May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை மாட்டிவிட்ட மல்லிகை பூ/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The jasmine flower that caught Kannayiram/Comedy story/ Tabasukumar

7.10.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்லும் வழியில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் காலை யாரோ உரசுவதுபோலிருக்க பயந்துபோன கண்ணாயிரம் தனது கால்களை இருக்கையின் மேல் தூக்கிவைத்துக்கொண்டு வந்தார். அந்த நேரத்தில் கண்ணாயிரத்தின் மனைவி பூங்கொடி காலையும் யாரோ சுரண்டுவது போல் தெரிய கண்ணாயிரம்தான் சுரண்டுவதாக நினைத்து கோபத்தில் கண்ணாயிரம் காதை பூங்கொடி கடிக்க அவர் அலற பஸ் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் வந்து சேர்ந்தது.
அப்போது லேசாக மழை பெய்து கொண்டிந்தது.விடிந்தும் விடியாத அதிகாலை நேரம் அது. பயில்வான் எழுந்து அன்பான சுற்றுலா பயணிகள் கவனத்துக்கு…பஸ் சிறிது நேரம் நிற்கும். பாத்ரூம் போறவங்க போயிட்டு வாங்க என்றார். மழை பெய்ததால் எல்லோரும் எப்படி இறங்குவது என்று யோசித்த வேளையில் சுடிதார் சுதா லேடிஸ் குடையை கையில் எடுத்துக்கொண்டு கீழே இறங்க..அதைத்தொடர்ந்து மற்றவர்களும் கீழே இறங்க தொடங்கினார்கள்.
கண்ணாயிரம் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி இருந்தார். பாத்ரூம் நினைப்பு வந்ததால் பூங்கொடியிடம் மெல்ல அந்த புதுக்குடையை கொடு..கீழே போயிட்டு வர்ரேன் என்று சொல்ல பூங்கொடி அவரை முறைத்தபடி..புதுக்குடை எதுக்கு..பழையக்குடை இருகுல்லா..அதோ மடக்கிவச்சிருக்கியளே அதை எடுத்துட்டுப் போங்க..நீங்க போயிட்டு வந்தப்புறம் நான் போயிட்டுவர்ரேன்..பையைப் பார்த்துக்குங்க என்றார்.
அதைக் கேட்டதும் கண்ணாயிரம் விழித்தார்.என்ன இது..பழைய குடையில கம்பி வளைஞ்சி போயிருக்கு..அது பூங்கொடிக்கு தெரியாது..கம்பி வளைஞ்சு போச்சுன்னு பூங்கொடியிடம் சொல்லவும் முடியாது. குடையை எடுக்காம போனா ஏன் எடுத்துட்டுப்போகலன்னு கேட்பா..எதுக்கு பிரச்சினை.பேசாம எடுத்துட்டுப்போயிட்டு பேசாம வச்சிருவோம்…என்று நினைத்தார்.
பூங்கொடியிடம் ..ஏன் பூங்கொடி பழைய குடையைத்தான் எடுத்துட்டுப்போகணுமா..புதுகுடை கிடையாதா என்று மீண்டும் கேட்டார். பூங்கொடி கோபமாக பார்க்க..சரி..சரி..பழைய குடையையே எடுத்துட்டுப்போறேன் என்றபடி இருக்கையில் சாய்ந்திருந்த பழைய குடையை தூக்கிக்கொண்டு மெல்ல பஸ்சைவிட்டு இறங்கினார். மழை கொட்டியது. அடடா..குடையை விரிக்காம போகமுடியாது போலிருக்கே..என்று குடையை மெல்ல மெல்ல விரித்தார். ஆங்காங்கே ஓட்டை தெரிந்தது. என்ன புதுசா. இப்போ ஓட்டையா இருக்கு..புரியலைய..குடை பழசாயிட்டுல்லா…அதான் ஓட்டை விழுதுபோல..என்று நினைத்துக்கொண்டார்.
குடையை தன்பலத்தையெல்லாம் கூட்டி விரித்தார். கம்பி வளைந்திருந்ததால் ஒருபக்கம் மடங்கி காணப்பட்டது. சரி..மழை தண்ணி மேல விழாம இருந்தா சரி என்றபடி குடைபிடித்தவாறு பாத்ரூமை நோக்கி நடந்தார்..அவர் பிடித்துச் சென்ற குடையின் மேல் எலி பரக்க பரக்க விழித்துக்கொண்டிருந்தது.
இது கண்ணாயிரத்துக்கு தெரியாது. கண்ணாயிரம் மற்றும் பூங்கொடி காலை சுரண்டி சேட்டை செய்த எலி பின்னர் கண்ணாயிரத்தின் குடைக்குள் பதுங்கி இருந்து ஓட்டை போட்டு துள்ளிவிளையாடியது. கண்ணாயிரம் வெளியே தூக்கி வந்தபோது குடையிலிருந்த ஓட்டைவழியாக மேல வந்து எங்கே குதிக்கலாம் என்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. இதை அறியாமல் கண்ணாயிரம் குடை பிடித்து செல்ல அதிலிருந்த எலியை பார்த்தவர்கள்..ஏப்பா..எலியப்பா என்றார்கள்.
கண்ணாயிரம் தன்பெயர்தெரியாமல்தான் இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து..நான் எலியப்பா இல்ல..கண்ணாயிரம் என்றார்.
ஆனால் அவர்கள் அதை கேட்காமல்..ஏம்பா..காது கேட்கலைய்யா..எலியப்பா .எலியப்பா என்க..கண்ணாயிரம்..அட போங்கப்பா..சும்மா கேலி பண்ணாதீங்க என்றபடி பாத்ரூமை நோக்கி சென்றார்.
கட்டணம் வசூலிப்பவர்களிடம் ஐந்து ரூபாய் நாணயத்தை கொடுத்தபோது..குடைமேலிருந்த எலியை அவர் பார்த்துவிட்டு நீங்க மட்டும்தான் பாத்ரூம் போகலாம்..எலியெல்லாம் பாத்ரூம் போகமுடியாது என்று நக்கலாக சொல்ல கண்ணாயிரம் என்ன எலியா என்றபடி குடையை மடக்க..எலி தாவிகுவித்து கட்டண கழிப்பறைக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் பாத்ரூமுக்குள் எலியை விட்டது யாரய்யா என்றபடி வேட்டி சட்டையை கையில் தூக்கியபடி அலறியடித்தபடி ஓடினார்கள்.
கட்டணம் வசூலிப்பவர் ஆத்திரத்தில்..கண்ணாயிரத்தைபார்த்து….இன்னா உன் ஐந்து ரூபா.. பிடி..வேற பாத்ரூமுக்கு போ..உள்ளே போன எலியை விரட்டலன்னா எவனும் பாத்ரூமுக்குள் போகமுடியாது. என்றவாறு ஒரு கம்பை தூக்கிக்கொண்டு பாத்ரூமுக்குள் ஓடினார்.
கண்ணாயிரம்..என்னடா வம்பா போச்சு..எலி தப்பு பண்ணுனா நான் என்ன செய்ய முடியும் .நல்ல வேளை பஸ்சைவிட்டுவந்தபிறகு எலி ஓடியிருச்சி..பஸ்சிலே ஓடியிருந்தா பூங்கொடி பிச்சியிருப்பா என்றவாறு..வேறு பக்கத்தில் உள்ள பாத்ரூமுக்கு..குடையை மீண்டும் விரித்தவாறு சென்றார்.
அங்கு குடையை மடக்கி பாத்ரூமூக்கு சென்றவர்..அப்பாட..இப்போதான் நிம்மதியாக..இருக்கு என்றவாறு ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்தார். அப்போது தப்பி ஓடிய எலியை கொல்ல நாலுபேர் தடியுடன் பாய்ந்து சென்று கொண்டிருந்தனர். என்ன இந்த எலி…எல்லோருக்கும் டேக்கா கொடுக்குது..பயங்கரமான எலி..நம்ம குடையை ஓட்டைப்போட்டுட்டு ஓடுது .நல்லா அடி வாங்கட்டும் என்று நினைத்தவர் பஸ்நிலையம் அருகே நடந்துவந்தார்.
பூங்கொடி ரொம்ப கோபமா இருக்கா..அவளை எப்படியாவது சமாதானப்படுத்தணும்..என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது..மதுரை மல்லி..மதுரை மல்லி..மணக்கும் மதுரை மல்லி..என்று சொல்லியவாறு ஒரு பெண் கூடையில் மல்லிகை பூ விற்றபடி வந்தார்.
ஆ..ஹா..பூங்கொடிக்கு மல்லிகைபூன்னா ரொம்ப பிடிக்கும்..வாங்கிடவேண்டியதுதான் என்று நினைத்தவர்..ஏம்மா..மதுரை மல்லி எப்படின்னு கேட்டார். அவர்விலையை சொன்னதும்..கண்ணாயிரம் ரொம்ப அதிதம்..கொஞ்சம் குறையுங்க ஏன்றார். குறைக்கிறேன் என்றபடி இலையில்மல்லிகை பூவை சுற்றிக்கொடுக்க கண்ணாயிரம் அதைவாங்கிக்கொண்டு ஐம்பது ரூபாயை கொடுத்தார்.
கண்ணாயிரம் அந்த பூ மழையில் நனையாதபடி குடை பிடித்தபடி பஸ்சை நோக்கி நடந்தார். அப்போது ஓடிவந்த ஒரு வாலிபர்…ஏங்க..கண்ணாயிரம் அண்ணா..மல்லிகை பூவா வாங்கியிருக்கிய என்று கேட்க..கண்ணாயிரம் ஆமா என்று சொல்ல..அந்த வாலிபர் அதை கொடுங்க..நீங்க வேற வாங்கிக்கிங்க என்றான்.
ஏண்டா..நான் ஐம்பது ரூபா கொடுத்து வாங்கியிருக்கேன்..இதை ஏன் கேட்க என்று கண்ணாயிரம் கேட்க..அந்த வாலிபரோ. ஏண்ண..நூறு ரூபாயை பிடிங்க..மல்லிகை பூவை கொடுங்க..நீங்க வேற வாங்கிக்கிங்க..நீங்கதான் நல்லாபாத்து வாங்குவீங்க என்று புகழ்ந்தான்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் குளிர்ந்து போனார். ஐம்பது ரூபாவேற கூடதருகிறேன் என்கிறான் லாபம்தானே என்றவாறு சரிப்பா..நீ கெஞ்சி கேட்கிறதால கொடுக்கிறேன். நூறு ரூபாயை கொடு என்று கண்ணாயிரம் கேட்க அந்த வாலிபர் நூறு ரூபாயை கொடுத்துவிட்டு மதுரை மல்லியை வாங்கிக்கொண்டு மழையில் நனைந்தபடி பஸ்சை நோக்கி ஓடினான்.
கண்ணாயிரம் அவனை பார்த்து விவரம் தெரியாத பிள்ளையா இருக்கான்..அங்கே போனா ஐம்பது ரூபாயுக்கு தாராளமா மல்லிகை பூவாங்கலாம்..மழையில நனைய மாச்சப்பட்டுப்போயி ஐம்பது ரூபா கூட கொடுத்து பூ வாங்கிட்டுப்போறான் என்று சிரித்துக்கொண்டு ஏற்கனவே பூவாங்கிய இடத்துக்கு சென்றார்.
ஏற்கனவே பூ விற்றுக்கொண்டிருந்த பெண் நின்று கொண்டிருந்தார். கணாணாயிரம் வேகமாசென்று இன்னொரு ஐம்பது ரூபாய்க்கு மதுரை மல்லி கொடுங்க என்றார்.
அந்த பெண் சிரித்தபடியே ஏம்பா..மல்லிகை பூ வாங்கணுமுன்னா..இனி தோட்டத்துக்குத்தான் போகணுமப்பா..ஏதோ குற்றாலம் டூர் போறவங்க வந்தாங்க..எல்லா பூவையும் வாங்கிட்டு போயிட்டாங்க..பூ இல்லை என்றார். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு சுளீர் என்றது. அந்த பெண்ணிடம் வேற எங்கேயும் கிடைக்குமா என்று பரிதாபமாக கேட்டார். அதற்கு அந்த பெண்..கொஞ்ச தூரம் நடந்துபோனா..ஒருவர் பூ விப்பாரு..மழை நேரம் இருக்காரான்னு தெரியல..போய் பாருங்க என்றார்.
கண்ணாயிரம் கொட்டும் மழையில் ஓட்டைக்குடை பிடித்தபடி..லொடக்கு லொடக்கு என்று நடந்து சென்றார். எப்படியும் பூ வாங்கியேத் தீரணுமுன்னு வேகமாக நடந்தார். சிறிது தூரத்தில் ஒருவர் குடைபிடித்தபடி கூடையில் வைத்து நின்று கொண்டிருந்தார்.
கண்ணாயிரம் அவரை நெருங்கி..பூ…பூ..மல்லிகை பூ கொடுங்க என்றார். அதற்கு அவர் குண்டுமல்லிதான் இருக்கு தரட்டுமா என்க..கண்ணாயிரத்துக்கு தலை சுற்றியது. குண்டுமல்லியை வாங்கிட்டு போனா..தடியா இருக்கிற பூங்கொடி என்னை கேலி பண்ணுறதுக்கா குண்டு மல்லி வாங்கிட்டு வந்தியன்னு சொல்லி திட்டுவா. சில நேரம் அடிப்பா. காசு கொடுத்து வாங்கிட்டு போய் அடிவாங்கவா வேண்டாம் என்று நினைத்தார்.
பூவிற்பவரிடம் வேற எங்கே மதுரை மல்லி கிடைக்கும் என்று கேட்க..பெரியார் பஸ்நிலையம் அருகே போனீங்கன்னா..மதுரை மல்லி கிடைக்கும்.என்ன நீங்க குற்றாலம் போறீங்களா…ஏற்கனவே குற்றாலம் போறவங்கதான் வந்து மல்லிகை பூ வாங்கிட்டு போனாங்க என்றார்.
அப்போதுதான் கண்ணாயிரத்துக்கு தான் ஏமாந்தது தெரிந்தது.ஆனாலும் ஐம்பது ரூபா லாபம்தான். பெரியார் பஸ்நிலையத்திலே போய் மதுரை மல்லி வாங்கிடலாமுன்னு நினைத்த கண்ணாயிரம் வேகவேகமாக சுற்றுலா பஸ்சை நோக்கி ஓடினார்.
அவர் வருகைக்காக..காத்திருந்த பூங்கொடி ஏன் இவ்வளவு நேரமாச்சு..மல்லிகை பூ எங்கே என்று கண்ணாயிரத்திடம் கேட்டார். கண்ணாயிரம்..மல்லிகை பூவா..அது நல்லா இல்ல..பெரியார் பஸ்நிலையத்துக்கு போனா..நல்ல மல்லிகை பூ கிடைக்குமாம்..அங்கே வாங்கிக்கிடுவோம் என்றார்.
பூங்கொடி கோபத்துடன்..சுடிதார் சுதாவுக்கு மல்லிகை பூ வாங்கிக்கொடுத்திருக்கீங்க என்று பூங்கொடி எகிற..கண்ணாயிரம் இல்லை என்க ஒரு வாலிபர் எழுந்து..கண்ணாயிரந்தான் சுடிதார்சுதாவுக்கு மல்லிகை பூ வாங்கிக்கொடுத்தார் என்றான். நூறு ரூபாய் கொடுத்து மல்லிகை பூவாங்கி தன்னை மாட்டிவிட்ட வாலிபரை கண்ணாயிரம் அடையாளம் கண்டு..ஏய் என்னை மாட்டிவிட உனக்கு இந்த புனிதமான மல்லிகை பூதான் கிடைச்சுதா..என்க.. அடுத்து என்ன நடக்கப்போகுது என்று எல்லோரும் ஆவலோடு பார்த்தனர்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.