June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருந்தோம்பல் குறித்து பேசிய திருவள்ளுவர்” – பிரதமர் மோடி பெருமிதம்

1 min read

“Thiruvalluvar spoke about hospitality a thousand years ago” – PM Modi proud

28.7.2022
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ‘விருந்தோம்பல்’ குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.
செஸ் போட்டி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். இதற்கு முன்பு பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் பேசும் போது பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிலும், பிரதமர் மோடி ‘விருந்தோம்பல்’ குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் எடுத்துக் கூறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் விருந்தோம்பலின் சிறப்பு குறித்து பேசியிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த விழாவில் அவர் கூறிய திருக்குறள்;- “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”
மேற்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, அதன் விளக்கத்தையும் கூறினார். அதாவது, ‘ஒருவர் தனது வாழ்வில் பொருட்களை சேர்த்து, இல்வாழ்வை மேற்கொள்வது எல்லாம் விருந்தினரைப் போற்றி அவர்களுக்கான உதவிகளை செய்வதற்காகவே’ என்ற திருக்குறள் விளக்கத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

பெருமிதம்

சதுரங்க உலகின் மிகப்பெரிய கவுரமாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் முதல் முறையாக சதுரங்க போட்டிகளின் பிறப்பிடமான இந்தியாவில் நடைபெறுவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். மேலும் இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இந்த பெருமை கிடைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துள்ளதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார்.

டுவிட்டர்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில், “எப்போதும்போல் ஆச்சரியமூட்டி அன்பைப் பொழிந்துள்ள சென்னையே, அற்புதமான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என்று அதில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *