திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு
1 min read
Tirupati Rs 300 darshan tickets will be released online tomorrow
20.9.2022
நவம்பர் மாதத்துக்கான
திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை ( புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் முறை நாளை நடக்கிறது.
அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆனால், பிரம்மோற்சவம் நடைபெறும் தேதிகளில், அதாவது அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.