May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாடியுடன் சண்டை போட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram fighting with the face mirror/ Story by Thabasukumar

8.2.2022
கண்ணாயிரம் சுகர் குறைய தினமும் இரண்டு வேளை சப்பாத்திசாப்பிடணுமுன்னு பூங்கொடி சொன்னதால் வருத்தத்தில் இருந்தார். அதிலிருந்து தப்பிக்க இரவில் சப்பாத்தி சாப்பிட்டதும் வயிறு வலிக்கு என்று கத்தினார்.உடனே பூங்கொடி ஏங்க என்னாச்சு…இப்படி கத்துறீங்க என்றார்.
அதற்கு கண்ணாயிரம்…ஏய் பூங்கொடி இந்த சப்பாத்தி சாப்பிட்டது வயிற்றுக்கு பிடிக்கலன்னு நினைக்கிறேன்… அதான் வலிக்குது வயிறு என்றார். கண்ணாயிரத்தின் நாடகம் புரியாமல் பூங்கொடி..ஏங்க…திடிரென்று சப்பாத்தி சாப்பிட்டதால் வயிறு வலிக்குதோ என்னமோ தெரியல..இருங்க ..ஓமம் வாட்டர் கொண்டுவர்ரேன் குடிங்க என்று சொல்லிவிட்டு விளக்கை எரியவிட்டார். உள் அறைக்குள் சென்று ஓமம் வாட்டர் பாட்டிலை எடுத்துவந்து கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
அவர் அதை வாங்கி மூடியை திறந்து ஓமம் வாட்டரை மடக்,மடக் என்று குடித்தார். போதும் போதும் கொஞ்சமா குடிங்க என்று சொல்லி கண்ணாயிரத்திடமிருந்து ஓமம் வாட்டர் பாட்டிலை பூங்கொடி வாங்கி வீட்டில் உள்ள அறையில் வைத்தார்.
உடனே படுக்காதீங்க…கொஞ்ச நேரம் விழிச்சிருங்க… என்று சொன்னார் பூங்கொடி.அதை கேட்டதும் கண்ணாயிரம் கொஞ்ச நேரமுன்னா எவ்வளவு நேரம் என்று கேட்டார். அதற்கு அவர் ஒரு பத்து நிமிஷம் அப்படியே இருங்க என்றார். கண்ணாயிரம் கொட்டாவி விட்டபடி ஆ…சரி என்று சொன்னார். பத்துநிமிடம் கழிந்தது.கண்ணாயிரம் கண்களை இறுக மூடி படுத்துகொண்டார்.
சிறிது நேரம் கழித்து விளக்கை அணைத்துவிட்டு பூங்கொடியும் வந்து படுக்கையில் படுத்தார். எங்கோ நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. கண்ணாயிரம் மெல்ல பூங்கொடி கதவை நல்லா பூட்டுனியா என்று கேட்டார். அதற்கு அவர் அதெல்லாம் நல்லா பூட்டியிருக்கு பயப்படாமல் படுங்க என்றார்.
கண்ணாயிரம்…ஏன் இந்தநாய் ராத்திரி ஊளையிடுது என்று கேட்டார்.பூங்கொடி கோபமாக..கதவை திறந்துவிடுறேன் போய் கேட்டுட்டு வாங்க என்றார். கண்ணாயிரம் மறுபேச்சு பேசாமல் போர்வையை போர்த்திபடுத்து கொண்டார்.
கொஞ்ச நேரத்தில் குறட்டை சத்தம்கேட்டது.
விடிந்தது.கண்களை கசக்கிகொண்டு கண்ணாயிரம் எழுந்தார்.அதற்கு முன்பே பூங்கொடி எழுந்து குளித்துவிட்டு சமையல் அறையில் இட்லி அவித்து கொண்டிருந்தார். கண்ணாயிரம் எழுந்ததை பார்த்ததும் ஏங்க சீக்கிரம் பல் விளக்கிட்டு குளிச்சிட்டுவாங்க …சப்பாத்தி ரெடி பண்ணுறன் …சாப்பிடுங்க… என்றார்.
கண்ணாயிரம் உடனே என்ன சப்பாத்தியா ….நேற்று நைட்டு அதை சாப்பிட்டுட்டு வயித்த வலில புரண்டேன். இப்பவும் சப்பாத்தியா..முடியாது என்று கத்தினார். சரிங்க..கத்தாதீங்க….சப்பாத்தி தரல..இட்லி குறையாத்தான் சாப்பிடணும்…சரியா என்று கேட்டார். கண்ணாயிரம்….சப்பாத்தியிலே இருந்து தப்பினா போதும் என்று நினைத்து தலையை ஆட்டினார்.

பூங்கொடி மனம்மாறிவிடக்கூடாது என்று நினைத்து வேக வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்து பல் துலக்கிவிட்டு சுகமாக ஒரு குளியல் போட்டார்.குற்றால அருவியலே குளித்ததுபோல் இருக்குதா…என்ற பாடலை அவரது வாய் முணுமுணுத்தது. சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க என்று மீண்டும் பூங்கொடி குரல் கொடுத்தார்.கண்ணாயிரம் தலையை துண்டால் துடைத்தபடி லுங்கியுடன் வெளியே வந்தார்.மேஜையில் இருக்கிற வேட்டி,சட்டையை எடுத்து போடுங்க என்று பூங்கொடி சொன்னார்.கண்ணாயிரம் அவைகளை எடுத்து அணிந்து கொண்டார்.தலையை சீவி முகத்தில் பவுடர் போட்டுக்கொண்டார். கண்ணாடியில் தன் திருமுகத்தை பார்த்தார்.முகம் அழகாக தெரியவில்லை.உடனே அவர் பூங்கொடி இந்த கண்ணாடி சரியில்லை.வேற கண்ணாடிதான் வாங்கணும்..என் முகத்தை சரியா காட்டமாட்டங்குது என்று புகார்சொன்னார்.
உடனே பூங்கொடி ஏங்கே முகத்துக்கு பவுடர் போட்டியளா என்று கேட்டார். கண்ணாயிரம் ஆமா முகத்துக்கு பவுடர் போட்டுட்டுதான் கண்ணாடியில் பார்த்தேன். அழகா காட்டமாட்டேங்குது என்றார்.
என்னங்க கண்ணாடி இருக்கிறதைதானே காட்டும். நீங்க என்ன பொண்ணா பாக்க போறீங்க..உடற்பயிற்சி கூடத்துக்குதானே போகப் போறீங்க….இருக்கிற அழகு போதும் என்றார். கண்ணாயிரம் மெல்ல நாம அழகாயிருவோமுன்னு எல்லாருக்கும் பொறாமை.கண்ணாடி கடையிலே போய் நம்மை நல்லா காட்டுற கண்ணாடியை பார்த்து வாங்கணும் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டார்.
தன்னை அழகாக காட்டாத கண்ணாடியை பார்த்து நீ ஒரு கண்ணாடியா…என்னை அழகாக காட்டமாட்டேங்கிற…என்ன நினைச்சிக்கிட்டு இருக்க..கேட்க ஆளில்லைன்னு நினைச்சியா…உனக்கு போட்டியா புது கண்ணாடிவாங்கிட்டு வாரேன் பாரு….என்று ஏசினார்.
என்ன புலம்புராறு என்று பூங்கொடி எட்டிப்பார்த்தார்.கண்ணாயிரம் கண்ணாடியோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.

-வே.தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.