May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

பொண்ணு பாக்கப்போறோம்/ சிறுகதை/ கடையம் பாலன்

1 min read

Ponnu Paakka poorom/ Short story by Kadayam Balan

8/10/2021
“என்னங்க கோவத்துல இருக்கமாதி தெரியுது..”
“ஆமா… ஒம்புள்ள செய்ற காரியத்துக்கு… நாண்டுக்கிட்டு நிக்கலாம்.”
“நானும் சொல்லி பாத்துட்டேங்க.. அப்பாவுக்கு இது புடிக்கல.. அவியளுக்காகவாவது வேண்டாங் கண்ணுன்னு சொல்லிப் பாத்துட்டேன். கேட்க மாட்டேங்கிறான்”
“நம்ம குடும்ப கவுரவம் என்ன? அந்தஸ்து என்ன? இவனை செய்யப்போற கருமாதிக்கு ஊரே என்ன காரித்துப்பும்.”
“நானும் உங்கப்பா வருத்தப்படுதாவன்னு சொன்னேன். அதுக்கு அவன் ஊரே என்ன புகழும்ன்னு சொல்றாங்க.”
அண்ணாமலை முறைத்துப் பார்த்ததில் மனைவி உலகம்மாள் மேலும் எதுவும் பேசாமல் நின்றாள்.
“நான் தோட்டத்துப்பக்கம் போயிட்டு வர்றேன்.”
வெளியே வந்தவர் உறங்கிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை உச்சிப்பிட்டு புறப்பட்டார்.
அப்பா வெளியே சென்றதைப் பார்த்து மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
“அம்மா… அப்பா என்ன சொல்றாரு?”
“என்னாடா அவரு… இவருன்னு மருவாத இல்லாம சொல்ற.”
“ஓகோ… புருஷன சொன்னதும் பொண்டாட்டிக்கி கோவம் பொத்துக்கிட்டு வருதோ.. சரிம்மா… அவிய.. என்ன சொன்னாவ?”
“டேய் கணேசா.. உங்கப்பா நீ கேட்டதை எல்லாம் வாங்கி தந்துருக்காவ… இத ஒண்ணத்தானே வேண்டாங்கிறாவ.. அப்பா சொல்பேச்சு கேளுடா”
“அம்மா நான் என் பிரண்டஸ் எல்லாரும் நெல்லைக்கு கிளம்பறோம். அழுது வடிஞ்சிக்கிட்டு இருக்காத.. சிரிச்ச முகமாக இரு.”
“திருணோலிக்கா போறீங்க?”
“ஆமா… இன்னிக்கே பிக்ஸ் பண்ணிடுவோம்”
அம்மாவின் பதிலுக்கு காத்திராமல் தந்தையைப்போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே வந்தான் கணேஷ். வீட்டுக்கு கீழ்புறம் நின்ற காரில் ஏறி சட்டைப் பையில் தொங்கிக் கொண்டிருந்த கூலிங் கிளாசை எடுத்து மாட்டிக்கொண்டான். காரின் சத்தம் கேட்டு பக்கத்து சந்தில் பதுங்கி இருந்த நண்பர்கள் நாலுபேரும் அங்கே வந்தனர். அவர்களும் காருக்குள் ஐக்கியமானார்கள்.
கார் மெதுவாக நகர்ந்தது. எதிரே ஒரு பாட்டி “கணேசா” என்று கூப்பிட்டாள்.
“காரை நிறுத்தி என்னபாட்டி” என்றான் கணேஷ்.
“அப்பா வைதான்னு கவலைப்படாதே. பிறவு எல்லா சரியாயிடுவான். நீ மட்டும் நல்ல பிள்ளையப்பாருப்பா. உனக்கு சோடி பொருத்தம் நல்லா இருக்கணும்.”
“நல்ல சிவப்பா.. என்கேத்த உயரம்ன்னு சொன்னாங்க.. அதான் பாக்கப்போறோம்.”
“என் ராசா நான் மாலை வாங்கி வைப்பேன். எல்லா நல்லதா முடியுப்பா.. கவலப்படாத”
“சரி பாட்டி”
கார் ஊர் எல்லைபுறத்துக்கு வந்தது… எதிரே வந்த மாடசாமியை கண்டதும் காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.
“ஏய் மாடசாமி.. இங்க.. வா.. வர்ற பதினெட்டாம் தேதி.. பந்தல்போடணும்”
“ தம்பி எல்லாம் கேள்விபட்டேன்… அய்யா சத்தம்போடுவாவ… அதான் யோசிக்கிறேன.”
“அதெல்லாம் நான் பாத்துகிறேன். உனக்கு பணம் எல்லாம் நான் தர்றேன். நம்ம கோவில் மைதானத்திலத்தான் பந்தல். ரொம்ப ஸ்டாங்கா இருக்கணும். மழை பெஞ்சாலும், காத்தடிச்சாலும் அசயக்கூடாது என்ன?”
“சரி கணேசா… நல்லா போடுவேன் கொஞ்சம் கூட்டி தா.”
“உன் வேலைய பாத்து முடிஞ்சப்புறம் கூட்டித்தாரேன்.”
மீண்டும் கார் வேகமெடுத்தது. அடுத்து ஒரு கிராமம்… வண்டி நின்றது.
அண்ணே பரிதி அண்ணே.. உங்க மைக் செட் வேணும். வர்ற பதினெட்டாம் தேதி…
“சரி தம்பி என் சைடுல எந்தக் குறையும் இருக்காதுப்பா…”
“ம்… நம்ப சோத்துப்பட்ட வயிரவன் இருக்கானா?”
அதற்குள் காலை தென்னி தென்றி நடந்து வந்தான் தபசுபிள்ளை வைரவன்.
“டேய் வைரவா பதிநெட்டாம் தேதி சமைக்கணும்.”
“நம்ம வீட்டுலத்தானே..”
“ஏலேய் காரியத்தை கெடுத்துடாத… வடக்குத் தெருவுல இருக்கிற நாராயணன் அண்ணாச்சி வீட்டுல.. நாளைக்கு சாயங்கலாம் வா… என்னென்ன வேணும்ன்னு லிஸ்ட் தர்றேன். வீட்டுக்கு வந்துடாத.. கோவில் பின்னாடி திண்டுல உக்காந்துரு நானே அங்க வாறேன்.”
மீண்டும் கார் புறப்பட்டது. இல்லை… பறந்தது.
பேட்டையை தாண்டி நெல்லை எல்லையை அடைந்தது. அதன்பின் குடிசைப்பகுதிக்குள் கார் திரும்பியது. வயல்வெளியை ஆக்கிரமித்து முளைத்திருந்த குடிசைகளுக்கு இடையே எக்காளமிட்டு சென்றது கார். அந்த குறிப்பிட்ட குடிசை மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக காட்சி அளித்தது. கணேஷ் சென்ற கார் அந்த வீட்டின் முன்பு போய் நின்றது. ஆடம்பரத்தை பிரதிபலித்த அந்த காருக்குப் போட்டியாக அலங்காரத்தை கச்சிதமாக காட்டிக்கொண்டிருந்தது அந்தக்குடிசை.
உயரம் குறைந்த சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் புதுவெள்ளை உடைதாங்கி பளிச்சிட்டது. அதில் வரிசையாய் காவி பட்டைகள் மெருகூட்டின. சாணம் தெளிக்கப்பட்ட முற்றத்தில் கோலம். அதன் மையத்தில் சாணமேடையில் பூசணி பூ பூத்திருந்தது.
காரில் இருந்து கணேசும் அவன் நண்பர்களும் இறங்கி குடிசைக்குள் சென்றனர்.
குடிசையின் தாழ்வாரத்தில் நின்றுகொண்டிக்க.. உள் அறையில் இருந்து
“வாங்கத்தம்பி… வாங்க…” என்ற குரலோடு நடுத்தர வயது பெண் சுலோசனா வெளியே வந்தாள்.
“வணக்கம் அம்மா…”
“உட்காருங்க தம்பி”
மண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய திண்ணைதான் அவர்களுக்கு இருக்கை. அதில் பழசும், புதுசும் அல்லாத கோரைப்பாயை விரிதாள்.
“தம்பி ஏழைங்க வீடு… இப்படித்தான் இருக்கும். நீங்க.. பெரிய இடத்துப்பிள்ளயுங்க.. எங்க மதிச்சி வந்திருக்கீங்க… உக்காருங்க:
உள்ளே சென்ற அந்தப் பெண் ஒரு தாம்பூலத்தட்டில் வெற்றிலைபாக்கு, ரோஸ் நிற சுண்ணாம்பு சகிதம் கொண்டு வந்தாள்.
“அம்மா இதெல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்ல” &இது கணேசின் நண்பன்.
“தம்பி ஒரு சம்பிரதாயத்துக்குத்தான்… கலர் வாங்கிட்டு வர்றேன்.”
“கொஞ்சம் பொறுங்க பேசி முடிச்சப்புறம் குடிக்கிறோம்.”
“பொண்ண கூப்பிடுங்க பார்ப்போம்..” இதுவும் கணேஷின் நண்பன்.
“தப்பா நினைக்காதீங்க… நீங்க வருவீங்கன்னு புரோக்கர் சொன்றாரு.. எல்லாரும் ஒரே வயசுல இருக்கீங்க… பையன் யாருன்னு தெரிஞ்சக்கலாமா?”
“இதோ கணேஷ்.. இவன்தான். இவன் ஸ்மாட்டா இருக்கிறான்.. இவருக்கு பொண்ணு பொருத்தமா இருக்குமான்னு பார்க்கணும்.”
“எங்களப்பத்தி புரோக்கர் சொல்லி இருப்பாரே… உயரம். நிறம்.. ம்… போட்டோவ கூட பாத்திருப்பீங்களே..”
“எல்லாம் புடிச்சதாலத்தான் வந்திருக்கோன். இருந்தாலும் எங்க கணேஷ் சுமாரான உயரம்தான். அவருக்கு ஜோடி பொருத்தம் எப்படின்னு நேர்ல பார்க்கணும். அப்புறமாக ஊர்ல உள்ளவங்க பெரிய குறையாச் சொல்லுவாங்க”
“சரி… சரி.. பொண்ணப்பாருங்க… சாந்தி… சாந்தி.. வாம்மா”
கணேஷ் மற்றும் நண்பர்களின் கண்கள் பாதியளவு சாத்தி இருந்த கதவை நோக்கின.
நீலக்கலர் சேலையில் தலைநிறைய மல்லிகை சூட… மெல்ல கால்பார்த்து நடந்து வந்தாள் சாந்தி..
அவளை பார்த்ததும் கணேஷ் சற்று தலை கவிழ்ந்து ஓரகண்ணால் பார்த்தான்.
சாந்தி அருகில் உள்ள ஒரு ஸ்டீலில் வந்து அமர்ந்தாள்.
“டேய் கணேசா… ஏழு ஊருக்கு வாய்பேசுவ.. இங்கே என்னடா இப்படி வெக்கப்படுத… போ அவா கிட்ட நில்லு உயரம் சரியான்னு பார்ப்போம்.”
அவன் சொல்லி முடிப்பதற்குள் சாந்தி எழுந்து நின்றாள். அருகே கணேஷ் போய் நின்றான். அவனை ஒட்டி நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் சாந்திநின்றாள்.
ஜோடி பொருத்தம் கச்சிதம்..
“கணேஷ்.. உங்க அப்பாவத் தவிர எல்லாரும் பாராட்டுவாங்க”
கணேஷ் மீண்டும் தான் இருந்த இடத்திற்கு வந்தான்.
சாந்தியும் அமர்ந்தாள். அவள் பேசத் தொடங்கினாள்.
“மிஸ்டர் கணேஷ்.. இப்படி வெக்கப்பட்டா என்ன ஆகும். உங்க ஊருக்கு நான்தான் வரப்போறேன். நீங்கத்தான் எனக்கு தைரியம் கொடுக்கணும்.”
“சாந்தி நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”& இதையும் சுரேசின் நண்பன்தான் கேட்டான்
“நான் பிளஸ் டூ தான்”
“எம்பொண்ண அதுக்கு மேல படிக்கவைக்க முடியல.. ஆனா நல்லா இங்கீலிஷ் பேசுவா”
“எங்க கணேஷ் டிகிரி படிச்சிருக்கான். ஏகப்பட்ட சொத்து.. ரைஸ்மில்லும் இருக்கு… ஆமா சாந்தி உனக்கு மாடர்ன்ஸ் டிரஸ்…”
“விதவிதமாக வச்சிருக்கேன்.. எனக்கு புடவையவிட சுடி, மிடி தான் பிடிக்கும்.”
“சரி என்னிக்குன்னு சொல்லலியே…”
“அடுத்த மாதம் பதினெட்டாம் தேதி. அன்னிக்கு காலையிலேயே வந்திரணும். அப்பத்தான் எல்லாத்தையும் ஒருங்கிணைக்க முடியும்”
“சொன்னா சொன்னபடி வந்ருவோம்”
“சரி நாங்க கிளம்பறோம்” என்று சொன்ன கணேசின் நண்பன், தான் கொண்டுவந்த பேக்சில் இருந்து ஒரு நோட்டு புத்தகத்தைஎடுத்தான்.
‘அம்மா சாந்தி… இதுதான் உனக்கு பாடம். எழுதி இருக்கிறதெல்லாம் கவனமாக படிச்சி மனப்பாடம் பண்ணிக்க… சொதப்பிறக்கூடாது.”
“என்ன சார் அப்படி சொல்றீங்.. எனக்கு இது 101வது நாடகம். என் நடிப்பை மேடையில பாருங்க… அப்புறம் என்னத்தான் கூப்பிடணும்ன்னு உங்க ஊருக்காரங்க சொல்லுவாங்க”
“சரி நாங்க புறப்படறோம். இந்தாங்க அட்வான்ஸ்” என்று கூறி தாம்பூலத் தட்டில் பணத்தை வைத்தான். அதை சாந்தியின் தாயார் சுலோசனா எடுத்துக்கொண்டாள்.
“தம்பி கலரு…”
வேண்டாம் நாங்க ஓட்டலுக்கு சாப்பிடப்போறோம்.
கணேஷ் கற்பனை உலகத்தில் மிதந்தான். சாந்தியின் நினைப்பில் அல்ல… நாடக அரங்கேற்ற நினைப்பில்.
-கடையம் பாலன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.