கழுதையை மீட்ட கண்ணாயிரம்… நகைச்சுவை சிறுகதை
1 min read
Kazuthaiyai meeta kannayiram / short story by thabasukumar
26.6.2021
பஞ்சகல்யாணி போர்டில் உள்ள ஆண் கழுதை படத்தை பார்த்து கண்ணாயிரம் வீட்டு முன்பு பெண்கழுதை தர்ணா செய்தது. அந்த போர்டில் உள்ள ஆண் கழுதையை காணவில்லை என்று சலவை தொழிலாளி போலீஸ்காரரிடம் புகார் செய்தார்.
பார்ட்டி விற்பனையான இடத்துக்கு கண்ணாயிரம், போலீஸ்கார் மற்றும் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்ட பெண்கழுதை, சலவை தொழிலாளி ஆகியோர் சென்று பார்த்தனர். அங்கே யாரையும் காணவில்லை. உடனே கண்ணாயிரத்தை பார்த்து கண்ணாயிரம் பஞ்சகல்யாணி கழுதையை கண்டுபிடித்து கொடுக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது. நாங்க அதை தேடி அலைய முடியாது. நாங்க கள்ள நோட்டு மர்ம வாலிபரை பிடிக்க வேண்டிய வேலை இருக்கு.. புரியுதா கண்ணாயிரம் என்றார் போலீஸ்காரர்.
கண்ணாயிரம் தலையை ஆட்டினார்.போலீஸ்காரரை பார்த்து சார், அந்த பஞ்சகல்யாணி போர்டை கொடுத்தீங்கன்னா அந்த கழுதையை கண்டுபிடித்து கொண்டு வர உதவியாக இருக்கும் என்றார்.
சரி, சரி, இந்தா போர்டை வைச்சுக்க. அந்த பஞ்சகல்யாணி கழுதையை கண்டுபிடிக்கும் வரை இந்த போர்டை உன் வீட்டு முன் மாட்டக்கூடாது. என்றார்.
கண்ணாயிரமும் சரி என்று சொல்லி அந்த போர்டை கையில் வாங்கினார். கண்ணாயிரம் இந்த காட்டில் போய் பஞ்ச கல்யாணி கழுதையை எல்லோரும் தேடுங்க என்று போலீஸ்காரர் கூறினார். கண்ணாயிரம் சரி சார் என்றார். பின்னர் போலீஸ்காரர் அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து கண்ணாயிரம் தலைமையில் சலவை தொழிலாளி மற்றும் வாலிபர்கள் பெண்கழுதையுடன் புதுவையில் காட்டுப்பகுதியில் பஞ்சகல்யாணி கழுதையை தேடி புறப்பட்டார்கள். முட்கள் நிறைந்த காட்டில் ஆளுக்கு ஒருபகுதியாக சென்று தேடினர். அந்த பகுதியில் நின்ற கழுதைகளின் காதில் செம்பு வளையம் மாட்டியிருக்கிறதா என்று பரிசோதித்தார்கள். ஒன்றும் சிக்கவில்லை. காடு மேடாக தேடினர்.
மனிதனை காணவில்லை என்றால் பெயர் சொல்லி கூப்பிடலாம். கழுதையை எப்படி கூப்பிடலாம் என்று கண்ணாயிரம் யோசித்தார். பஞ்சகல்யாணி கழுதை என்று கூப்பிடலாமா என்று எண்ணினார். உடனே பஞ்சகல்யாணி என்று சத்தம் போட்டு கூப்பிட்டார். அது மலை பகுதி என்பதால் பஞ்சகல்யாணி, பஞ்சகல்யாணி, என்று எதிரொலித்தது. ஆனால் கழுதை சத்தம் கேட்கவில்லை.
கண்ணாயிரம் என்ன செய்வது யோசித்தார். அப்போது பெண் கழுதை அவர் வைத்திருந்த பஞ்சகல்யாணி போர்டில் உள்ள ஆண்கழுதையின் முகத்தையே பார்த்தது. பின்னர் கண்ணாயிரத்தின் கையிலிருந்த போர்டை கடித்து இழுத்தது. கண்ணாயிரம் தடுத்தார். அது கண்ணாயிரத்தை கடிக்க வந்தது. உடனே கண்ணாயிரம் அந்த போர்டால் பெண்கழுதையை விரட்டினார். அது கழுதையின் முகத்தில் பட்டது.
அது வலி தாங்காமல் காள், காள் என்று கத்தியது. அப்போது சிறிது தூரத்தில் மற்றொரு கழுத்தையும் அதே போல் கத்தியது. அந்த குரலை கேட்டதும் பெண்கழுதை உற்சாகமானது. அது அன்பு கலந்த வேறு குரலில் கத்தியது. மறு முனையிலிருந்து அதே போல் ஒரு குரல் கேட்டது. அவ்வளவுதான் அந்த குரல் வந்த திசையை நோக்கி பெண்கழுதை நாலுகால்பாய்ச்சலில் ஓடியது. அதன் பின்னால் மற்றவர்களும் ஓடினார்கள்.
ஒரு பாழடைந்த பங்களா அருகில் போய் பெண்கழுதை நின்றது. அந்த பங்களாவை சுற்றி, சுற்றி வந்தது. மீண்டும் அன்பும் ஏக்கமும் கலந்த குரலில் பெண்கழுதை கண்ணீர் விட்டபடி கத்தியது.
அப்போது. பங்களாவுக்குள்ளிருந்து மற்றொரு குரல் கேட்டது. அந்த பங்களாவின் முன்பக்க கதவு பூட்டிக்கிடந்தது. பெண்கழுதை அந்த கதவை முட்டி திறக்க முயன்றது. அது முடியவில்லை என்றதும் வேகமாக கத்தியது.
இதையடுத்து உள்ளே இருந்து மற்றொரு கழுதையின் குரலும் கேட்டது. உடனே சலவை தொழிலாளி உற்சாகமாக உள்ளே கத்துறது என்னுடைய ஆண் கழுதை தான். யாரோ உள்ளே அடைச்சி வச்சிருக்காங்க… என்றார்.
அப்படியா… யார் இப்படி அடைச்சு வைத்தது. இப்போது என்ன பண்ணலாம் என்றார் கண்ணாயிரம். உடன் வந்த வாலிபர்கள், கண்ணாயிரம் அண்ணே நீங்க கவலைப்படாதீங்க.. கதவை உடைத்து உள்ளே போயிருவோம் என்றனர். அதற்கு கண்ணாயிரம் பயத்துடன் பங்களாவுக்குள்ளே வேறு என்னவெல்லாம் இருக்குதோ தெரியலை. எல்லோரும் கையில் ஒரு கம்பை எடுத்துவைச்சுக்கோங்க… என்றார். எல்லோரும் உஷாரானார்கள். கையில் கம்பு மற்றும் தடியுடன் தாக்குதலுக்கு தயாராக நின்றார்கள்.
ஒரு வாலிபர் கதவின் பூட்டை கல்லால் ஓங்கி அடித்தார். அந்த சத்தம் பலமாக கேட்டது. அந்த சத்தம் கேட்டு முள்புதருக்குள் மறைந்திருந்த இரண்டு முரடர்கள் கையில் கத்தியுடன் பாழடைந்த பங்களாவை நோக்கி வந்தனர். இதை அறியாமல் கதவின் பூட்டை வாலிபர் அடித்து உடைத்து கழற்றினார். பின்னர் கதவை தள்ளிக்கொண்டு அனைவரும் உள்ளே சென்றார்கள். பெண்கழுதை கனைத்து கொண்டு உள்ளே சென்றது. பங்களாவின் பின் பக்கத்தில் இருந்து ஆண்கழுதை கத்தும் குரல் வந்தது. உடனே அந்தபகுதிக்கு ஓடினார்கள். அங்கே இரும்பு சங்கிலியால் ஆண்கழுதை கட்டிப்போடப்பட்டு இருந்தது. பெண்கழுதை ஓடிப் போய் ஆண்கழுதையை முத்தமிட்டுமகிழ்ந்தன. ஒன்றையொன்று செல்லமாக கடித்து அன்பை வெளிப்படுத்தின. அதன் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி கண்கள் கசிந்தது. ஆண் கழுதையின் காதில் செம்பு வளையம் கிடக்கிறதா என்று பார்த்தார். வளையம் கிடந்தது.
அப்பாட… தப்பிச்சோம் என்று கண்ணாயிரம் நினைத்தார். சலவை தொழிலாளி., இது ராசியான கழுதை இது காணாம போனதிலிருந்து தூக்கமே இல்லை. இப்பதான் மனசுக்கு சந்தேகமாக இருக்கு என்றார். ஆண் கழுதையின் காலில் மாட்டியிருந்த இரும்புசங்கிலி பூட்டை வாலிபர்கள் அகற்றினார்கள். விடுதலையான மகிழ்ச்சியில் ஆண்கழுதை உற்சாக குரல் கொடுத்தது. பெண்கழுதை அதன் அருகில் சென்று பாசத்துடன் பார்த்தது. பின்னர் கழுதைகளுடன் அனைவரும் பாழடைந்த பங்களாவை விட்டு வெளியே வந்தனர்.
அப்போது யாருடா கழுதையை மீட்டுட்டு போறது என்று இரண்டு முரடர்கள் கத்தியுடன் பாய்ந்தனர். அவர்களை வாலிபர்கள் கம்பால் தாக்கினர். இருதரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கண்ணாயிரம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். அப்போது ஒருமுரடன் கண்ணாயிரத்தை சுற்றிவளைத்து பிடித்து கொண்டு, பஞ்சகல்யாணி கழுதையை விடலைன்னா கண்ணாயிரத்தின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினான்.
வாலிபர்கள் திணறினர். முரடன் பஞ்சகல்யாணி கழுதையை மடக்கி கட்டிப்போட்டான். அந்த கழுதையின் கழுத்தில் கைவைத்து அழுத்தினான்.அதைபார்த்ததும் பெண்கழுதை ஆத்திரம் அடைந்தது.
அது நைசாக முரடன் பின்பக்கத்தில் சென்றுவேகமாக கீழே முட்டி தள்ளியது. முரடன் கீழே விழுந்தான். அவன் கையிலிருந்த கத்தி தூரத்தில் போய் விழுந்தது. முரடன் எழுந்து தாக்க முயன்றபோது கழுதை அவனை உதைத்து. அவன் அலறினான். அப்போது மற்ற வாலிபர்கள் அந்த முரடனைமடக்கி துண்டால் கட்டினார்கள். இதைப்பார்த்த மற்றொரு முரடன் அடிதாங்காமல் தப்பி ஓடினான். அவனையும் மடக்கிப்பிடித்து கைகளை துண்டால் கட்டினர்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க நினைத்தார்கள். அங்கிருந்து கண்ணாயிரம் தலைமையில் புறப்பட்டார்கள். பஞ்சகல்யாணி ஆண்கழுதை காலில் இரும்புசங்கிலியால் கட்டியிருந்த காயம் இருந்ததால் மெல்ல நடந்தது. பெண்கழுதை அதன் அருகே அன்போடுஒட்டி உரசியபடி வந்தது. காடு, மேடு கடந்து நடந்து வந்தனர். வழியில் ஓரு ஓடைவந்தது.இரண்டு கழுதைகள் இறங்கி தண்ணீர் குடித்தன.
முரடர்கள் எங்களை விட்டு விடுங்கள் என்றார்கள். யாரும் கேட்கவில்லை. கண்ணாயிரம் பஞ்சகல்யாணி போர்டை கையில் வைத்து அசைத்தபடி நடந்து வந்தார். சலவைத்தொழிலாளி இரண்டு கழுதைகளையும் பத்திரமாக ஓட்டிவந்தார். ஒருமணி நேரம் கடந்து அனைவரும் காட்டை கடந்து ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
உடனே வாலிபர்கள், கழுதையை மீட்ட அண்ணன் கண்ணாயிரம் வாழ்க என்று கோஷமிட்டனர். கண்ணாயிரம். டேய், வாயை பாத்தீங்களா என்று அதட்டினார். அதைபார்த்து கழுதைகளின் மகிழ்ச்சியாக கத்தின. இதைபார்த்து எல்லோரும் சிரித்தார்கள்
- வே. தபசுக்குமார். புதுவை