திருச்சியைச் சேர்ந்த பழங்குடியின நல ஆர்வலர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்
1 min read
Stan Swamy, a tribal welfare activist from Trichy, dies
5.7.2021
தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின நல ஆர்வலர் பாதிரியானர் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்தார்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி
தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. சமூக செயற்பாட்டாளரான இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்தார். 84 வயதான இவர், மகாராஷ்டிரா பீமா- கோரேகாவ் வன்முறை தொடர்பான எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டில் உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொரோனா
உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், இவருக்கான ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. பார்கின்சன் நோய் பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த இவருக்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இடையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. நேற்று முன்தினம் முதல் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மரணம்
ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் உயிரிழந்தார். இத்தகவலை அவரது வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்தனர்.
மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்டு, ஸ்டேன் சுவாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில், அவர் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு
நுரையீரல் தொற்று, பார்கின்சன் நோய் மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்கள் தான் ஸ்டேன் சுவாமியின் இறப்புக்கு காரணம் என மருத்துவமனை இயக்குனர் டாக்டர் இயன் டிசவுசா தெரிவித்தார்.
தலோஜா சிறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும், அவர்கள் பாதிரியாருக்கு உடனடி மருத்துவ சிகிச்சையை வழங்கத் தவறிவிட்டதாகவும், பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.