May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை காப்பாற்றிய சுடிதார்சுதா/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Suditharsuda who saved Kannayira/ comedy story/ Tabasukumar

10.9.2022
கண்ணாயிரம் சுற்றுலா செல்லும்போது மணப்பாறையில் பஸ்நின்ற வேளையில் நான்கு பாக்கெட் நெய் முறுக்கு வாங்கிவந்தார். அதை மனைவி பூங்கொடியிடம் கொடுக்க அவர் இருக்கையின் கீழ் உள்ள பையில் முறுக்கை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். டீவியில் படம் போட்டபோது அதிலிருந்து குதித்த எலிகள் பூங்கொடி வைத்திருந்த முறுக்கு பைக்குள் புகுந்து ஒருபாக்கெட் முறுக்கை கடித்து இழுத்து வீசிவிட்டு அடுத்த பாக்கேட்டை பதம்பார்க்க தயாரான வேளையில் திண்டுக்கல் வர பயில்வான் சிலம்பாட்டம் நடத்தி எலிகளை விரட்டினார். அப்போது பிளாக்சில் ஏலக்காய் டீ வாங்கிவந்த கண்ணாயிரம் முறுக்கு உள்ள பையை தூக்கியபோது அதில் ஒருபாக்கெட் முறுக்கு காணாமல் போக பூங்கொடி உடனே கண்ணாயிரம்தான் எடுத்திருப்பார் என்று அவர் மீது கோபப்பட…இறுதியில் எலியார் செய்த வேலைதான் இது என்று தெரியவர.. பூங்கொடி கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
அந்த நிலையில் எலிகடித்த முறுக்கு பாக்கெட்டை சாப்பிடக்கூடாது என்று பயில்வான் எச்சரிக்க…கண்ணாயிரமும் பூங்கொடியும் அடுத்து என்னசெய்வது என்று யோசித்தவண்ணம் இருந்தனர். பூங்கொடியோ…ஏங்க..ஒருபாக்கெட்டை கடிச்சு இழுத்துபோட்டிருக்கு…அந்த பாக்கெட்டை வெளியே தூக்கிபோட்டிருவோம்..மீதி உள்ள பாக்கெட்டை உடைச்சு..முறுக்கை சாப்பிடுவோம் என்று சொல்ல…கண்ணாயிரம்..அந்த முறுக்கு ஒண்ணும் செய்யாதா என்று இழுக்க..ஏங்க..காசு கொடுத்துவாங்கினது..நாம எப்படியும் சாப்பிட்டே ஆகணும் என்று சொல்ல கண்ணாயிரம் பதில் சொல்லாமல் விழித்தார்.
உடனே பூங்கொடி..ஏங்க முழிக்கிறீங்க…முதல்ல அந்த எலிகடிச்ச முறுக்குபாக்கெட்டை எடுத்து வெளியே வீசுங்க என்று கண்ணாயிரத்திடம் கொடுக்க..அவர் அந்த பாக்கெட்டை பஸ்சுக்கு வெளியே வீச..பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரின் முகத்தில்பட அவன் யோவ்…நிறுத்துய்யா..பஸ்சை…ஏன் மேலயா..குப்பையை வீசுற..உன்னை என்ன செய்யுறன்பாரு என்று விரட்டிக்கொண்டுவர கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. அதை பார்த்த பூங்கொடி..ஏங்க..ஆளைபாத்து போடவேண்டியதுதானே…என்று திட்ட கண்ணாயிரமோ..நான் ஆளைபாத்துதான் போட்டேன் என்று சொல்ல..பூங்கொடியோ..ஏங்க பிறகு ஏன் அவன் உங்களை திட்டுறான்..என்று கேட்க..கண்ணாயிரம் ..அது அவன் முகத்தில பட்டுட்டு என்று கண்களை கசக்கினார்.
ஏங்க..ஆளை பாத்து போடுங்கன்னா..ஆள்மேல போடுறதில்ல…ஆள்வாரங்களா இல்லையான்னு பார்த்து ஆள்வராம இருக்கும்போது போடனும்..புரியுதா..என்று சொல்ல..கண்ணாயிரம் ம்..ஆள்மேல போட்டாச்சு..இப்போ என்ன செய்ய…என்க..மன்னிச்சுக்கோ என்று சொல்லிடுங்க..என்றார் பூங்கொடி.
பஸ் வேகமாக சென்று கொண்டிருக்க..கண்ணாயிரம் கையை வெளியே கையைகாட்டி மன்னிச்சுக்கோ என்று சொல்ல..மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஏய் கையை காட்டி கேலியா பண்ணுறா…டாடா காட்டுறீயா…இப்ப பாரு.. என்றபடி போனை எடுத்து எங்கோ பேசினான்.
கண்ணாயிரம் ..நான் ஒண்ணு சொன்னா..அவன் ஒண்ணு சொல்லுறான்…பஸ்சை விரட்டிக்கிட்டேவர்ரான்..நான் என்ன பண்ணுவேன் என்று மனம் கலங்கினார். பூங்கொடி..ஏங்க..தலையை வெளியே நீட்டாதீங்க..கல்லை வீசிபுடுவான் என்று எச்சரிக்க..கண்ணாயிரம் பஸ் கண்ணாடியை இழுத்து பூட்டினார்.
இப்ப என்ன பண்ணுவ..இப்ப என்ன பண்ணுவ என்று கண்ணாயிரம் சிரித்தபடி இருக்க…பஸ் அடுத்த ஸடாப்வந்தபோது..நான்கு வாலிபர்கள் மோட்டார்சைக்கிளை குறுக்கே நிறுத்தி சுற்றுலா பஸ்சை வழிமறித்தனர். டிரைவர் என்ன ஆச்சு என்றபடி பஸ்சை நிறுத்த..மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்த வாலிபர்கள்..பஸ்சுக்குள் திபு திபு என்று ஏறினார்கள்.யார்ரா அது..என் நண்பன் முகத்திலே முறுக்கு பாக்கெட்டை வீசினது…யார்ரா…அது..சொல்லுங்கடா..மன்னிப்பு கேட்கிறவரை பஸ்சைவிடமாட்டோம் என்க…கண்ணாயிரம் பஸ்..சீட்டுக்கு அடியில் பதுங்கிக்கொண்டார்.
பயில்வான் எழுந்து ..அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.அவர்கள் கேட்கவில்லை.எவ்வளவு தினாவெட்டு இருந்தா..முறுக்கு பாக்கெட்டை முகத்திலே வீசிட்டு..டாடாவேற காட்டிட்டு போயிருக்கான்..எவ்வளவு திமிர்..மணப்பாறை நெய் முறுக்கு சாப்பிட்ட.. திமிர் அது..பாக்கெட்டில் கடை அட்ரஸ் இருந்திருக்கு…சொல்லுங்க…யார் அது..முறுக்கு சாப்பிட்டு பாக்கெட்டைவீசின ஆளு யாரு…கையை முறிக்காமவிடமாட்டோம்..பத்து எண்ணுறதுக்குள்ளே..சொல்லிட்டா..மன்னிச்சுவிட்டுருவோம்..இல்லன்னை முறுக்க நொறுக்கிறமாதிரி..நொறுக்கிடுவோம் என்று எச்சரித்தனர்.
ஹெட்போன் போட்டு பாட்டு கேட்டிருந்த சுடிதார் சுதா அதை நிறுத்திவிட்டு…முறுக்கு பாக்கெட் சமாசாரத்தை விசாரித்தார். மோட்டார் சைக்கிளில்வந்த வாலிபரில் ஒருவர்…ஒண்ணு…ரெண்டு..என்று எண்ணதொடங்கினார்.
கண்ணாயிரத்துக்கு வயிறு கலக்கியது. பத்து எண்ணுறதுக்குள்ளே சொல்லிடுவோமா..என்று நினைக்க..பூங்கொடி..ஏங்க…எழும்பாதீங்க..நெய்முறுக்கின்னு வேற கரைக்டா சொல்லுறான்..எழும்பாதீங்க என்று எச்சரித்தார். என்ன இவா..இப்படி சொல்லுறா..பத்து எண்ணுறதுக்குள்ளே சொல்லிட்டா மன்னிச்சுவிட்டுவிடுவாங்களே…இல்லன்னா அடிச்சிபுடுவாங்களேன்னு பயந்து நடுங்கினார்.
அப்போதுபஸ்சிலிருந்த வாலிபர் ஒருவர்..எங்க பஸ்சிலிருந்து நெய் முறுக்கு பாக்கெட்டை வீசினதுக்கு ஆதாரம் இருக்கா என்று கேட்க..பஸ்சை துரத்திக்கொண்டு மோட்டார்சைக்கிளில்வந்த வாலிபர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு பஸ்சுக்குள் தாவி ஏறினார்.ஆதாரமா கேட்கிற..எலிகடிச்சமாதிரி இருக்கிற இந்தநெய் முறுக்கு பாக்கெட்டை பார்.இதுதான் நான் மோட்டார் சைக்கிளில்வரும்போது பஸ்சிலிருந்து பறந்துவந்து என்முகத்தில் மோதியது. நான் கொஞ்சம் ஏமாந்திருந்தா…தடுமாறி கீழேவிழுந்திருப்பேன்..ஒரு சாரிகூட சொல்லாம கைகாட்டிட்டு போனா ஏப்படி..இருட்டா இருந்தா தெரியாதுன்னு நினனப்பா என்று ஏசிக்கொண்டே பஸ்சுக்குள் நடந்தான்.
உடனே ஒருவன்..அண்ண பத்து எண்ணுறதுக்குள்ளே சொல்லலன்னா..பஸ்சை சிறைபிடிச்சிடுவோம் என்றபடி..ஒண்ணு என்று மீண்டும் எண்ண தொடங்கினான். கண்ணாயிரத்துக்கு மூச்சு முட்டியது. என்னடா இது…ஒரு முறுக்குபாக்கெட்டுக்கு இந்த அக்கப்போரா..என்று கண்கலங்கினார். எழலாமுன்னு நினைச்சா..பூங்கொடி அழுத்திபிடித்திருக்கா..அவா உத்தரவை மீறமுடியாது என்று தலையை சொரிந்தார்.
அப்போது ஐந்து ..ஆறு ..ஏழு..எட்டு..ஒன்பது…ஒன்பது…ஒன்பது..அடுத்து பத்து சொல்லப்போறேன்…பத்து சொல்லிட்டா..அவ்வளவுதான்..பஸ்சை சிறைபிடிச்சிடுவோம் என்று எச்சரித்துவிட்டு..பஸ்சில்வந்த ஒவ்வொருவராக பார்த்து கேட்டபடி கண்ணாயிரம் இருக்கை நோக்கிவர..கண்ணாயிரம் கீழே பதுங்கி இருப்பதை பார்த்து..யார் அவர் ஏன் கீழே இருக்கார் என்று பூங்கொடியிடம் கேட்க..அதா..அவர் என் கணவரு..கீழே..ஒரு ஐந்து ரூபா நாணயம் விழுந்துட்டு..ரொம்பநேரம் தேடுறாரு..இன்னும் கிடைக்கல என்று சொன்னார். உடனே..சரி..தேடட்டும்..என்ற வாலிபர்..ஏங்க..நேரம் நெருங்கிட்டு..பத்து சொல்லப்போறன்..யாரும் சொல்லமாட்டேங்கிறீங்க…சொல்லப்போறன்…சொல்லப்போறன்…ப…என்று சொல்வதற்குள் சுடிதார்சுதா எழுந்து..நான்தான் முறுக்கு பாக்கெட்டை கீழே போட்டேன்…என்று சொல்ல..அனைவர் கண்களும் அவரை நோக்கின.
மோட்டார்சைக்கிளில்வந்த வாலிபர்கள் என்னசெய்வார்களோ என்ற பயம் அவர்களை தொற்றிக்கொண்டது. ஆனால் மோட்டார்சைக்கிளில் வந்து மறித்த வாலிபர்களுக்கு …சுடிதார்சுதாவை பார்த்ததும்…கோபம் குறைந்தது. அவள் கைகளில் கண்ணாடி வளையல் குலுங்க…அந்த வாலிபர்களை பார்த்து….ம் சொல்லுங்க..என்று கேட்க..அவர்கள்..ஏம்மா..இதை அப்பவே சொல்லியிருக்கலாமுல்லா..பஸ்சில வரும்போது..முறுக்கு பாக்கெட்டை வீசியிருக்கீங்க..கண்ணுலபட்டு மோட்டார் சைக்கிளில்வந்த எங்க நண்பர் விபத்திலே சிக்கியிருந்தா என்ன ஆயிருக்கும்..யோசித்துபாருங்க..படிச்சவங்கமாதிரி இருக்கீங்க..அழகாவேற இருக்கீங்க..நீங்க இப்படி பண்ணலாமா..இதே இது ஆம்பிளை பண்ணியிருந்தான்னா..கீழே தூக்கிபோட்டு மிதிச்சிருப்போம்..நீங்க..லேடி என்கிறதாலே விடுறோம்..இனி அப்படி போடாதீங்க..என்று ஆலோசனை சொன்னார்கள். பஸ்சை மோட்டார் சைக்கிளில் துரத்திவந்த வாலிபர்..பஸ்சிலிருந்து டாடாகாட்டிய கைகளை நினைத்துபார்த்தார். அதில் வளையல் இல்லையே..என்று கண்களை கசக்கி மீண்டும் நினைத்துபார்த்தார்.
தனக்கு பஸ்சிலிருந்து கைகாட்டிய கையில் வளையல் இல்லாமல் இருப்பது நினைவுக்குவர…தன் நண்பர்களிடம்..ஏய்..பஸ்சிலிருந்து எனக்கு கைகாட்டிய கையில் வளையல் கிடையாது..இந்த பொண்ணு வளையல் போட்டிருக்கே என்று சந்தேகத்தை கிளப்ப…அவர்களே..டேய்..நீ இருட்டிலே..சரியா பாத்திருக்கமாட்டே…அந்த பொண்ணே நான்தான் முறுக்கு பாக்கெட்டைவீசினேன்னு சொல்லிட்டு..அப்புறம் என்ன..மன்னிச்சு பஸ்சைவிட்டுறுவோம்..என்க..அந்தவாலிபரோ வளையல் இல்லா கரத்தையே நினைத்து கொண்டிருக்க..அவரது நண்பர்களே..ஏய் உனக்கு இருட்டிலே சரியா கண்ணு தெரியமாட்டேங்குது..ஙண்ணாடி போடுடா..அப்புறம் மோட்டார்சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட்போடு…அதுதான் பாதூகாப்பு..புரியுதா என்க..அந்த வாலிபர்..பாதி சம்மதத்துடன் சரி..சரி..லேடிங்கிறதால விட்டுறுவோம் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினார்கள்.
சரி..பத்திரமா..போங்க..என்று கைகாட்டிவழியனுப்பினார்கள்.
.டிரைவர் பஸ்சை ஸ்டார்ட்பண்ணினார். கண்ணாயிரம்..என்ன அவங்க போயிட்டாங்களா என்க போயிட்டாங்க என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் இருக்கையின் கீழே இருந்து மெல்ல எழுந்தார் .பஸ்சிலிருந்தவர்கள் மோட்டார்சைக்கிள் வாலிபர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் கைககளை அசைக்க..கண்ணாயிரம் நாம கைஅசைக்காட்டி தப்பா நினைப்பாங்க என்று நினைத்து பஸ் கண்ணாடியை தூக்கி..டாடா என்று சொல்லியபடி அசைக்க..மோட்டார்சைக்கிளில் துரத்திவந்தவாலிபர்..அந்த கைகயை அடையாளம் கண்டு..அதே கை..அதே கை..அவன்தான்..விடாதீங்க..அவன்தான் முறுக்கு பாக்கேட்டைவீசினான் என்று கத்த மற்ற வாலிபர்கள் அதை நம்பாமல் டேய் உனக்கு என்னமோ ஆச்சுடா…காத்து கருப்பு ஏதோ அடிச்சிருக்கு போல…வா.பூசாரியை பார்ப்போம் என்று என்றனர்.
அந்த வாலிபர்..ஆ..நான் உண்மையை சொல்லுறன் யாரும் நம்பமாட்டேங்கிறாங்களே..என்று கத்தினார். கண்ணாயிரம் கைகாட்டுவதைபார்த்த பூங்கொடி பளார் என்று கன்னத்தில் அறைய..சுடிதார்சுதா உள்பட அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.