June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கலை நிகழ்ச்சி, சொற்பொழிவு

1 min read

Art show, discourse in temples on the occasion of Navratri festival

21.9.2022
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருப்பணி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குட முழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்ற மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
2022-2023-ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, கோவில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை கோவில்களில் சிறப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கலைநிகழ்ச்சி

அதன்படி, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இறையன்பர்கள் பயன் பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் அந்தந்த மாவட்ட கலை பண்பாட்டுத் துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் புலவர் ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம், மதுரை, மீனாட்சியம்மன் கோயிலில் சுசித்ரா குழுவினரின் பக்தி பாட்டு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் மஹதி குழுவினரின் பக்தி இன்னிசை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் எஸ்.கே. நாட்டிய கலா நிகேதன் அகாடமி நடத்தும் பரதநாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மேல்மலையனூர், அங்காளம்மன் கோவில், சென்னை, சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் நவராத்திரி திருவிழாவின்போது ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், பக்தி இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நவராத்திரி திருவிழாவின்போது முக்கிய கோயில்களில் நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இறையன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டுக் கொண்டுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *