மராட்டிய மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே ராஜினாமா
1 min read
Uttam Thackeray resigns as Maratha Chief Minister
29.6.2022
மராட்டிய முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை அடுத்து சட்டப்பேரவையில் நாளை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.