May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

ஏலமிட்டு ஏமாந்த கண்ணாயிரம்./ நகைச்சுவை கதை

1 min read

.Kannayiram Disappointed / Comedy Story By Thabasukumar

24/6/2022
கண்ணாயிரம் தன்மனைவி பூங்கொடியுடன் குற்றாலத்துக்கு பஸ்சில் சுற்றுலா சென்றார்.வழியில் கடலூரில் பஸ்நின்றபோது ஓட்டலில் காந்தாபிரியாணி சாப்பிட்டார்.பின்னர் அவர் மனைவி ஒரு பார்சல் காந்தாபிரியாணி எடுத்துக்கொண்டு பஸ்சில் ஏறினார்.சுடிதார் சுதாவுக்கு இறைச்சிக்கடைக்காரர் பிரியாணிவாங்கி கொடுத்ததால் அவள்முன் தங்களது பெருமையை உயர்த்திக்கூறவேண்டும் என்று கண்ணாயிரம் காந்தாபிரியாணி சாப்பிட்டதாக பெருமையாக சொன்னார்.
அது என்ன காந்தாபிரியாணி என்று எல்லோரும் ஆவலாக கேட்டபோது கண்ணாயிரம் அந்த பிரியாணி நடிகை காந்தா சாப்பிட்டது…அது வேறு எங்கும்கிடைக்காதது. சிலர்மாதிரி மத்தவங்க வாங்கிக்கொடுத்து நாங்க சாப்பிடவில்லை .நாங்களே பணம்கொடுத்துவாங்கி காந்தாபிரியாணி சாப்பிட்டோம்.. அதன் ருசியே தனி. என்று அடுக்கிக்கொண்டே போனார்.
அது காக்கா பிரியாணியாக இருக்கும் என்று பயில்வான் கிண்டல் செய்தபோது கண்ணாயிரம் கோபம் அடைந்து நீங்க இப்படி சொல்வீங்கன்னு தெரியும். அதான் காந்தாபிரியாணியை கையோடுவாங்கிவந்திருக்கிறோம் என்று சொன்ன கண்ணாயிரம் பிரியாணி பொட்டலத்தை பிரித்து அங்கிருந்தவர்களிடம் காட்டினார். சுடிதார் சுதா என்ன பிரியாணி என்று எட்டிப்பார்க்கமுயன்றபோது கண்ணாயிரம் பிரியாணியை காட்டவில்லை. கண்டவங்ககிட்டேல்லாம் காந்தாபிரியாணியை காட்டமுடியாது என்று பிகு பண்ணினார்.
இது சுடிதார் சுதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவள் கோபத்தை அடக்கிக்கொண்டாள் .கண்ணாயிரம் வைத்திருந்த காந்தா பிரியாணியை வாங்க எல்லோரும் ஆசைப்பட்டார்கள். துபாய்க்காருக்கும் ஆசை இருந்தது. அவர் காந்தா பிரியாணியை ஏலம்விடும்படி கண்ணாயிரத்திடம் கூற அவர் ஏலமிடத்தொடங்கினார்.
இருநூறு ரூபாயில் தொடங்கி ஏலத்தை கண்ணாயிரம் விறுவிறுப்பாக நடத்தினார் .துபாய்காரர் ஏலத்தை எடுக்க ஏலத்தொகையை உயர்த்திக்கேட்க கண்ணாயிரத்துக்கு கடுப்பேற்றுவதற்காக சுடிதார் சுதாவும் ஏலத்தொகையை உயர்த்திக்கேட்டார். ஆனால் அவளுக்கு பிரியாணியை கொடுக்கக்கூடாது என்று பூங்கொடி சொன்னதால் கண்ணாயிரம் உஷாராகி துபாய்க்காரரிடம் ஏலத்தை மேலும் உயர்த்தி கேளுங்கள் என்று சொன்னார். ஆனால் துபாய்காரர் ஏலத்தொகையை உயர்த்திக்கேட்க யோசித்தார்.
இந்த நேரத்தில் சுடிதார் சுதா முந்திக்கொண்டு முன்னுற்று இருபது ரூபாய் என்றார். அதைகேட்டதும் கண்ணாயிரம் துபாய்க்காரரை பார்த்து ம் கூட்டி கேளுங்க. விடாதீங்க …உங்க அந்தஸ்து என்ன ..விட்டுக்கொடுக்காதீங்க என்று உசுப்பேத்தினார்.
ஆனால் அவரோ. அட போப்பா. நூற்றம்பது ரூபாய் பிரியாணிக்கு முன்னூறே அதிகம். நீவேறமுன்னூற்று இருபது ரூபாய்க்கு மேல கேட்க சொல்லுற… .அது ரொம்ப அதிகம். அந்த பொண்ணுக்கே கொடுத்திடு.. என்று சொன்னார் .கண்ணாயிரம் கேட்கவில்லை .துபாய்க்காரரைபார்த்து ஏங்க. நீங்க பின்வாங்காதீங்க. .சுடிதார்சுதாவிடம் துபாய்க்காரர் தோற்றுப்போயிட்டாருன்னு எல்லோரும் உங்களை கேலி பண்ணுவாங்க… அது உங்களுக்கு தேவையா. என்று கேட்டார்.
அதற்கு துபாய்க்காரர்.அட. ஆளைவிடப்பா. ஏலமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் என்றார் .
கண்ணாயிரம் விடுவதாக இல்லை .ஏங்க. .நீங்க ஏலம் கேட்க வெட்கப்படுறீங்களா. பரவாயில்லை .உங்கள் சார்பில் நானே கேட்கிறேன் என்றார் கண்ணாயிரம் .
துபாய்க்காரர் வேண்டாம். வேண்டாம். என்று கெஞ்சினார் .கண்ணாயிரம் அவரிடம். …ஏன்பயப்படுறீங்க. .ஜந்து ஐந்து ரூபாயா ஏலத்தை கூட்டினா. என்னைக்கு முடியுறது. படக்குன்னு ஐம்பது ரூபாயை கூட்டி சொன்னா சுடிதார் சுதா ஆடிப்போயிடும் என்று சொன்னார்.
துபாய்க்காரர் மெல்ல என்னை ஆளைவிடு…வேற ஆளை ரெடிபண்ணு என்றார்.கண்ணாயிரம் அவரிடம்…சரி..ஒரே ஒரு முறை உங்கள் சார்பில் ஏலத்தொகை உயர்த்தி சொல்கிறேன்…அப்புறம் நீங்கள் ஏலம் கேட்கவேண்டாம் என்று சொன்னார்.
துபாய்க்காரர் போனால்போகுது என்று நினைத்து ..ஐந்து ரூபாய் கூட்டிசொல்வார் என்று நினைத்து
….சரி…சரி..ஒரே முறை தான்…அப்புறம் கேட்கக்கூடாது என்றார். கண்ணாயிரமும் இதுதான் நேரம் என்று நினைத்து….சுவையான காந்தாபிரியாணி நானூற்று ஐம்பது ரூபாய்…துபாய்க்காரர் கேட்டிருக்கார்..என்று சொன்னார்.
அதை கேட்டதும் துபாய்க்காரர் நெஞ்சை பிடித்தபடி…அடப்பாவி ஐந்து ரூபாய் கூட்டச்சொன்னா…இப்படி பல மடங்கு கூட்டி சொல்லிட்டியே…அம்மா நெஞ்சு வலிக்குதே என்க அவர் மனைவி…துபாய்க்காரர் நெஞ்சை தடவியபடி விடுங்க..உங்களுக்கு இந்த போட்டி தேவையா…நானூற்று ஐம்பதோடவிடுங்க…என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் இனி சுடிதார் சுதா ஏலம் கேட்கமாட்டாள் என்று நினைத்து எங்க துபாய்க்காரர் நல்லவர்…நாலும் தெரிந்த வல்லவர்…அவரை ஜெயிக்கிறதுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை.அவரை எதிர்த்து ஏலம் கேட்கிறதுக்கு யாருக்கு தில் இருக்கு..முன்னூற்று இருபதில் இருந்த ஏலத்தை ஓரே அடியாக நானூற்று ஐம்பதுக்கு உயர்த்திகேட்ட அவரது தில்லு வேற யாருக்கும் வருமா…நான் சவால்விடுகிறேன்…இந்த கூட்டத்திலே…வேறயாரும் ஏலத்தை உயர்த்திகேட்க..முடியுமா என்றார்.
சுடிதார் சுதா உடனே…ஐநூறு என்றார். கண்ணாயிரம் அதை எதிர்பார்க்கவில்லை. ஐநூறா….சுடிதார் சுதாவிடாது போலிருக்குதே…என்ன செய்ய என்றபடி துபாய்க்காரரை பார்த்தார். அவர் கண்களை மூடி தூங்குவது போல் நடித்தார். ஓரக்கண்ணால் கண்ணாயிரம் என்ன செய்கிறார் என்று பார்த்துக்கொண்டார். அப்போது கண்ணாயிரம் அவர் அருகேவந்து…துபாய்சார்…துபாய்சார்…தூங்கிறியளா…ஏலம் ஐந்நூறு ரூபாயில் நிக்குது…என்ன செய்யலாம் கண்ணை திறந்து சொல்லுங்க என்றார்.
துபாய்க்காரர் மனைவி…யோவ் கண்ணாயிரம்…என்ன நினைச்சுக்கிட்டு இருக்க…உன்னால அவருக்கு மாரடைப்பே வந்திடும்போலிருக்குது…போ..போ..ஐந்நூறு ரூபாய்க்கே ஏலத்தை முடி என்று விரட்டினார்.
கண்ணாயிரம் உடனே..மகாஜனங்களே…வேற யாரும் ஏலம் எடுக்கிங்களா என்று சுற்றி சுற்றிவந்து கேட்டார்.ஒருவர் கொட்டாவி விடுவதற்காக வாயை பிளந்தபோது அவர் ஏலம்தான் கேட்கிறார் என்று நினைத்து…ஆ…சொல்லுங்க…ஐநூற்று ஐம்பது ரூபாயா…ம்..சொல்லுங்க…வாயை திறந்திட்டிய…சொல்லுங்க என்று கெஞ்சினார்.
அவர்..பலவித கோணங்களில் கொட்டாவிவிட முயற்சி செய்துகொண்டிருந்தார்.கண்ணாயிரம் அவரை சுற்றி சுற்றி வந்தார்…சீக்கிரம் சொல்லுங்க…ஐநுற்றுஐம்பது சொல்லவிருப்பம் இல்லன்னா ஐநூற்றுஐந்தாவது சொல்லுங்க என்று கண்ணாயிரம் கேட்டார்.
அந்த நபர் கண்ணாயிரத்தின் இம்சைதாங்காமல்….கொட்டாவி விடுவதை நிறுத்திவிட்டு…அடபோய்யா..நானே சந்தோஸமா கொட்டாவிவிடமுடியலன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கேன்..நீ வேற ஏலம்…கீலமுன்னுக்கிட்டு வந்து நிக்குற என்று திட்டினார்.கண்ணாயிரம் உடனே…ஆ…சத்தம்போடாதீங்க….நீங்க வாயை பிளந்ததை நான் தப்பா நினைச்சிட்டேன்…ஏலம் கேட்கலையா..விடுங்க என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் முகத்தைப்பார்த்தார். அவர்கள் கண்ணாயிரம் மாட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்து திரும்பிக்கொண்டனர்.
கண்ணாயிரத்துக்கு வேறயாரும் ஏலம் எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்தது.ஆனால் சுடிதார் சுதாவுக்கு காந்தாபிரியாணியை கொடுத்தால் பூங்கொடி தகராறு செய்வாரே என்று பயந்த கண்ணாயிரம் பிரியாணியை கையில் தூக்கியபடி வேற யாரும் ஏலம் கேட்கியளா….என்று சத்தமாக கேட்டார்.ஒரு குரலும் வரவில்லை.கண்ணாயிரம் மனம் தளராமல் மீண்டும் சுற்றிவந்தார்.துபாய்க்காரரை இறுதியாக எட்டிப்பார்த்தார்.அவர் கண்களை இறுக்கி மூடிக்கொண்டார்.கண்ணாயிரம் நம்பிக்கை இழந்து பூங்கொடியை பரிதாபமாக பார்த்தார்.
பூங்கொடியும் மனம் இரங்கி இங்கே வாங்க ஐநூறு ரூபாய்க்கு ஏலம் கேட்டவருக்கே கொடுத்துடுங்க என்றார்.கண்ணாயிரம் ஆச்சரியத்துடன்…பூங்கொடி..ஐநூறு ரூபாய்க்கு ஏலம் கேட்டது நம்ம எதிரி பூங்கொடி…அவளுக்கு காந்தாபிரியாணியை கொடுக்கக்கூடாது என்று வாதாடினார். அதை கேட்ட பூங்கொடி கோபமாக…ஏங்க…நூற்றம்பது ரூபாய் பிரியாணியை வேற யாரும் ஐநூறுரூபாய்க்கு ஏலம் கேட்கமாட்டாங்க.. சுடிதார் சுதாவிடமே கொடுத்திடுங்க..நமகாகு லாபம்தானே என்றார்.
உடனே கண்ணாயிரம் உற்சாகமானார்.வரலாற்று சிறப்புமிக்க காந்தாபிரியாணி ஏலம் முடிவுக்கு வந்துள்ளது. ஐநூறு ரூபாய்க்கு சுடிதார் சுதா அவர்கள் காந்தாபிரியாணியை ஏலம்எடுத்துள்ளார்கள்.ஒரு ஏலம் ஐநூறு ரூபாய் இரண்டு ஏலம் ஐநூறு ரூபாய்..மூணு ஏலம் ஐநூறு ரூபாய்…சுடிதார் சுதா அவர்களிடம் காந்தாபிரியாணி வழங்கப்படுகிறது என்று சொன்னார்.
சுடிதார் சுதா எழுந்து நின்றார். கண்ணாயிரம் அவளிடம் காந்தாபிரியாணியை கொடுத்தார்.அவள் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார்.
கண்ணாயிரம் அவளிடம்…ஐநூறு ரூபாய் சில்லறலயா கொடுக்காதீங்க….நோட்டா கொடுங்க…என்று பவ்யமாக கேட்டபடி நின்றார்.
சுடிதார் சுதாவும் ரூபாயை உடனே கொடுத்துவிடுவதுபோல் கைப்பையை எடுத்தார்.அதை திறந்து…ஒவ்வொருவிசிட்டிங் கார்டாக எடுத்து சீட்டில்வைத்தார். என்ன ரூபாயை கேட்டால் விசிட்டிங்கார்டா எடுக்கிறா…ஒருவேளை ஐநூறு ரூபாய் முழு நோட்டை தேடுகிறாள் போலிருக்குது…பொறுத்திருந்து பார்ப்போம் என்று காத்து நின்றார்.கடைசியாக ஓரு விசிட்டிங்கார்டை ஏடுத்து அதில் உள்ள அட்ரசை பார்த்தாள். கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல்விழிக்க…சுடிதார் சுதார் விசிட்டிங்கார்டில் உள்ள ஜவுளிக்கடைக்காரர் முகவரியை வாசித்துவிட்டு ஜவுளிக்கடைக்காரருக்கு நீங்கள் எவ்வளவு கொடுக்கணும் என்று கேட்டாள்.
அதற்கு கண்ணாயிரம்…நான் பத்தாயிரம் தரணூமுன்னு ஜவுளிக்கடைக்காரர் சொல்லுறாரு என்று சொன்னார். உடனே சுடிதார் சுதா வேகமாக…கண்ணாயிரம்…நீங்கள் ஜவுளிக்கடைக்காரருக்கு கொடுக்கவேண்டிய பத்தாயிரத்தில் இந்த காந்தாபிரியாணிக்குரிய ஐநூறு ரூபாயை கழிச்சிக்கிடுங்க என்றாள்.கண்ணாயிரம் . உடனே…அது வேற..இது வேற என்று சொன்னார்.அதற்கு சுடிதார் சுதா…அப்படியா..இதோ..ஜவுளிக்கடைக்காரருக்கு போன் பண்ணுறன் பேசுறியளா என்று மிரட்டினாள்.

வேண்டாம்…வேண்டாம்…நான் பிறகு பேசிக்கிடுறன்…நீங்க போன் போடாதீங்க… நீங்க…காந்தாபிரியாணி சாப்பிடுங்க…ருசியா இருக்கும்..ஓருபைசா தரவேண்டாம்…நீங்க நீங்கதான். நாங்க நாஙகதான். என்றபடி பூங்கொடியை நோக்கி நகர்ந்தார். அவர் முறைத்துப் பார்த்தார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று கண்ணாயிரம் பயந்து நடுங்கினார்.(தொடரும்)

வே.தபசுக்குமார்,புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.