5 நாளில் 1.5 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
1 min read
1.5 crore children have been vaccinated against corona in 5 days
7.1.2022
இந்தியாவில் 5 நாட்களில் 15 முதல் 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியில் சாதனை
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவில் 150 கோடி டோஸ்களுக்கும் மேலாக தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோரில் 90 சதவீதம் பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் சிறப்பாக செயல்படுகிறது. வெறும் 5 நாட்களில் 15 முதல் 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதில், அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம், விலைமதிப்பற்ற உயிர்களை நாம் காத்திட முடியும். முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவையும் அரசாங்கம் குறைத்துள்ளது. இது குறிப்பாக நமது மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.