April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பெண்ணடிமை பற்றி அதிவீரராம பாண்டியனும் பாரதியும்/முத்துமணி

1 min read

Pennadimai by Athiveerarama Pandian and Bharathi./ Muthumani

1.5.2021

என்னிடம் பலர் தொடர்பு கொண்டு ஐயம் தீர கேள்வி கேட்பார்கள்.
பொதுவாக ஐயம் ஒன்றை எழுப்பி விளக்கம் கேட்பதில் குற்றம் ஒன்றும் இல்லை.
‘கேள்வி முயல்’ என்றாள் நம் பாட்டி ஔவை. கேட்கக் கேட்கத்தான் நம்முடைய அறிவாயுதம் கூராகும். அறியாமை இருள் அகல அகலத்தான் அறிவொளி பரவும்.

அறிவு மூவகைப்படும். முதலாவது முறையான கல்வி கற்பதால் கிடைக்கும் அறிவு. அது கல்வியறிவு. அடுத்தது கற்றாலும், கற்கும் வாய்ப்பினை இழந்தாலும் கற்றவர் சொல்லைக் கேட்கும்போது கிடைக்கும் அறிவு. அது கேள்வியறிவு. கற்றிலன் ஆயினும் கேட்க என்றார் ஐயன் வள்ளுவர். கற்கும் வாய்ப்பு இல்லையா? அப்படியானால் கற்றவன் சொல்வதைக் கேள். அது நீ தடுமாறி வழுக்கி விழும் இடத்தில் ஊன்றுகோல் போல் நின்று உன்னைக் காக்கும்.
மூன்றாவது பட்டறிவு அதாவது அனுபவ அறிவு. ஒருவன் கற்கவேண்டிய அனைத்தையும் கேட்டும் அறிய முடியாது. படித்தும் தீர்க்க முடியாது. சிலவற்றை பட்டுத்தான் அறிந்து கொள்ள வேண்டும். அந்த அனுபவ அறிவு தான் பட்டறிவு.

“கல்வி கரையில.கற்பவர் நாள் சில. மெல்ல நினைக்கின் பிணிபல..” என்று நாலடியார் கூறுகிறது. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. முழுவதும் கற்றுணர்ந்த ஞானி என்று எவருமிலர். மெத்தப் படித்த மேதாவி என்றால் சற்றுக் கூடுதலாகப் படித்தவர் என்பதுதான் பொருள். “ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென..” என்று அவையடக்கம் பேசிய கம்பரின் வார்த்தைகள் கல்விக்கு மிகவும் பொருந்தும். கல்வி எனும் கடலை முழுதும் குடித்து முடிக்க வல்லவர் யார்? சிறிது அள்ளிக் குடிக்கலாம் அவ்வளவுதான்.
தீயைத் தொட்டவன் தீயைத் தொட்டால் சுடும் என்று தன் அனுபவத்தைச் சொல்லி வைக்கிறான் அல்லது எழுதி வைக்கிறான். தொட்டுப் பார்க்காதவன் சுடும் என்பதை அறிந்து கொள்கிறான். தீயை விட்டு விலகி இருக்கிறான்.. அகலக் கால் வைக்காதே என்று சொல்லி வைத்தவன் யார்? மிகுதியாகச் செலவு செய்து இன்னல் அனுபவித்தவன். அவ்வளவுதான். இதுதான் மூன்றாவது வகை அறிவு.

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டதால்தான் சிலை வடிக்கும் சிற்பியான சாக்ரடீஸ் சிந்தனைச் சிற்பியாக உருவெடுத்தான்.
ஆகையால் ஐயம் கேட்டு கற்றுக் கொள்வதைவிட அறிவை வளர்த்துக் கொள்ள மிகப்பெரிய வழி வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஐயம் கேட்பதால் நாம் ஒன்றும் குறைந்து போக மாட்டோம். ஐயம் கேட்பவர் அறிவு இல்லாதவர் என்றும் ஐயம் அகற்றுபவர் அறிவாளி என்றும் நினைப்பதும் மடமை.

அன்று யாரோ ஒரு அன்பர் தமிழ்க்கடல் என்று என்னை விளித்தபோது கூசிக் குனிந்து குறுகிப் போனேன். ஒன்றும் தெரியாத நம்மைப் பற்றி இப்படி ஒரு மாயத்தோற்றத்தை அவர்களே உருவாக்கிக் கொண்டனரே… என்று நினைக்கிறபோது சிரிப்பும் வந்தது. அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை உள்ளவன். ஆனால் அறிந்தவன் அல்லன்.

ஐயம் கேட்பதில் மூன்று வகை..
முதலாவது உண்மையிலேயே தான் அறியாத செய்தியை அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் காரணமாகக் கேட்பது…

இரண்டாவது இந்த ஐயத்தை எழுப்பி விட்டு, இவனைத் திண்டாடவிட்டு விடவேண்டும். என்ற உயர்ந்த! நோக்கத்தில் கேட்பது..

இவற்றுள் எந்த நோக்கத்தில் கேட்டாலும் அறிந்தவர் உடனடியாக விளக்கம் சொல்லுவார். இல்லையென்றால் அவருடைய அறிவுத் தேடல் தொடரும். நூல்களைத் தேடுவார். அமர்ந்து சிந்திப்பார். அல்லது தேடு பொறிகளின் உதவியை நாடுவர்… எப்படியாயினும் அவருடைய அறிவு முதலில் வளரும்… என்பது உண்மை…

மூன்றாவது வகை ஐயம் எழுப்புவோர் சிலர்… நோக்கம் என்னவெனில்.. அவர்கள் ஒன்றைத் தெரிந்து வைத்துக்கொண்டு நம்மிடம் அதைப்பற்றி வேறுமாதிரியாக ஒரு கேள்வியை எழுப்பி விட்டு, நாம் சொல்லும் பதிலில் இருந்து நம்மை மடக்குவதற்கு … பார்த்தாயா.. உனக்கு இது தெரியவில்லை என்று நம்மை முட்டாளாக்கித் தன்னை அறிவாளி ஆக்கிக் கொள்வது ஒருவகை திருப்தி.

என் உறவினர் ஒருவர் இந்த வகையைச் சார்ந்தவர். எதையாவது ஒன்றைப் படித்து வைத்துக்கொண்டு வருவார். தொலைபேசியில் அழைத்து என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்பார். அப்போது நான் தெரியவில்லை என்று பதில் சொன்னால் மட்டும்தான் அவர் திருப்தி அடைவார். இது முத்துமணிக்குத் தெரியவில்லை என்று என்னிடம் சொல்லவும் செய்வார்… தொடக்க காலத்தில் நான் இதைச் சரியாக உணரவில்லை. இப்போதெல்லாம் அவர் கேட்கிற கேள்வி எனக்கு நன்றாகத் தெரிந்தாலும், எனக்குத் தெரியாது என்று சொல்லி அவரிடம் தோற்று அவரை மகிழ்ச்சி படுத்தி வருகிறேன்..

இந்த மூன்றாவது வகை ஐயங்கள்தான் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கின்றன… இரண்டு நாட்களுக்கு முன் சகோதரர் ஒருவர்
கீழ்க்கண்ட கேள்வியை எனக்கு அனுப்பி வைத்தார்..

‘அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு
இல்லை.’. என்று வெற்றிவேற்கை கூறுகிறது. இதன் பொருள் என்ன?

நான் உடனடியாக, குறிப்பாக இது பெண்களைப் பற்றிப் பேசுகிறது. பெண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள் நான்கு. நான்கு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு… என்பதை வலியுறுத்துகிறது. அறிவுள்ளவளாக இருந்தால்… மேற்கண்ட நான்கு குணங்களும் அவளுக்கு இருக்கும். அவ்வாறு இல்லை என்றால் அவள் அறிவில்லாதவள்… என்பதை இப்பாடல் குறிக்கிறது என்று எழுதி அனுப்பி வைத்தேன்.

சிறிதும் தாமதமின்றி அடுத்த நிமிடம் அடுத்து ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள்..

“உங்கள் கூற்று சரியானால்,

‘நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்’ என்று பாரதி ஏன் பாடினார்?”

என மீண்டும் கேள்வி கேட்டார்.
அந்த நண்பரின் நோக்கம் எனக்குப் புரிந்து விட்டது.. இரண்டு கூற்றுகளும் முரண்பாடானவை. முதல் பாடலுக்கு நான் விளக்கம் சொன்னதால் இரண்டாவது பாடலுக்குப் பொருள் சொல்லும் போது நான் சிக்கலில் மாட்டிக் கொள்வேன்… தான் வேடிக்கை பார்க்கலாம் என்பதை போல அவரது கேள்வி அமைந்தது.
அதனால்தான் முதலில் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்குப் பதில் சொன்ன பிறகு அடுத்த கேள்வி வந்தது…

நான் உடனே அனுப்பி வைத்தேன். வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை பாடிய அதிவீரராம பாண்டியன்… பெண்ணடிமை காலத்தில் பாடிய பாடல். அதனால் அச்சமும் நாணமும் மடமும் பயிர்ப்பு இல்லாதவளைப் பெண் என்று அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் பாடியது பழமை மாறாத பத்தாம் பசலி. கட்டுப்பெட்டியான பெண். வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த அடிமை வாழ்வு வாழ்ந்த பெண் அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் மட்டுமே தன் தொழிலாகக கொண்டிருந்த பெண். அவளுக்கு அடிப்படைத் தகுதிகள் மேற்சொன்ன நான்கு குணங்களும் தானே… அவற்றை கற்பித்தால் தானே ஆணினம் அவளை அடிமையாக்கி ஆட்சி செய்ய முடியும்… நான்கு விலங்குகளை விட்டு வெளியே வந்து விட்டால்…அவளும் ஆணுக்குச் சரிநிகர் சமானமாய் ஆகிவிடுவாளே…

ஆனால் முண்டாசுக் கவிஞன் பாரதி தையலை உயர்வு செய் என்னும் நோக்கில் பாடியது பழமையைச் சுட்டெரித்துச் சாம்பலாக்கிய புதுமைப்பெண்… பெண்ணடிமை சமுதாயத்துக்கு எதிராக அவன் படைத்த புதுமைப் பெண்.. எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று கும்மியடித்த புதுமைப்பெண். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட புதுமைப்பெண் . திறம்பாத செம்மை மாதர். அதனால்தான் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத ஞான நெறிகளைக் கொண்டவளாக அவளைப் படைத்தார் பாரதி. அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என அவற்றையே உடைமைகளாகக் கொண்டிருக்கும் வரை. உனக்கு உயர்வில்லை.. உன் காலில் கட்டப்பட்ட தளைகளவை. என்றுணர். அவற்றை அகற்றித் தூக்கி எறி..‌ நிமிர்ந்து நட நேர்கொண்டு நில்….. என்று சொல்லும் இடத்தில் அச்சம் நாணம் மடம் என்பவையெல்லாம் நாய்களுக்குத்தான் வேண்டும்.. என்று மனிதனுக்கு அடிமை செய்து வாழும் நாயை அடிமைத் தனத்தின் குறியீடாகப் பாரதி இப்பாடலில் பயன்படுத்திக்கொண்டார்.
இன்னொரு பாடலில் நாம் அடிமைப்பட்டு வாழ்வதை எதிர்த்துப் பேசும் போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று பாரதி பேசவான். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொள்வாரடி… என்று வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் இருபாலாரையும் கண்டிக்காமல் விட்டதில்லை பாரதி…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.