May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் காதைகடித்த பூங்கொடி/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannairam ear-biting poonkodi/ comedy story/ Tabasukumar

1.10.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு செல்லும் வழியில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சுற்றுலாபஸ்சில் சென்று கொண்டிருந்தார். உதவி டிரைவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். கண்ணாயிரம் தனது இருக்கையின் அருகே மடக்கிவைத்திருந்த குடை அசைவதைப்பார்த்து பயந்தார். என்ன ஆடுற என்று கோபத்தில் குடைமீது ஒரு தட்டு தட்டினார். அதன்பிறகு குடை அசையவில்லை. பின்னர் கண்ணாயிரமும் அவர் மனைவி பூங்கொடியும் ஏலக்காய் டீயை பல்வேறு போராட்டங்களுக்கிடைலயே குடித்து முடித்தனர். மீதி முறுக்கு பாக்கெட்டை பைக்குள் வைத்து மூடிவிட்டு பூங்கொடி தூங்கினார். கண்ணாயிரம் தூங்காமல் விழித்திருந்தார். பஸ் மின்னல் வேகத்தில் சென்றது.
குடை பற்றிய கவலை அவரை ஆட்டிப்படைத்தது. குடை கம்பி வளைந்தது எப்போது பூங்கொடிக்கு தெரியப்போகிறதோ என்று கண்ணாயிரம் யோசனையிலே இருந்தார். சுடிதார் சுதா பஸ் ஜன்னலை திறந்துவைத்து இருட்டில் ஆங்காங்கே தெரியும் மின்மினி விளக்குகளை ரசித்தப்படி வந்தார். துபாய்க்காரர் குறட்டைவிட்டு தூங்கியதில் பக்கத்து இருக்கையில் இருந்தவர்கள் தூங்கமுடியாமல் நெளிந்து கொண்டிருந்தனர். பஸ் முன்னே சென்ற வாகனங்களை ஒவர்டேக் பண்ணி சென்று கொண்டிருந்தது. விழித்திருந்த கண்ணாயிரம் ஏம்பா மெதுவா போப்பா..ஏன் இவ்வளவு அவசரம் என்று சத்தம் போட்டார். அது யார் காதுக்கும் கேட்கவில்லை.
இந்த நேரத்தில் யாரோ காலை சுரண்டுவது போல் இருக்க கண்ணாயிரம் கோபத்தில் பின்னால் இருக்கிற முதியவரை முறைத்துப்பார்த்தார். அவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.என்ன தூக்கம் ஒருபக்கம் இருட்டும். காலை ஏன் நீளமா நீட்டணும். என்காலை வேற உரசிக்கிட்டு..எனக்கு வர்ர கோபத்துக்கு ஓங்கி மிதிச்சிடுவேன்..ஆமா என்று கூறியவாறு காலை வேறுபக்கம் தூக்கிவைத்தார். இப்பம் என்ன பண்ணுவ..இப்பம் என்ன பண்ணுவ என்று சிரித்தப்படி பார்த்தார். முதியவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மீண்டும் கால்விரலை யாரோ சுரண்டுவதுபோல் தெரிய கண்ணாயிரம் டென்சனாகி..என்ன திமிர் மீண்டும் காலை சுரண்டுறாரு..மிதிச்சிடவேண்டியதுதான் என்று சொத்து சொத்து என்று காலால் மிதித்தார். ஆனால் முதியவர் எந்த சலனமும் இல்லாமல் உறங்கிக்கொண்டிருந்தார்.என்ன இவ்வளவு மிதி மிதிக்கேன்..எந்த அசைவும் இல்லாமல் இருக்கார். பயங்கரமான ஆளா இருப்பார் போல என்றபடி கண்ணாயிரம் கால்களை நீட்டி உட்கார்ந்தார். இனி ஒண்ணும் பண்ணமுடியாது…காலை நீட்டிவச்சிட்டேனே..என்று நினைத்துக்கொண்டார். இனி காலை எவ்வளவு நீட்டினாலும் ஒண்ணும் பண்ணமுடியாது ..எங்கிட்டேயே விளையாடுறாரா என்று கண்ணாயிரம் விழிப்புடன் இருந்தார்.
இந்த நேரத்தில் கண்ணாயிரத்தின் கரண்டக்காலை ஏதோ உரசுவதுபோலிருக்க..அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். பின்னால் பார்த்தார். முதியவர் வாயை பிளந்து தூங்கிக்கொண்டிருந்தார்.ம்..செய்யுறதையெல்லாம் செஞ்சிப்புட்டு தூங்கிறமாதிரி நடிக்கிறாரு..விடக்கூடாது..இது என்ன சேட்டை என்றபடி ஆவேசமாக எழுந்தார்.
தூங்கிக்கொண்டிருந்த முதியவரின் தலைமுடியை பிடித்து உலுக்கினார்.அந்த முதியவர் அதிர்ச்சியில் அய்யோ..காப்பாத்தூங்க…அய்யோ காப்பாத்தூங்க என்று கத்த டிரைவர் பஸ்சை நிறுத்தி லைட்டைப் போட்டார்.
என்ன பிரச்சினை என்ன பிரச்சினை என்று எல்லோரும் திரும்பிப்பார்த்தனர். முதியவர் தலைமுடியை கண்ணாயிரம் பிடித்திருப்பதைப்பார்த்த பயில்வான் எழுந்து ஓடிவந்தார். கண்ணாயிரம் என்ன ஆச்சு..ஏன் அவர் முடியை பிடிச்சி இழுக்கிற என்று சத்தம் போட்டார். கண்ணாயிரம் கோபம் தணியாமல்..இந்த ஆளு என்ன பண்ணுனாறு தெரியுமா..பின்னால இருந்து அவர் காலால..என் காலை சுரண்டிக்கிட்டே இருக்காரு..என்ன வெத்து பயன்னே நினைச்சாரா..விடமாட்டேன் என்று கத்த பயில்வான் ஏய் அவர் முடியைவிடுடா..பாவம் என்று சொல்ல..கண்ணாயிரம் கோபம் குறைந்து..முதியவர் தலைமுடியிலிருந்து கையை எடுத்தார்.
பயில்வான் அந்த முதியவரிடம்…ஏங்க நீங்க ஏன் கண்ணாயிரம் காலை சுரண்டுறீங்க என்று கேட்க அவர் கண்களை கசக்கியபடி..அய்யோ..நான் அப்படி செய்யலங்க..நானே எலித்தொல்லைக்கு பயந்து காலை மேல தூக்கிவச்சிக்கிட்டுவர்ரேன்..நான் ஏன் கண்ணாயிரம் காலை சுரண்டப்போறேன் என்று பரிதாபமாக கேட்டார்.
அப்படின்னா கண்ணாயிரம் காலை சுரண்டியது யார்..ஒரு வேளை எலியாக இருக்குமோ என்று பயில்வான் யோசித்தார். ச்சே..எலியெல்லாம் நான்தானே விரட்டினேன்.பின்ன எப்படி எலிவரும்..ஒருவேளை ஏதாவது ஒரு எலி பதுங்கி இருந்து இருக்குமோ..அதைச் சொன்னா கண்ணாயிரம் பயந்திடுவார்…அதனால சமாளிப்போம் என்றபடி பெரியவரே..நீங்க இடம்மாறி என் பக்கத்திலே இருங்க..பிரச்சினை சரியாகிடும் என்றார் பயில்வான். அதைக் கேட்ட முதியவர்..யப்பா..தலைமுடியை இழுத்தது என்னா வலிவலிக்குது..என்றபடி பையை தூக்கிக்கொண்டு. பயில்வான் பக்கம் போனார். அப்போது பூங்கொடி கண்விழித்து..என்னங்க ஆச்சு..பஸ் நிக்குது என்று கண்ணாயிரத்திடம் கேட்க அவர் அதுவா..டிராபிக் க்ஷாம்..பஸ் நின்னு போவுது என்று சமாளித்தார்.அப்படியா என்றபடி பூங்கொடி மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.
பயில்வான் நிலைமையை சரி செய்துவிட்டு கண்ணாயிரம் இனிபயப்படாம இருங்க..பெரியவரை இடம்மாற்றி உட்காரச்சொல்லியாச்சு என்றார். அதைக்கேட்ட கண்ணாயிரம்..ம்..சத்தம் போட்டாத்தான் கதை நடக்குது..பின்னால உட்கார்ந்து காலை சுரண்டினா..நான்விடுவேனா..ம்.. என்றபடி காலரை தூக்கிவிட்டபடி உட்கார்ந்தார்.
பயில்வான் உதவி டிரைவரிடம் ..சரி ரைட்டு என்றார். பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. விளக்கு அணைக்கப்பட்டது. கண்ணாயிரம் விழித்தபடி அங்கும் இங்கும் பார்த்தபடி அமர்ந்திருந்தார். சுடிதார் சுதா எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்மேனில் பாட்டு கேட்டப்படி தலையை அசைத்தவாறு வந்தார்.
ஐந்து நிமிடம் கழிந்திருக்கும்.மீண்டும் கண்ணாயிரத்தின் கால்பெருவிரலை யோரோ உரசுவதுபோல் இருக்க..அவர் சீட்டுக்குப் பின்னால் பார்த்தார். அங்கு யாரும் இல்லை. அப்போ..யாரு காலை உரசுறது..இருட்டிலே ஒண்ணும் தெரியமாட்டேங்குதே..காலை தூக்கி இருக்கைக்கு மேலேவைத்தார். இனி யாரும் நம்மை அசைக்கமுடியாது என்று தைரியமாக இருந்தார்.
சிறிது நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பூங்கொடி நெளிந்தார்.அவர் கால்விரலை யாரோ சுரண்டுவது போலிருக்க…அவர் கண்ணாயிரத்தை முறைத்துபார்த்தார். அவர் நிலமை புரியாமல் சிரித்தார். பூங்கொடி .ம்..சும்மா இருங்க என்று எச்சரித்துவிட்டு தலையை சாய்த்து தூங்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் மறுபடியும் உள்ளங்காலை உரசுவது போல் இருக்க..பூங்கொடி…கண்ணாயிரந்தான் காலை உரசுவதாக நினைத்து..ம்..பஸ்சிலே என்ன சேட்டை..தூக்கம் வரலைன்னா இப்படியா பண்ணுவீங்க என்று ஆவேசமாக எழுந்து கண்ணாயிரத்தின் காதை பூங்கொடி கடித்தார்.
கண்ணாயிரம் அய்யோ..அய்யோ..காது காது என்று கத்த..பூங்கொடியோ..ம் இனி காலை உரசாம இருப்பியளா என்று கத்த…பஸ்சிலிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க..கணவன் மனைவின்னா பஸ்சில காதை கடிச்சாவிளையாடுறது என்று சிரிக்க..பஸ் மதுரை மாட்டுத்தாவணி வந்து நின்றது. கண்ணாயிரம் காதை தடவியவாறு..ஆ..வலிக்குதே..என்று கத்தினார்.(தொடரும்)

வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.