May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு கிடைத்த மாமூல்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram gets Casual money / comedy story By Thabasukumar

25.1.2022

பூங்கொடி நூறு ரூபாய் சேலையை எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசி சாயம்போகுமா என்று கேட்டு ரோட்டோர கடைக்காரரிடம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். சாயம் போகும் என்று கண்ணாயிரம் சொல்ல சாயம்போகாது என்று பூங்கொடி சொல்ல அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அந்த சேலையை தண்ணீரில் முக்கி சேலையின் இருமுனையையும் முறுக்கி பிழிந்தபோது சாயம் போகவில்லை. இதனால் மகிழ்ச்சி அடைந்த பூங்கொடி வேகமாக உதறி காயப்போடமுயன்றபோது…சேலையின் நடுவில் கிளிசல் ஏற்பட்டு எதிரே கண்ணாயிரம் முகம் தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த பூங்கொடி எல்லாம் உங்களாலத்தான்..நீங்க வேகமாக முறுக்கி பிழிந்ததால்தான்..சேலை கிழிஞ்சி போச்சு என்று கண்ணாயிரத்தை திட்டினார். கண்ணாயிரம்..அய்யய்யோ..நான் மெதுவாத்தான் புழிஞ்சேன்..என் மேல எந்த தப்பும் இல்ல…அந்த கடைக்காரரிடம் கொடுத்திட்டு வேறு சேலை வாங்கிக்க..என்றார். ஏங்க அதெப்படி முடியும்..புரியாம பேசுறீங்க..என்றார் பூங்கொடி.கண்ணாயிரம்..உடனே.நான் 95ரூபாய்க்கு வாங்கிய இந்தி புத்தகத்தை திருப்பி கொடுத்திட்டு இருபது ரூபாய்க்கு வேறு புத்தகம் நீ வாங்கிட்டு வரலையா.. அப்படி இந்த சேலைய கொடுத்திட்டு வேற சேலை வாங்கு என்றார்.
அதை கேட்ட பூங்கொடி, ஏங்க புரியாம பேசுறீங்க..இந்த சேலை சாயம் போகுமா என்று கடைக்காரரிடம் கேட்டபோது அவர் சாயம் போகாது என்று சொல்லி எங்கிட்ட தந்தார். சேலை சாயம் போயிருந்தா அவருக்கிட்ட கொடுத்திட்டு வேறு சேலை கேட்கலாம்.. ஆனா சேலை சாயம் போகலைய்யே என்றார்.
கண்ணாயிரம். அவரிடம்..என்ன பூங்கொடி..சேலை…நல்லா உழைக்குமா..கிழியாம இருக்குமான்னு கேட்டு வாங்கலைய்யா..போச்சு .போ..என்றார்.

பூங்கொடி,ம்..இப்படி வாங்கின அன்னைக்கே கிழிஞ்சு போச்சே..நான் என்ன செய்வேன் என்று கண்களை கசக்கினார். கண்ணாயிரம், ஆமா..ஒரு நாளிலே கிழிஞ்சு போச்சே. அவனை விடக்கூடாது..நீ போய் இந்த சேலையை வச்சிக்கிட்டு..வேற சேலை கொடுங்கன்னு கேளு..என்றார்.
பூங்கொடி..ஏங்க..பீங்கான் குத்துனது..எனக்கு கால்வலிக்குது..இப்பதான் போயிட்டு வந்தேன்..இனி என்னால் நடக்கமுடியாது என்று சொன்னார்.
இந்தி புக்கை மாத்தி வாங்க போகும்போது உனக்கு கால்வலிக்கலையா.இப்போ வலிக்குதா..சரி.சேலை வாங்கின கடை பெயரை சொல்லு..நான் போயி பேசி வேறு சேலை வாங்கிட்டு வர்ரேன் என்றார் கண்ணாயிரம். உடனே..பூங்கொடி..அது கடையில்லங்க..கடைவீதியிலே.பிளாட்பாரத்திலேபோட்டு வித்தான்..அவன்கிட்டத்தான் வாங்கினேன்..என்றார். ஓ..பிளாட்பாரத்திலே வித்தானா..சேலையை கொடு.நான்போயி பாத்துட்டுவர்ரேன்.என்றார் கண்ணாயிரம்.
பூங்கொடி அந்த சேலையை ஒரு பேப்பரில் சுற்றி அவர் கையில் கொடுத்தார்.கண்ணாயிரம் வீராவேசமாக..கையில் சேலையுடன் புறப்பட்டு சென்றார்.
கடைவீதியை அடைந்த அவர் பிளாட்பாரத்தில் யாரும் துணி விற்கிறார்களா என்று பார்த்தார்.யாரையும் காணவில்லை.என்ன ஒருத்தரையும் காணம்..சேலை வித்தவர் மூட்டை கட்டிட்டு போயிட்டாரா..என்றபடி கண்ணாயிரம் அங்கும் இங்கும் பார்த்தார்.
அப்போது ஒரு முதியவர்..கையில் பையுடன் வந்தார்.கண்ணாயிரத்தை பார்த்து , என்ன யாரை தேடுறீங்க..என்று கேட்டார். கண்ணாயிரம்,அதுவா..பிளாட்பாரத்தில் வைத்து சேலை வித்தவரை தேடுறேன் என்றார். முதியவர் உடனே நானும் அவரைத்தான் தேடுறன். உங்களுக்கு என்ன பிரச்சினை..என்று கேட்டார்.
கண்ணாயிரம்..அதுவா..சேலை வாங்கி தண்ணியிலே முக்கி பிழிஞ்சு உதறி காயப்போட்டா..அது கிழிஞ்சுபோச்சு..என்றார்.
முதியவர்,உங்களுக்காவது சேலை முழுசா இருக்கு..எனக்கு..அப்படி இல்ல.நாலுமுழ சேலையை தண்ணியிலே முக்கினா..ஒரு முழ சேலை தான் இருக்கு..இந்த சேலையை கொடுத்துட்டு.வேற சேலை வாங்கி வந்தாதான் வீட்டுக்கு வரணுமுன்னு.என் பொண்டாட்டி சொல்லிட்டா.அதான் கடைக்காரரை தேடுறன் என்று சொன்னார்.
கண்ணாயிரம்..ஓ அப்படியா..சரி சேலையை கடைக்காரரிடம் வாங்கியது யாரு..நீங்களா..உங்க மனைவியா..என்று கேட்டார்.அதற்கு அவர் என் மனைவிதான்..அந்த சேலையை வாங்கிவந்தது…ஆனா கஷ்டப்படுவது நான் என்று வேதனைப்பட்டார். அதற்கு கண்ணாயிரம்..என் கதையும் அதுதான்..என் மனைவிதான் சேலை வாங்கி வந்தா..கடைக்காரரை தேடுறன்.காணல..அவர் எப்படி இருப்பாருன்னு உங்களுக்கு தெரியுமா..என்று கேட்டார். அதற்கு அவர் எனக்கும் தெரியாதே என்றார். அடையாளம் தெரியாம எப்படி கண்டுபிடிப்பது ..கஷ்டம்தான்..என்றார் கண்ணாயிரம்.
அதற்கு அவர் எதற்கும்..இங்குள்ள கடையிலே கேட்டுபாப்போம்..தகவல் கிடைக்கலாம் என்று சொன்னார். சரி பாப்போம் என்ற கண்ணாயிரம் ..அந்த முதியவரிடம் நீங்க கேளுங்க..நான் கேட்டா சொல்லமாட்டாங்க..என்றார்.
சரி..என்ற முதியவர் அங்குள்ள கடைக்காரர்களிடம் கேட்டார்.பிளாட்பார கடைக்காரரிடம் சேலை வாங்கினியளா..விலை குறைவா இருக்குன்னு வாங்கினியளா..தேடுங்க..அவன் போயி அரை மணி நேரமாச்சு.. என்றார்கள்.
முதியவர் சோர்வாக..அவன் போயிட்டானாம்….என்ன செய்யுறது..என்று கண்ணாயிரத்திடம் கேட்டார். அவன் எங்கையாவது பிளாட்பாரத்தில் தான் இருப்பான்..பஸ்டாண்டில் போயி தேடுவோம் வாங்க..என்று கண்ணாயிரம் அவரை அழைத்து சென்றார்.
பஸ்நிலையத்தை அடைந்தனர்.
அங்குள்ள பிளாட்பாரத்தில் ஒரு குரல் கேட்டது.இரு நூறு ரூபாய் சேலை நூறு ரூபாய் போனாவராது பொழுது போனா கிடைக்காது. வாங்குங்க..வாங்குங்க..என்ற குரல் வந்த இடத்தை நோக்கி சென்றார்கள்.
அங்கே…ஒரு வாலிபர்..சேலையை கையில் தொங்கவிட்டபடி நின்று கொண்டிருந்தார். ஒரு மொபட்டு அங்கு நின்றது.அதன்மேல் பெரிய பையில் சேலைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்ததும் கண்ணாயிரம் உஷாரானார்.இரண்டு பேரும் அந்த வாலிபரை நெருங்கினார்கள்.
என்னசேலை வேணும் உங்களுக்கு..பள பள சேலை வேணுமா..பாத்தா மயங்குற சேலை வேணுமா என்று கேட்டான்.
கண்ணாயிரம் உடனே..பேப்பரில் சுத்திவைத்திருந்த சேலையை காட்டி இதை வச்சுக்கிட்டு நூறு ரூபாய் கொடு என்றார். அந்த வாலிபர்… என்ன கலாட்டா பண்ணுறீங்க..நீங்க யாருன்னே தெரியாது ..போங்க..போங்க..வியாபாரத்தை கெடுக்காதீங்க..என்றான்.
உடனே முதியவர் ஏம்பா..சரியில்லாத சேலையை வித்துப்புட்டு..எங்களை கலாட்டா பண்ணுறமுன்னு சொல்லுறீயா..பேசாம நூறு ரூபாயை கொடு..இல்லன்னா நடக்கிறதே வேற..என்று சத்தம் போட்டார். அங்கு சேலை வாங்க வந்த பெண்கள்..என்னங்க..தகராறு என்று இளைஞரிடம் கேட்டனர். ஒண்ணுமில்ல..இங்க கடை போடணுமுன்னா ஆளுக்கு நூறு ரூபா மாமூல் கேட்காங்க..ரவுடிங்க தொல்லை சாஸ்தியாயிடுச்சு..என்றான்.
கண்ணாயிரம்..கையிலிருக்கிற சேலையை காட்டி..நீ தப்பு பண்ணிட்டு..எங்களை தப்பா சொல்லுறீயா..என்று கேட்டார்.
அந்த வாலிபர் உடனே..மாமூல் கேட்கிறதை நேரா கேட்கவேண்டியது தானே..அது சரியில்ல.இது சரியில்ல.என்பீங்க..என்றான்.
சேலை வாங்கவந்த பெண்..கண்ணாயிரத்தை பாத்து..மாமூல் கேட்கிறீங்களா..அந்த தம்பி குறைந்த விலைக்கு சேலை விக்கிறான்..அவன்கிட்டபோய்..பணம் கேட்கியள..என்ன புழைப்பு இது. தம்பி நீ பணம் கொடுக்காதே..என்றார்.
கண்ணாயிரம்…அது வந்து சேலை நல்ல சேலை இல்ல..நீங்க பாத்து வாங்குங்க..என்றார்.
அதை கேட்டதும்..அந்த வாலிபர்..ம் பாத்தியளா..மாமூல் கொடுக்கலன்னா..சேலை நல்லா இல்லை..வாங்காதீங்க..என்பாங்க..வியாபாரத்தை கெடுப்பாங்க..என்றான். உடனே அந்த பெண்..என்ன அவர் சொன்னா..நாங்க கேட்டுருவமா. குறைஞ்சவிலைக்கு கிடைக்கிறதை நாங்க வாங்குவோம்..என்றார்.
கண்ணாயிரம் நம்ம குரல் எடுபடாது என்று நினைத்து ஏம்பா..ரூபாயை கொடு..நாங்க போறோம்..என்றார்.அதை கேட்ட வாலிபர்..ஆளுக்கு நூறு ரூபா தர்ரேன்..உடனே இடத்தை காலிபண்ணுங்க.என்று சொல்லி..ரூபாய் கொடுத்தான்.கண்ணாயிரமும் அந்த முதியவரும் பணத்தை வாங்கிக்கொண்டு..அப்பா ஆளைவிட்டா போதும் என்று அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது ஒரு பெண் அவர்களை பார்த்து..உழைச்சு பிழைக்கிற வழியை பாருங்க..போங்க..என்று சத்தம் போட்டார்.கண்ணாயிரம்..என்னடா.உலகம்..இது..தப்பு பண்ணுறவன் ஒருத்தன் ஏச்சு வாங்கிறவன் ஒருத்தனா.. என்று முணங்கியவாறு வீட்டுக்கு புறப்பட்டார்.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.