October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தலையை பறிகொடுத்த கண்ணாயிரம்/ நகைச்சுவை சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Hundreds of beheaded / comedy short story / Thabasukumar

1/7/2021

பஞ்சகல்யாணி கழுதையை மீட்ட கண்ணாயிரம் அதை கடத்த முயன்ற இரண்டு முரடர்களை பிடித்து வாலிபர்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார். இதேபோல்கள்ள நோட்டு கும்பலை பற்றியும் தகவல் கொடுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறினார். கழுதையை கடத்த வந்தவனே கழுத்தில் கத்தியை வைத்துவிட்டான். கள்ள நோட்டு கும்பலை கண்டுபிடிக்க போனால் கழுத்தை மட்டும் தனியா எடுத்துப்புட்டானா என்ன பண்ணுறது என்று நினைத்தார். அவருக்கு உடல் வியர்த்தது. வாலிபர் ஒருவர் அவரை மோட்டார் சைக்கிளில்ஏற்றி வீட்டில் போய்கொண்டுவிட்டார்
.
கண்ணாயிரம் கையில் பஞ்சகல்யாணி போர்டுடன் வீட்டை நோக்கிசென்றார். வீட்டின் முன் பஞ்சகல்யாணி போர்டை மாட்டினார். ரூபாய் கொடுத்து வாங்கியது அதை பயன்படுத்த வேண்டாமா என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டார். கதவை தட்டினார். அவர் மனைவி திறந்தார். என்னங்க ஓரு மாதிரி இருக்கீங்க.. இதுக்கு தான் வெளியே போகாதீங்க என்று செல்லுறேன் கேட்கமாட்டேங்கிறீங்க…. என்று அலுத்துக் கொண்டார்.
கண்ணாயிரம் அது எல்லாம் ஒண்ணும் இல்லை.. கள்ள நோட்டு கும்பலை கண்டுபிடிச்சு கொடுங்க என்று இன்ஸ்பெக்டர் சொன்னார். அதான் ஒரே சிந்தனையா இருக்கேன் என்றார் கண்ணாயிரம். அவர் மனைவி .. ம்.. உங்களுக்கு ஏழரை சனி நடக்குது.. இந்த நேரத்திலே எங்கேயும் போய் இங்கு பிசகா மாட்டிக்காதீங்க… சாப்பிட்டு வீட்டிலே இருங்க என்றார்.
கண்ணாயிரமும் சரி என்று தலையை ஆட்டினார். டீவியை போடு பார்க்கலாம் என்றார். அவரது மனைவி சும்மா இருங்க அதுல ஏதாவது சொல்வான். அதை பார்த்து நீங்க பயப்படுவீங்க..மயங்குவீங்க.. வேண்டாம் விடுங்க என்றார்
.
கண்ணாயிரத்துக்கு தான் பஞ்சகல்யாணி கழுதையை மீட்டதை டிவியில் சொல்வார்கள் என்ற நப்பாசைதான். அதனால் மனைவியிடம்.. நான் ஒண்ணும் இப்போ பயப்படுவதில்லை.. எதுவானாலும் நான் பாத்துக்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் சொல்லி இருக்கார். தெரியுமா.. நான் இப்போ சாதாரண ஆள் இல்லை. போலீசுக்கு தகவல் சொல்பவர். நாட்டில் நடக்கிற நாலு விசயங்களையும் நான் தெரிஞ்சுக்கணும்.. புரிஞ்சுதா.. தைரியமா டீவியை போடு என்றார் கண்ணாயிரம்.
உடனே அவரது மனைவி.. ம்.. நீங்க.. பயப்படமாட்டீங்கன்னா டீவியை போடுறேன் என்று. சுவிட்ச் சை ஆன் செய்தார்.
டிவியில் முக்கிய செய்தி வாசிக்கப்பட்டது. புதுவையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டிருந்த மர்ம வாலிபரை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வாலிபர் டிப்டாப்பாக உடை அணிந்திருப்பார். வெளிதோற்றத்துக்கு சிரித்து பழகுபவர்போல் தோன்றும். ஆனால் கொடூரமானவன். தன்னைபற்றி போலீசுக்கு யார் தகவல் சொன்னாலும் விடமாட்டான். கழுத்தை துண்டித்து கழுகளுக்கு இரையாக போட்டுவிட்டுதப்பி ஓடிவிடுவானாம். இது வரை இரண்டு பேர் தலையை துண்டித்து கழுகளுக்கு வீசி உள்ளான். தலையில்லா முண்டத்தை கைப்பற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சைக்கோ கொலைகாரனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இத்துடன் செய்தி முடிவடைந்தது. என்று செய்தி ஒளிபரப்பப்பட்டது.
கண்ணாயிரம் தன் மனைவியிடம் சரி, சரி, டீவியை ஆப் பண்ணு.. சும்மா பீதியை கிளப்புறாங்க.. என்றார். அவரது மனைவி டிவியை ஆப் செய்தார்.செய்தியை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு உதறல் எடுத்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை ஆனால் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
என்ன அநியாயம்… போலீசுக்கு தகவல் சொன்னால் தலையை துண்டாக்கிப்புடுவானாம். அப்புறம்பரிசு தொகையை யாருக்கு குடுப்பாங்க.. என்று கேட்டார். அவர் மனைவி, ஏங்க அதை பத்தி உங்களுக்கு ஏன் கவலை.. பேசாம சாப்பிட்டுவிட்டு படுங்க.. என்றார். கண்ணாயிரமும் சரி நமக்கு எதுக்கு வம்பு.. இன்ஸ்பெக்டர் கேட்டா சரியான தகவல் கிடைக்கல என்று சொல்லிப்புட வேண்டியதுதான். கழுத்து முக்கியமுல்ல என்றார் கண்ணாயிரம். ஆனாலும் அவர் மனம் திக், திக் என்று அடித்துக் கொண்டது. சாப்பிட மனம் இல்லை. அவர் மனைவி சாப்பிடுங்க என்றார். கண்ணாயிரம் என்ன சாப்பிட்டு என்ன பயன் என்று பிதற்றினார்.
ஏங்க உங்களுக்கு பிடித்த மீன் குழம்பு வச்சிருக்கேன். வாங்க என்றார் அவரதுமனைவி. கண்ணாயிரம் தலையுள்ள மீனா, தலையில்லா மீனா என்று கேட்டார். ஏங்க உங்களுக்கு என்ன ஆச்சு ஒருமாதிரி புலம்புறீங்க.. அய்யோ என்று புலம்ப தொடங்கினார். ஏய்… ஏய் அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சாப்பாடு போடு சாப்பிடுகிறேன் என்றார் அவசரமாக.
உடனே அவரது மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார்.கண்ணாயிரம் கண்ணை மூடிக்கிட்டு சாப்பிட்டு முடித்தார்.
சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மனைவியிடம்.. இரவு யார் கதவைதட்டினாலும் திறக்காத.. பொல்லாத பசங்க உள்ள ஊரு என்று சொல்லி விட்டு படுத்துகொண்டார். ஆனால் தூக்கம் வரவில்லை. என்ன செய்யிறது. கழுதையை தேடி காடு மேடாக நடந்தது இப்பத்தான் கால்வலித்தது. என்ன இப்படி கால் வலிக்கு என்று நினைத்தபடி இடது கால் பாதத்தை பார்த்தார். முள் கிழித்து ரத்தம் கசிந்திருந்தது. ஆமா.. நாமசெருப்பு போடாம போனதால் வந்த வினை. நாம்தான் செருப்பு போடுறதில்லைன்னு சபதம் எடுத்திருக்கோம்…செருப்பு காணாமல் போனால் ஏற்படுகிற அவஸ்தையைவிட காலில் சின்ன காயம் ஏற்படுத்தும் வலி பெரிய வலி இல்லை என்று நினைத்து கொண்டார்.
சிறிது நேரத்தில் அப்படியே தூங்கிவிட்டார். அவரது மனைவியும் சாப்பிட்டுவிட்டு யோசித்தார். பின்னர் கதவை நன்றாக பூட்டிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தார்.தூங்கிவிட்டார்.
இரவு 12 மணி..புதுவையில் கள்ள நோட்டை மாற்றிய டிப்டாப் வாலிபர் கண்களில் தீப்பொறி பறக்க கையில் கத்தியுடன் கண்ணாயிரம் வீட்டை நோக்கி வந்தான். கள்ள சாவி போட்டு கதவை மெல்ல திறந்தான். ஷூவை வெளியே கழற்றிபோட்டான். முகமூடி அணிந்தான்.பின்னர் செல்போன் வெளிச்சத்தில் கண்ணாயிரத்தை தேடி வீட்டுக்குள் நடந்தான். கையில் கத்தி பளபளத்தது.கண்ணாயிரம் கழுத்தை குறிவைத்து. குனிந்தான். அவர்போர்வையை இழுத்து போர்த்திகொண்டார். டிப்டாப் வாலிபர் மெல்ல கண்ணாயிரம் மூடியிருந்த போர்வையை விலக்கினான் கண்ணாயிரம் கழுத்து தெரிந்தது. டிப்டாப் வாலிபர் ம்.. என்னையா போலீசில் காட்டிகொடுக்க பார்க்கிற என்று கத்தியால் கண்ணாயிரத்தின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல அறுத்தான்..
பின்னர் தலையை ஒருகையிலும் மறுகையில் கூர்மையான அரிவாளையும் ஏந்தியபடி வெளியே சென்றான். ரத்தம் தலையில் இருந்தும் உடலில் இருந்தும் வடிந்து கொண்டே இருந்தது.
அப்போது சுவர் கடிகாரம் பனிரெண்டு ஆனதை குறிக்கும் வகையில் டாண், டாண் என்று அடிக்கதொடங்கியது.
அந்த சத்தம் கேட்டு கண்ணாயிரம் திடுக்கிட்டு எழுந்து அய்யோ என் கழுத்து, என் கழுத்து என்று கத்தினார். அவர் மனைவி என்ன ஆச்சு, என்று பதறிபடிமின் விளக்கை போட்டார். கண்ணாயிரம் தன் கழுத்தை பிடித்தபடி என் கழுத்தை அறுத்திட்டான்.. அதோ தலைய கொண்டுபோறான்னு என்று கத்தினார்.
அவரது மனைவி ஏன்இப்படி கத்துறீங்க…உங்க கழுத்து நல்லாதான் இருக்கு என்றார்.
அப்படியா.. இல்லை என் கழுத்து என்று உளறினார். உடனே அவரது மனைவி முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துவந்து பாருங்க… பாருங்க.. உங்க கழுத்து நல்லாதான இருக்கு. வீணா சத்தம் போட்டு பயமுறுத்துறீங்க.. ஏதாவது கெட்ட கனவு கண்டிங்களாஎன்று கேட்டார். கண்ணாயிரம் கண்ணாடியில் தன் முகத்தை நன்றாக பார்த்தார். கழுத்தை தடவி பார்த்துக்கொண்டார். கழுத்து நன்றாகவே இருந்தது. கதவை பார்த்தார் பூட்டிக்கிடந்தது.
ச்சே. நம்மதான் கனவு கண்டிருக்கோம்.. கனவுலேயும் கழுத்து என்ன வலிவலிக்குது…. இடத்தை மாற்றிபடுக்கணும்… இந்த இடம் சரி இல்லை… ஆமா என்று முணுமுணுத்தார்.
அவரது மனைவி கனவுகானாம பேசாம படுங்க என்று அதட்டினார். கண்ணாயிரம் படுக்கும் இடத்தை மாற்றினார். ஜன்னல் பக்கத்தில் படுத்தா ஜன்னல்கதவை திறந்து கழுத்தை அறுத்திடக்கூடாது என்று நினைத்தார். வீட்டில் நடுப்பகுதியில் பாயைவிரித்து படுத்தார். ஒரு துண்டைஎடுத்து கழுத்தில் நன்றாக சுற்றிக்கொண்டார். இனி எப்படி அறுக்கமுடியும் என்று தன்னைத்தானே தைரியபடுத்திக்கொண்டார். அவர் மனைவி சரி படுங்க என்று கூறியபடி விளக்கை அணைத்தார். கண்ணாயிரத்துக்கு தூக்கம்வரவில்லை. படுக்கையில் உருண்டுகொண்டே இருந்தார்.
அந்த நேரத்தில் வெளியில் நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. என்ன இது இன்னைக்கு எல்லாமே நமக்கு எதிராக இருக்கு. நாய் ஏன் இப்படி ஊளையிடுது. நாய் ஊளையி்ட்டா அந்த பகுதில சாவு விழுமாமே… ஐயோ…. நமக்குத்தான் கெட்ட நேரமாச்சே.. என்ன நடக்குமோ என்ற பயந்தார், கண்ணாயிரம்.
யாரோ வாராங்க அதான் நாய் கத்துது என்று நினைத்தார்.
அதெல்லாம் இருக்காது.. சாப்பாடு போட்டிருக்க மாட்டாங்க.. அதனால்தான் அது குரைக்குது என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அந்த நாயின் குரல் வீட்டின் அருகே கேட்டது. பயங்கரமாக ஊளையிட்டது.
என்ன நாய் சத்தம் வேறமாதிரி கேட்குது. யாரோ வராங்க போலிருக்கு.. இந்த நேரத்திலே யார் வருவா ஒண்ணும் புரியலையே. ஒரு வேள எமனா இருக்குமோ…. கண்ணாயிரம் மனதுக்குள் பயம் ஏற்பட்டது.
அடுத்து அவர் சுதாரிப்பதற்குள் குடு, குடு, குடு கொடக், கொடக் ஒரு ஆபத்து வருது.
இந்த வீட்டு ஆம்பளைக்கு ஒரு ஆபத்து வருது, பரிகாரம் செய்யணும், பரிகாரம் செய்யணும். இல்லன்னா இந்த வீட்டு கொம்பன் உயிருக்கு ஆபத்து என்று கோடங்கி குறி சொன்னான்.
கண்ணாயிரம் மெல்ல பக்கத்து வீட்டுக்காரனுக்கு சொல்லுறான். நாமபயப்படக்கூடாது என்று நினைத்தார். சத்தம் கேட்டு அவரது மனைவி எழுந்து மின் விளக்கை போட்டார். ஏங்க குடு, குடுப்பைகாரன் நம்ம வீட்டு முன்புதான் நின்னு சொல்லுறான் கேட்டேளா என்றார்.
கண்ணாயிரம் பதட்டத்துடன் அப்படி எல்லாம் இல்லை. என் பெயர் கண்ணாயிரம். ஆமா அவன் இந்த வீட்டு கொம்பன் அப்படிதானே சொன்னான்.. கொம்பன்னா யாருஎன்று அப்பாவியாக கேட்டார். அவர் மனைவி கோபத்துடன் ஏங்க கொம்பன்னா நீங்க தான். உங்களைத்தான் சொல்லுறான். அடுத்து என்ன சொல்லுறான் கவனமாக கேளுங்க என்றார். குடு, குடுப்பைகாரன் குரலை உயர்த்தி கண்ணு பெயருடையவர் கவனமாக இருக்கணும். ரொம்ப கவனமாக இருக்கணும்.. குடு, குடு, குடு…. என்று கூறினான். கண்ணாயிரம் மனைவி ஏங்க உங்களைத்தான் சொல்லுறான். நீங்க கவனிக்கவில்லையா என்று கண்கலங்கியபடிகேட்டார். கண்ணாயிரம்… ம் இதையெல்லாம் நம்பாதே என்றார். அவர் மனைவி கேட்கவில்லை. ஏங்க பரிகாரம் செய்யணுமுன்னு வேற சொல்றானே நான் என்ன செய்வேன் என்று அழத்தொடங்கினார்.
குடு, குடுப்பைகாரன் வந்தவேலைமுடிந்ததும் அடுத்ததெருவுக்கு நடையை கட்டினான். கண்ணாயிரம் மனைவியை சமாதானப்படுத்த முயன்றார். அவர் கேட்கவில்லை. நீங்க சும்மா இருங்க.. காலையில் நம்ம ஊர்ல உள்ள கோடாங்கிகிட்ட பரிகாரம் என்ன என்று கேட்கணும். அப்பதான் நிம்மதி என்றார். கண்ணாயிரத்துக்கு தலை சுற்றியது. கோடங்கியா..அவன்….
என்ன சொல்லப்போறானோ தெரியலையே. என்ன எல்லா பிரச்சினையும் நம்மை சுற்றியே வருதே என்ன செய்யலாம் என்று நினைத்தார். அவருக்கு தூக்கமே வரவில்லை. அவர் மனைவி விளக்கை அணைத்தார். ஏங்க…தைரியமா படுங்க காலையில் பாத்துக்கலாம் என்றார். படுத்து தூங்கினார். கண்ணாயிரம் விடிய, விடிய தூங்கவே இல்லை.

  • வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.