October 7, 2024

Seithi Saral

Tamil News Channel

500 தமிழ்நாடு மாணவர்கள் இன்னும் உக்ரைனில் உள்ளனர்; மீட்கும் பணிகள் தீவிரம்

1 min read

500 Tamil Nadu students are still in Ukraine; Intensity of rescue missions

27/2/2022
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களில் ஆயிரத்து 500 தமிழ்நாட்டு மாணவர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்து உள்ளதாக உக்ரைனில் உள்ள தமிழர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடர்பு அதிகாரி ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்து உள்ளார்.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடர்பு அதிகாரியான அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறியதாவது:-

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்காக சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட இ-மெயில்கள் வந்துள்ளன.

இவற்றின் மூலம், உக்ரைனில் சிக்கி தவிக்கும் ஆயிரத்து 500 தமிழக மாணவர்களின் முழுமையான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் உக்ரைனில் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள் என்பது போன்ற முழுமையான தகவல்கள் கிடைத்து உள்ளன.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்களை பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். உக்ரைனில் இருந்து அதிக அளவிலான மக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு மாணவர்கள் வழி தவறிவிடாமல் இருப்பதற்காக, அங்கே குழுக்களாக இருக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அங்குள்ள மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அதேபோன்று தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறோம்.

உக்ரைனில் சிக்கி உள்ள தமிழர்களில் 90 சதவீதம் பேர் மாணவர்கள் தான். மாணவர்கள் அல்லாதவர்களும் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள தமிழர்கள் ருமேனியா, போலந்து, ஹங்கேரி போன்ற அருகில் உள்ள நாடுகள் மூலமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது அங்கு தீவிரமாக போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழர்கள் தங்கி உள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போர் சற்று ஓய்ந்த பிறகு தூதரக அதிகாரிகள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது, அங்கு இருப்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அவர்களுக்கு உடனடியாக உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் சிக்கி இருக்கும் தமிழர்களை ரஷியாவின் தலைநகரமான மாஸ்கோ வழியாக மீட்பது சிரமம். போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உக்ரைனில் இருந்து ரஷியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காது. அதற்கு தூதரக அதிகாரிகள் மூலம் இந்தியர்களுக்கு மட்டும் நுழைவதற்கான சிறப்பு அனுமதி பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.