April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

சரவணபவன் ராஜகோபால் வழக்கு திரைப்படமாகிறது-தமிழில் அல்ல இந்தியில்…

1 min read

ஞானவேல்ராஜா

Saravanabhavan Rajagopal case to be made into a movie – not in Tamil but in Hindi…

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளை வாங்கி குவித்திருந்தாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்த அளவுக்கு அந்த திரைப்படம் வெளிவரக் கூடாது என்று பல அரசியல் கட்சிகளும் போராட்டம் செய்தது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி ஜெய்பீம் திரைப்படம் வெளியில் வந்து ரசிகர்களை கவர்ந்தது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த படத்திற்கு பெருமளவு ஆதரவு இருந்தது. இதன் மூலம் அந்த படத்தின் இயக்குனர் ஞானவேலுக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு சர்ச்சை கதையை இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் அந்த படம் தமிழில் அல்ல, இந்தியில் உருவாக இருக்கிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு தான் சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு.

சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் ராஜகோபால், ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவரை கடத்தி கொலை செய்ததாக கடந்த 2001ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டார். ராஜகோபாலிடம் மேலாளராக வேலை செய்தவருடைய மகளான ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய ராஜகோபால் தான் திட்டம் போட்டு இந்த கொலையை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆனால் அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அப்போது அவருக்கு கொடுத்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதை எதிர்பார்க்காத ராஜகோபால் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் கூட அவருக்கு கொடுத்த தண்டனை உறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நடந்த இந்த கொலை வழக்கில் ஒரு வழியாக ராஜகோபால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2019ம் ஆண்டு மரணமடைந்தார்.

பல வருடங்களாக ஒரு கொலை வழக்கில் இருந்து தப்பிக்க பல முயற்சிகளை மேற்கொண்ட ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி தனி ஒரு பெண்ணாக இருந்து அவருக்கான தண்டனையை வாங்கிக் கொடுத்தார். இந்த கதையைத் தான் ஞானவேல் தற்போது திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

இதன் மூலம் அவர் முதல் முறையாக ஹிந்தி திரையுலகில் நுழைய இருக்கிறார். ‘தோசா கிங்’ என்ற பெயரில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர், நடிகை யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.