காஷ்மீரில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் சுட்டதில் 2 ஆசிரியர்கள் பலி
1 min read
Two teachers shot dead by terrorists inside school in Kashmir
7.10.2021
காஷ்மீரில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகள்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்மு மாவட்டத்தில் இட்ஹா சங்கம் என்ற பகுதியில் அரசுப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நேற்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, அந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
சாவு
இதையடுத்து, பிற ஆசிரியர்கள் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட 2 ஆசிரியர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ஆசிரியர்களும் சுவேந்தர் கவுர் மற்றும் தீபக் என்பது தெரியவந்துள்ளது. ஆசிரியர்கள் இருவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் இந்து, இஸ்லாமிய ஆசிரியர்களை பிரித்துள்ளனர். இந்த 2 ஆசிரியர்களும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததையடுத்து அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலாக குறிப்பிட்ட மக்களை குறிவைத்து தாக்குதல்களை பயங்கரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.