May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு கிடைத்த குடை அடி/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram feet by umbrella / Humorous Story/ Tabasukumar

17.10.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோது பஸ்சில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை மாட்டுதாவணி பஸ்நிலையம் அருகே பஸ்வந்து நின்றது. அப்போது மழை பெய்ததால் கண்ணாயிரம் கம்பி வளைந்த குடையை பிடித்து சென்று ஐம்பது ரூபாய்க்கு மதுரை மல்லி வாங்கிவர எதிரே வந்த வாலிபர் நூறு ரூபாய் கொடுத்து கண்ணாயிரத்திடம் மல்லிகை பூவை வாங்கி சுடிதார் சுதாவிடம் கொடுத்தார். இதை அறியாமல் கண்ணாயிரம் வேறு மல்லிகைபூ கிடைக்குமா என்று தேடி அலைய எங்கும் மதுரை மல்லி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் பஸ்சுக்கு திரும்பிவந்தார்.
பஸ்செல்லாம் மல்லிகை வாசமாக இருந்தது. சுடிதார்சுதா தலையில் மல்லிகைபூ வைத்து புன்னகையுடன் இருந்தாள். கண்ணாயிரம் மல்லிகைபூ வாங்கிவருவார் என்று ஆசையோடு காத்திருந்தார். கண்ணாயிரத்தைப் பார்த்தவுடன் மல்லிகை பூ எங்கே என்று கேட்க…கண்ணாயிரமோ..அது..இங்கே நல்லா இல்லை. பெரியார் பஸ்நிலையத்துக்குப் போயி நல்ல மல்லிகை பூவாங்கிடலாம் என்றார்.அதைக்கேட்டு கோபம் அடைந்த பூங்கொடி மெல்ல..எனக்கு மதுரை மல்லிகைபூ வாங்கிட்டு வரல…ஆனா சுடிதார் சுதாவுக்கு மல்லிகை பூ வாங்கி கொடுத்திரிக்கீங்கள் .அது எப்படி என்று கேட்டார். அதைக்கேட்ட கண்ணாயிரம் திடுக்கிட்டபடி..சுடிதார் சுதாவுக்கு நான்மல்லிகை பூவாங்கிக்கொடுக்கல…என்றார்.
உடனே ஒரு வாலிபர் எழுந்து..இல்லை..பொய் சொல்லுறாரு. சுடிதார்சுதாவுக்கு கண்ணாயிரம்தான் மல்லிகைபூ வாங்கிக் கொடுத்தார் என்று சொல்ல அந்த வாலிபரை கூர்ந்துபார்த்த கண்ணாயிரம்…ஆஹா…அவனா..இவன்..நூறு ரூபாய் கொடுத்து.. நமக்கிட்ட மல்லிகைபூவை வாங்கிக்கிட்டுப்போயி இப்படி மாட்டிவிட்டுட்டானே…என்று சத்தம்வராமல் அந்த வாலிபரை திட்டினார்.
அதைக்கேட்ட பூங்கொடி..என்ன முணங்குறீங்க…மல்லிகைபூ வாங்கி கொடுத்தியளா இல்லையா..என்று மீண்டும் கேட்டார். உடனே..அது வந்து..மல்லிகை பூவாங்கி கொடுத்தேன்..அதாவது..என்று கண்ணாயிரம் இழுக்க..என்ன அதாவது வந்து..இல்லைன்னுக்கிட்டு சுடிதார்சுதாவுக்கு மல்லிகை பூவாங்கி கொடுத்தியளா இல்லையா…சொல்லுங்க என்று பூங்கொடி கண்களை உருட்ட கண்ணாயிரமோ இல்லை என்றார்.
உடனே அந்த வாலிபர் எழுந்து பூங்கொடி அக்கா..அவர் பொய் சொல்லுறாரு..என்றுசொல்ல பூங்கொடி கண்ணாயிரத்தை முறைத்தார்.
கண்ணாயிரம் மெல்ல..பூங்கொடி என்ன நடந்துச்சுன்னா..நான் மழையில் குடைபிடிச்சிக்கிக்கிட்டு பாத்ரூம்போனேனா..என்று இழுக்க..பூங்கொடி கோபத்தில் ஏங்க..நீங்க பாத்ரூம் போன கதையெல்லாம் வேண்டாம் பூவாங்கிக்கொடுத்த கதயைச்சொல்லுங்க…என்று சத்தம்போட்டார்.
கண்ணாயிரம் கண்களை துடைத்துக்கொண்டு..அதாவது நான் பாத்ரூமுக்கு போயிட்டு வெளியே வந்தேனா…சோன்னு மழை கொட்டிச்சா..அப்போ..மதுரை மதுரை மல்லின்னு சொல்லி கூடையிலேவச்சு ஒரு பொண்ணு மல்லிகை பூ வித்துச்சா…குடையை பிடிச்சிக்கிட்டே பக்கம் போனேன்.வாசம் கம்முன்னு இழுத்தூச்சா..பூங்கொடிக்கு பிடிக்குமேன்னு நினைச்சு ஐம்பது ரூபா கொடுத்து வாங்கினேனா..மழை சோன்னு பெஞ்சுதா..குடையை பிடிச்சிக்கிட்டே..மழையிலே பூ நனையாம நடந்து வந்தேனா..என்று கதையாக சொல்ல பூங்கொடி இடைமறித்து எனக்குத்தானே பூவாங்கினீங்க..அந்த பூவை எங்கே என்று கேட்டார். கண்ணாயிரம் கோபத்தில் நான் சொல்லும்போது இடைமறிச்சா எனக்கு அடுத்துபேசவராது..அமைதியா இரு சொல்லுறன் என்று கண்ணாயிரம் மீண்டும் தொடர்ந்தார். அதாவது மழை சோன்னு பெஞ்சுதா..நான் மல்லிகை பூவாங்கிட்டு வந்தேனா…அப்போ இந்த வாலிபர் மழையில் நனைஞ்சுக்கிட்டு ஓடிவந்தான். அண்ணே..அண்ணே..நீங்க நல்லவரு வல்லவரு…நாலும் தெரிஞ்சவரு..நீங்க மல்லிகை பூ நல்லாபாத்து வாங்குவுங்க..நீங்க வாங்குன மல்லிகை பூவை கொடுங்க…நீங்க புதுசா வாங்கிக்கிடுங்கன்னு சொன்னான். ஏன் அப்படி சொல்லுறான்னு நான் யோசிக்கிறதுக்குள்ள என் ஒருகையிலே ரூபாயை வச்சிட்டு என் மற்றொரு கையிலிருந்த மல்லிகை பூவை வாங்கிட்டுப்போயிட்டான். இங்கே வந்து சுடிதார் சுதாக்கிட்ட கொடுத்துட்டான்..இதுதான் நடந்துச்சு என்று சொல்ல ம்..ரூபாய் கொடுத்தா அந்தாக்கல பூவை கொடுத்திடுவியளா..என்று திட்டினார்.
கண்ணாயிரம் மெல்ல சத்தம் போடாத..லாபம் இல்லாம..நான் அப்படி செய்வேனா..ஐம்பது ரூபா கொடுத்து வாங்கின பூவை நூறு ரூபாய்க்கெல்லா நான் கொடுத்தேன். கண்ணாயிரமா..கொக்கா என்று காலரை தூக்கிவிட்டுக்கொண்டார்.
பூங்கொடியும் கோபம் தணிந்து என்புருஷன் அறிவே அறிவு…என் கண்ணே பட்டுடும்போல இருக்கு..ஐம்பது ரூபா ஒரு நிமிஷத்திலே சம்பாதிச்சிட்டாரு..என்று பாராட்டினார்.
கண்ணாயிரம் வெட்கம் தாங்காமல் நெளிய,பூங்கொடி அவரிடம் போதும் போதும் உட்காருங்க..அந்த குடையை குடுங்க…நான் பாத்ரூம்போயிட்டு வர்ரேன்.இங்கே இருக்கிற பையைப் பாத்துக்குங்க..என்றபடி இருக்கையைவிட்டு எழுந்தார்.
கண்ணாயிரம் மெதுவாக பூங்கொடி..அந்த புதுக்குடையை எடுத்துட்டுப்போ..பழைய குடை எதுக்கு…குடையா அது..ஓரே தண்ணியா இருக்கு என்று சொன்னார்.அதைக்கேட்டதும் பூங்கொடிக்கு கோபம் வந்தது.என்னங்க..இது சாதாரண குடையில்லங்க..பழைய குடைன்னாலும் பாரம்பரியம்மிக்க குடை..எங்க பாட்டிகாலத்திலே இருந்து பிடிச்சிட்டுவர்ரோம்..எவ்வளவு ஸ்டிராங்கு..தெரியுமா என்று சொல்ல கண்ணாயிரம் பதில் சொல்லாமல் குடையில் உள்ள ஓட்டையெல்லாம் தெரியப்போகுதே நான் என்ன செய்வேன் என்று மனசுக்குள் முணங்கினார்.
பூங்கொடி கோபத்தில் ஏங்க..புதுக்குடையை குற்றாலத்திலே போயிபிடிப்போம்.இப்போ பழைய குடையை குடுங்க..ஏன் மசமசன்னு நிக்கிங்க..குடுங்க என்று கத்தினார். கண்ணாயிரம் என்ன ஆகப்போவுதோ என்ற பயத்தில் பழைய குடையை மடக்கி பூங்கொடியிடம் கொடுத்தார். பூங்கொடி அதை கையில் வாங்கிக்கொண்டு வேகவேகமாக பஸ்சைவிட்டு இறங்கினார். கண்ணாயிரத்துக்கு பக்பக் என்று அடித்துக்கொண்டது. பஸ்சைவிட்டு இறங்கிய பூங்கொடி மழை பெய்வதைப் பார்த்து என்ன மழை..இப்போ விடாது போலிருக்கு என்றபடி குடையை விரிக்க முயன்றார்.
குடைவிரியவில்லை.என்ன ஆச்சு..ஈசியா..விரியும்..இப்போ குடைவிரியமாட்டேங்குது..மீண்டும் முயற்சிசெய்து பார்த்தார். அப்போதும் குடைவிரிய மறுத்தது.ம்..இந்த மனுசன் குடையை ஏதும் பண்ணிட்டாரான்னு தெரியலையே..என்றவாறு மீண்டும் பஸ்சுக்குள் ஏறியபடி ஏங்க…குடைவிரிய மாட்டேங்குது என்று கண்ணாயிரத்திடம் சொல்ல அவரோ..ஆ..குடை விரியமாட்டேங்குதா..நான்விரிச்சேனே..நல்லாதான விரிஞ்சுது…நல்லா அழுத்திப்பாரு என்றார்.
பூங்கொடி கோபத்தில் அப்போ நான் சரியா விரிக்கலன்னு சொல்லுறீயளா..உதைப்பேன் என்று கத்தினார். கண்ணாயிரத்துக்கு பக் என்றது. பூங்கொடி உன்னை குறை சொல்லல..முயற்சி பண்ணிப்பாருன்னு சொன்னேன் என்க…பூங்கொடியோ..இந்த கதையெல்லாம்விடாதுங்க..இங்கே வாங்க குடையை விரிச்சிக்காட்டுங்க என்று அழைத்தார். கண்ணாயிரம் ஆ..ஆ மாட்டிக்கிட்டேன் என்றபடி எழுந்துவந்தார்.
பூங்கொடி முறைத்துப்பார்க்க ..கண்ணாயிரம் இனி சமாளிக்கமுடியாது போல..நாமளே நைசா குடையை விரிச்சிக்கொடுத்திடுவோம் என்று நினைத்தார். ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பூங்கொடி கோபப்படாதே..என்றபடி அவரிடமிருந்து குடையை வாங்கினார். திரும்பி நின்றுக்கொண்டு மெதுவா குடையை விரிக்க முயற்சிசெய்தார். வளைந்த கம்பிகள் கண்ணில்பட ச்சே..இந்த நேரம்பார்த்து விரியமாட்டேங்குது பாரு என்று பற்களை கடித்தபடி குடையை வேகமாக விரிக்க..ஒரு சைடா சாய்ந்தபடி குடை விரிந்தது. கோபத்தில் இருந்த பூங்கொடியிடம் குடையை நீட்டினார். அது இருந்த நிலையைப்பார்த்து என்ன இது என்று பூங்கொடி கேட்க கண்ணாயிரம் மெல்ல குடை..என்றார். ஏன் வளைஞ்சிருக்கு என்று பூங்கொடி கேட்க..கண்ணாயிரமோ..அதா பஸ்சு வளைஞ்சு வளைஞ்சு வந்துச்சா..அதான் குடையும் வளைஞ்சிருக்கு என்று சொல்ல பூங்கொடி ஆத்திரத்தில் அப்படியா..குடையை நெளிசல் எடுப்போம் என்று சொல்லிஅந்த குடையை பறித்து கண்ணாயிரத்தின்மீது சரமாரியாக தாக்கினார்.கண்ணாயிரம்…ஆ..போதும்..குடை சரியாயிருக்கும் என்று சொல்லி சிரிக்க..மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.