப்பட்டு இங்கே வந்தோம்.காட்டில் நின்ற கழுதையை இரண்டு நாளா போராடி மடக்கி பிடித்தோம் என்றனர்.
சரி. இந்த கழுதைதான் பஞ்சகல்யாணி கழுதை ன்னு எப்படி கண்டுபிடிச்சிங்க என்றார் இன்ஸ்பெக்டர். அதுவா, அந்த கழுதை காதில் குத்தியிருக்கும் செம்பு வளையம் தான். அதை வச்சுதான் கண்டுபிடிச்சோம். இது அதிர்ஷ்டக்கார கழுதை சார். இதை வேனில் ஏற்றி மெட்ராசுக்கு கொண்டு போறது க்காக பாழடைந்த பங்களாவில் அடைச்சி வைச்சிருந்தோம். அதுக்குள்ள கதவை உடைத்து மீட்டு கொண்டு வந்துட்டாங்க என்றனர். இன்ஸ்பெக்டர் சிரித்து கொண்டார். யோவ் உண்மையா உழைக்கிறவங்களுக்கு நல்லகாலம் வரும் என்பதைத்தான் இந்த கழுதை எடுத்து காட்டுது. உங்களை மாதிரி திருட்டுத்தனம் பண்ணுகிறவங்களுக்கு ஜெயில்தான் கிடைக்கும். புரியுதா என்றார்.
போலீஸ்காரர்களை அழைத்து இவங்களை நல்லா விசாரிங்க. வேறு திருட்டில் சம்மந்தம் இருக்கா பாருங்க என்றார். இரண்டு முரடர்களின் முதுகில் இரண்டு போடுபோட்டு அடுத்த அறைக்கு போலீஸ்காரர்கள் இழுத்து சென்றனர்.
அடுத்து கண்ணாயிரத்தை இன்ஸ்பெக்டர் அழைத்தார். கண்ணாயிரம் வணக்கம் போட்டபடி உள்ளே வந்தார். என்ன கண்ணாயிரம் வாங்க…. உட்காருங்க…என்றார்.
கண்ணாயிரம் இல்லை சார். நிக்கிறேன் என்றார். சரி. கையில் என்ன போர்டு வச்சிருக்கீங்க என்று கேட்டார். அதுவா.. பஞ்சகல்யாணி போர்டு சார். என்றார் கண்ணாயிரம். இதை ஏன் வச்சிருக்கீங்க என்றார்.
உடனே கண்ணாயிரம் சார், இந்த போர்டை சாதாரணமாக நினைக்காதீங்க.. இந்த போர்டை வச்சுதான் பஞ்சகல்யாணி கழுதையை கண்டுபிடிச்சேன் என்றார் கண்ணாயிரம். எப்படி என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். அது பெரிய கதை சார்… பெண் கழுதையை அழைச்சுட்டு காடு மேடாக பஞ்சகல்யாணி கழுதையை தேடியும். கிடைக்கவே. இல்லை. பெண் கழுதை குரல் கொடுத்தால் ஆண் கழுதை எங்கிருந்தாலும் சத்தம் கொடுக்கும் என்று நினைத்தேன். உடனே இந்த பஞ்சகல்யாணி கழுதை போர்டை பெண்கழுதை முகத்தில் காட்டினேன். திடீரென்று இந்த போர்டில் அதன் முகத்தில் லேசாக தட்டினேன். உடனே பெண் கழுதை கத்த.. எதிர் திசையிலிருந்து ஆண் கழுதை கத்த.. அப்புறம் என்ன பாழடைந்த பங்களாவில் கட்டப்பட்டிருந்த பஞ்சகல்யாணி கழுதையை இந்த இரண்டு முரடர்களிடம் போராடி மீண்டும் என்று சிரித்து கொண்டு கண்ணாயிரம் கூறினார். இன்ஸ்பெக்டர் அவரை பாராட்டினார்.
சரியான நேரத்தில் சரியாக செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடித்தீர்கள். இதே மாதிரி கள்ள நோட்டு கும்பலை பற்றியும் சரியான இன்பர்மேஷன் குடுங்க.. உங்களுக்கு பரிசு கிடைக்கும் என்று கூறினார். கண்ணாயிரம் சரி என்று தலை ஆட்டினார். ஆனால் உள்ளுக்குள் கொஞ்சம் பயம். கழுதையை மீட்க போய் முரடன் நம்ம கழுத்தில் கத்தியை வைச்சி மிரட்டினான். கள்ள நோட்டு கும்பல் என்ன செய்யப்போவுதோ..கழுத்தை கொண்டு போயிடுவானுக நினைச்சு பார்க்கவே பயமாக இருக்கு.. என்று கண்கலங்கினார். இன்ஸ்பெக்டர் அவரிடம், என்ன பயப்பிடுறீங்களா… நாங்க இருக்கோம்..பயப்படாதீங்க என்ன மிரட்டல் வந்தாலும் உடனே சொல்லுங்க.. போங்க என்று கண்ணாயிரத்தை அனுப்பிவைத்தார்.
கண்ணாயிரம் முகத்தில் சோர்வுடன் வெளியே வந்தார். அவரைப்பார்த்ததும் என்ன அண்ணே சோர்வா இருக்கீங்க…சோடா குடிங்க எல்லாம் சரியாயிடும். அண்ணனுக்கு கூலாக ஒரு சோடா என்றார் ஒரு வாலிபர். அடுத்த நிமிடம் சோடா வந்தது. கண்ணாயிரம் மடக், மடக் என்று குடித்தார். அவருக்கு உற்சாகம் வந்தது. முகத்தில் புன்னகை அரும்பியது.அப்போது போலீஸ்காரர் ஒருவர் வெளியே வந்தார். போலீஸ்நிலையம் முன் கூட்டம் போடாதீங்க.. கழுதையை கூட்டிட்டு கிளம்புங்க என்று சத்தம் போட்டார்.
உடனே கண்ணாயிரம் சரி. சரி. எல்லோரும் கிளம்புங்க என்றார். அனைவரும் புறப்பட தயாரானார் கள்.அப்போது ஒரு வாலிபர்… வெற்றி வீரர் அண்ணன் கண்ணாயிரம் வாழ்க என்று கோஷமிட்டார். கண்ணாயிரம் ஓடிப்போய் அவர் வாயைப்பொத்தினார். வேண்டாம் ராசா வேண்டாம் என்றார்.
பின்னர் ஒருவாலிபர் மாட்டார் சைக்கிளில் கண்ணாயிரத்தை ஏற்றிக்கொண்டார். கண்ணாயிரம் பஞ்சகல்யாணி போர்டுடன் வீட்டுக்கு புறப்பட்டார். சலவை தொழிலாளி ஆனந்த கண்ணீருடன் தனது கழுதைகளை ஓட்டிக்கொண்டு சென்றார்.

-வே.தபசுக்குமார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.