கண்ணாயிரத்தை தேடி வந்த வெள்ளைசேவல்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram with white cock/ Story by Thabasukumar
21/11/2021
கண்ணாயிரம் பாட்டிகளுக்கு சேலை வாங்கி கொடுத்த பிரச்சினை தொடர்பாக பஞ்சாயத்து நடந்தபோது உள்ளாட்சிதேர்தலில் போட்டியிட சேலைவாங்கிகொடுத்ததாக கண்ணாயிரம் சொன்னார். உடனே மோட்டார்சைக்கிள்வாலிபர் தேர்தல்கமிஷனில் புகார்செய்வேன் என்றுமிரட்டினார். மேலும் கலியாணகார்டிலே கண்ணாயிரம் பெயர் இருந்தது தொடர்பு புகாரில் சரியான நீதி வேண்டும் என்று வாதாடினார். அவர் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என்று அவரது புகாரை அருவா அமாவாசை தள்ளுபடி செய்தார். இதனால் மோட்டார்சைக்கிள்வாலிபர் கோபம் அடைந்து நான் வேறுபஞ்சாயத்தில் பார்த்துகொள்கிறேன் என்று கோபத்தில் கலியாணகார்டை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்.
இதையடுத்து ஈட்டி ஏகாம்பரம் திடீரென்று அருவா அமாவாசையுடன் தகராறு செய்தார். பாட்டிகளுக்கு கண்ணாயிரம் ஜவுளிக்கடையில் சேலைவாங்கிகொடுத்ததற்கும் ஜவுளிக்கடைக்காரர் இரண்டுமணிநேரம் கடையை அடைத்துவிட்டுவந்ததற்கு நஷ்டஈடாக பணம் கொடுக்க வேண்டும் என்றும் அருவா அமாசை அனுமதியில்லாமல் இங்குவந்துபஞ்சாயத்து நடத்தியதற்கும் பஞ்சாயத்துக்கு ஜவுளிக்கடைகாரரை அழைத்ததற்கும் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் ஈட்டி ஏகாம்பரம் தீர்ப்பு கூறினார்.
இதை அருவா அமாவாசை ஏற்கமறுத்ததால் அவருக்கும் ஈட்டிஏகாம்பரத்துக்கும் ஏற்பட்ட மோதலின்போது நடந்த கல்வீச்சில் இருவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த அதிரடிப்படை போலீசார் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். யாருய்யா அருவா அமாவாசை, யாருய்யா ஈட்டி ஏகாம்பரம் என்று கேட்ட இன்ஸ்பெக்டர் அவர்கள் இருவரையும் பார்த்து ஏறுங்க போலீஸ் ஜீப்பில் என்று லத்தியால் ஒரு அடி கொடுத்தார். அவர்கள் அம்மாடி என்று கத்திய படி ஜீப்பில் ஏறினார்கள். உங்கள் வெப்பன்சை எங்கே என்று கேட்டார். எல்லாம் அங்கேதான் இருக்கு என்றனர். இன்ஸ்பெக்டர் அங்கு நின்ற போலீஸ்காரரைபார்த்து அந்த ஈட்டியையும் அருவா வையும் எடுத்துக்கிட்டு போலீஸ் ஸ்ரேஷனுக்கு வாங்க என்று உத்தரவிட்டார்.
ஜீப் வேகமாக பறந்தது. கண்ணாயிரம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். பூங்கொடி அவரைபார்த்து ஏங்க எங்க அப்பாவை காப்பாத்துங்க.. என்று அழுதார். கண்ணாயிரம் உடனே இதுக்குத் தான் உங்க அப்பாவை கூப்பிடாதே என்று சொன்னேன். நீதான் கேட்கலை.அவரை அழைச்சுட்டுவந்தே.. இப்ப பாரு.. எவ்வளவு பிரச்சினை என்று சத்தம் போட்டார்.
அதை கேட்ட பூங்கொடி இப்படி ஆகும்னு எனக்கு தெரியாதே.. ஆ… போலீஸ் அடியெல்லாம் அவர்தாங்கமாட்டாரு..என்றுகண்ணீர்விட்டார்.
அதைபார்த்த கண்ணாயிரம் உங்க அப்பா கல்லடியையே தாங்கிட்டாரு. போலீஸ் அடியை தாங்கமாட்டாரா என்றார். பூங்கொடி உடனே கோபமாக படுபாவிபய எவனோஒருத்தன் எங்க அப்பாமேல கல்வீசிட்டான். அவன் கையை ஒடிச்சி அடுப்பிலவைக்க என்று ஏசினார்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் ஏன்திட்டுற.. உங்க அப்பா ஒழுங்காபார்த்து நிக்கணும். அவர் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டு நின்னாருன்னா கல்படத்தான்செய்யும். என்றார்.
இல்லை. இல்லை. எவனோ ஒருத்தன் எங்க அப்பாவை குறிவைத்து கல்வீசி இருக்கான். அவனை நான் கண்டுபிடிக்காமவிடமாட்டேன் என்று சொன்னார். கண்ணாயிரம் மனதுக்குள் ஈட்டி ஏகாம்பரத்தை நோக்கி வீசிய கல் குறிதவறி அருவா அமாவாசை மேல் பட்டிச்சி. இதை பூங்கொடி கண்டுபிடிச்சுடுவாளோ என்று பயந்தார். அதனால் அதை வெளியேகாட்டிக்கொள்ளவில்லை.
பூங்கொடி நீ கோபப்படாதே.அது யாருன்னு பிறகு கண்டுபிடிப்போம்.இப்ப போலீஸ்ஸடேசனுக்கு போய் உங்க அப்பாவை பார்ப்போம் வா என்று அழைத்தார். பூங்கொடி… அப்பா.. என்று அழுதவவாறு போலீஸ்நிலையத்தை நோக்கி நடந்தார்.
கண்ணாயிரமும் அவர்பின்னால் நடக்க ஊர்மக்கள் பின்னால்திரண்டு வந்தனர். போலீஸ்நிலையத்தில் அருவா அமாவாசையிடத்திலும் ஈட்டிஏகாம்பரத்திடமும் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திகொண்டிருந்தார். அருவா அமாவாசை நடந்ததை சொல்லி க் கொண்டிருந்தார். கண்ணாயிரம் மெல்ல எட்டிப்பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரைபார்த்து என்ன கண்ணாயிரம் இது பஞ்சாயத்து என்ன கேட்டார். கண்ணாயிரம் முகத்தை கையால்துடைத்தபடி, வீட்டு பஞ்சாயத்துதான். இது தெருபஞ்சாயத்து ஆனதால் பிரச்சனைஆயிட்டு. ஈட்டி ஏகாம்பரம் வராம இருந்திருந்தா பஞ்சாயத்து சுமுகமாக முடிந்திருக்கும். அருவா அமாவாசை என் மாமனாரு.அவர்மேலே எந்த தவறும் இல்லை. அவரை விட்டுடுங்க என்று கெஞ்சும் குரலில் கேட்டார். இன்ஸ்பெக்டர் குரலை உயர்த்தியபடி, கண்ணாயிரம், உங்க மாமனாரு.அவர் ஊரைவிட்டுஊருவந்து பஞ்சாயத்துபண்ணியிருக்காரு. வெப்பன்ஸை யூஸ்பண்ணி மிரட்டியிருக்காரு. அவர் மேல மோட்டார்சைக்கிள் வாலிபர் கம்பளையிண்டு பண்ணியிருக்காரு. போலீஸ் சூப்பிரண்டு ஆபிசுல இருந்து போன்மேல் போன். லா அண்டு ஆர்டர் பிராப்ளம் ஆயிடுச்சு. அதனால நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிவிட்டது. அவரை ஜாமீனில் கூட்டிட்டுபோங்க. இனி அவர் அரிவாளை எடுத்துக்கிட்டு எங்கும் போகக் கூடாது என்று எச்சரித்தார்.
கண்ணாயிரம் சரிசார் என்று கூறிவிட்டு அருவா அமாவாசையை ஜாமீனில் அழைத்துவந்தார்.
வீட்டுக்கு வாங்க மாமா என்று கூப்பிட்டார். அருவா அமாவதசை கையெடுத்து கும்பிட்டார். மாப்பிள்ளை, வீட்டு பிரச்சனை வெளியே வராம பாத்துக்க. மகளே பூங்கொடி வீட்டு பிரச்சனையை ஊர்பஞ்சாயத்து க்கு கொண்டு வராதே. நான் வர்றேன் என்று காரில் ஏறினார். கண்ணாயிரம்.. மாமா உங்க அருவா எங்கே என்று கேட்டார். அவர் ஆளைவிடுசாமி. அதை மறந்து ஒருமணிநேரமாச்சுன்னு சொல்லிவிட்டு காரில் ஏறிசென்றார். கண்ணாயிரம் அவரையே பார்த்தபடி நின்றார்.
எல்லாம் இந்த மோட்டார்சைக்கிள்வாலிபரால் வந்தவினை. மோகினிபூஜையில் சவுக்கடி வாங்கியதால் நம்மளபாடாபடுத்துறான் என்று நினைத்து கொண்டார். ஈட்டி ஏகாம்பரம் சொன்ன தீர்ப்பு இனி அம்பேல்தான். சேலைக்கு மட்டும் ரூபாகொடுத்தாபோதும். ஆமா இந்த ஜவுளுக்கடைக்காரரு ஏன் ஈட்டிஏகாம்பரத்தை கூட்டிட்டு வரணும். அதனால்தானே இவ்வளவு பிரச்சினையும்.. என்று நினைத்தபடி நின்றார்.
பூங்கொடி மெல்ல. ஏங்க பிரச்சினைக்கு எல்லாம் நான்தான்காரணம். அந்த கவுசல்யா சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டதாலே இவ்வளவு விவகாரமும் வந்துச்சு. ஆமா, அந்த பொண்ணு கவுசல்யாவும் அவா பையனையும் எங்கே காணம் என்று கேட்டார்.
கண்ணாயிரம் சுற்றி, சுற்றிபார்த்தார். ஆமா, அவங்கள காணல. இங்கே நடந்த கலவரத்தைபார்த்ததும் துண்டை காணம்துணியைகாணமுன்னு விழுப்புரத்துக்கு ஓடிட்டாங்கபோல என்றார் கண்ணாயிரம்.
ஆமாங்க, அப்படிதான் போயிட்டாங்க போல, சரி அந்த ஈட்டி ஏகாம்பரத்தை போலீஸ் என்ன செய்வாங்க என்று கேட்டார் பூங்கொடி. அவர் ஈட்டிவைச்சிருந்தாருல்ல, ஜெயிலில்பிடிச்சு போட்டிருவாங்க. என்மேல கல்லைதூக்கிவீசினாரு. நான் விடுவேனா.பதிலுக்கு நானும் கல்லைஎடுத்துவீசினேன். உங்க அப்பா குறுக்கே வராம இருந்திருந்தா ஈட்டி ஏகாம்பரம் தலை உடைஞ்சுருக்கும் என்று சொன்னார்.
உடனே பூங்கொடி.. ஏங்க அப்படின்னா.. என் அப்பாமேல நீங்கதான் கல்வீசினீங்களா.. என்று அழுதார்.
நான்தான் உளறிட்டனா… பூங்கொடி உங்க அப்பா மேல நான் கல்வீசல. அவர்தான் குறுக்கே வந்துட்டாரு. என்று கண்ணாயிரம் சொல்லிப்பார்த்தார். பூங்கொடி கேட்காமல்.. கோபத்தில் கதவைதிறந்துகொண்டு வீட்டுக்குள் சென்றார். கண்ணாயிரம் ஆமா ஊர்பஞ்சாயத்துக்குபோட்ட மேசை, நாற்காலியை எங்கே என்று தேடினார். அது சுக்கு நூறாக உடைந்து கிடந்தது. அய்யோ உடைச்சுபுட்டாங்களே. ஒருசோடாபாட்டில் இருந்துச்சு. அதையும் காணம்.. தூக்கிட்டுபோயிட்டாங்க போல என்று சோகத்தில் வீட்டுக்குள் செல்லமுயன்றார்.
அப்போது ஒருவெள்ளசேவல்பறந்துவந்து அவர்தோளில் அமர்ந்தது. அதைபார்த்த கண்ணாயிரம் திடுக்கிட்டார்.
(தொடரும்)
-வே. தபசுக்குமார். புதுவை.