சினிமா இயக்குனர் பாரதிராஜா காலமானார்
1 min read
Film director Bharathiraja has passed away.
10.6.2026
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். முன்னணி நடிகர்கள், நடிகைகளை கொண்டு படத்தை இயக்கியதோடு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார்.
16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படம் இயக்கியவர்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாகள், டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ் செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இவரது மகனும் நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்தாண்டு திடீரென காலமானார். இதையடுத்து அடிக்கடி பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இன்று (ஜூன் 10) பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17ல் பிறந்தவர் பாரதிராஜா. இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி ஆகும். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்த பாரதிராஜா, இயக்குநர் பி புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து சினிமாவின் நுணக்கங்கள் அனைத்தையும் கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.