May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு கைகொடுத்த பூ/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

A flower that gave hand to Kannayiram / comedy story / Tabasukumar

29/10/2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு சுற்றுலாசெல்லும் வழியில் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவரது மனைவி பூங்கொடி குடைபிடித்துச்செல்ல முயற்சி செய்ய குடையை விரிக்க முடியாததால் கண்ணாயிரத்தை அழைத்து குடையை விரிக்கசொல்ல அவர் விரிக்க குடைகம்பி உள்ளே உடைந்திருந்ததால் குடை ஒருபக்கம் சாய்ந்தபடி இருந்தது. இதைபார்த்து கோபம் அடைந்த பூங்கொடி குடையால் கண்ணாயிரத்தை அடிக்க..நெளிந்த கம்பி சரியாகி குடை ஒரு வடிவத்துக்கு வந்தது.
பூங்கொடி அந்த குடையை பிடித்தபடி பாத்ரூமுக்கு செல்ல கண்ணாயிரமோ நல்லவேளை குடையில் உள்ள ஓட்டையை பூங்கொடி கவனிக்கல..தப்பிச்சேன் என்று மனதை தேற்றிக்கொண்டார்.
பஸ்சில் ஏறிச்செல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்தார். அப்போது பூம்பூம் மாட்டுக்காரர் ஜோடிக்கப்பட்ட தனது மாட்டை மழைக்காக கடையின் ஓரத்தில் நிறுத்தி இருந்தார். அது தலையை ஆட்டுவதை கண்ணாயிரம் பார்த்து ரசித்தார். ஏன் இந்த மாட்டுக்கு மட்டும் இப்படி ஜோடிச்சிருக்காங்க என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டார். அதற்கு அவர் இது சாமி மாடுங்க…இந்த மாட்டிடம் ஆசிவாங்கினா நல்லது நடக்கும் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா என்று மாட்டைபார்த்து வணங்கினார். நல்லது நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது அவருக்கு இந்த இடத்துக்கு மாட்டுத்தாவணின்னு ஏன் பெயர்வந்ததுன்னு ஒரு சந்தேகம் வந்தது. பூம்பூம்மாட்டை பார்த்தார். மாட்டில் தொங்கவிட்டிருக்கும் ஆடையையும் பார்த்தார். அவருக்கு லேசா புரிந்தமாதிரி இருந்தது. ஆ.. கண்டுபிடிச்சிட்டேன்..மாட்டுக்கு தாவணிபோடும் இடம் மாட்டுத்தாவணி..ச்சே..அது தாவணி மாதிரி தெரியலையே…தாவணி இப்படியா இருக்கும் என்றபடி தாவணி அணிந்த சென்ற ஒரு இளம்பெண்ணை உற்றுப்பார்த்தார்.
அப்போது அங்கு வந்த பூங்கொடி இதைபார்த்து விட்டார். அவ்வளவுதான் ..என்ன உத்துப்பாக்கிறீங்க…நான்கொஞ்ச நேரம் இல்லன்னா..ஆளே மாறிடுவுங்களே…அங்கே என்ன லுக்கு என்று ஏச கண்ணாயிரம் பயந்துபோனார்.
இல்லம்மா…தாவணி எப்படியிருக்குமுன்னு ஒரு சந்தேகம்..அதான் அப்படி பார்த்தேன் என்று இழுத்தார்.
வாங்க..சந்தேகம் எதிலேவர்ரதுன்னு அளவே கிடையாதா..ஏறுங்க பஸ்சிலே..இந்த குடையிலே என்ன ஓட்டையாயிருக்கு…என்று கண்ணாயிரத்தை இழுத்துக்கொண்டு பஸ்சில் பூங்கொடி ஏறினார்.
கண்ணாயிரம்..அது வந்து..குடை நல்லா காற்றோட்டமா இருக்குல்ல..என்று சமாளித்தார். பூங்கொடி விடவில்லை. குடையில் ஏன் ஓட்டை விழுந்துச்சு என்று மறுபடியும் கேட்டார்.
கண்ணாயிரம் எலிகதையை சொல்லவா வேண்டாமா என்று திணறினார். என்ன மவுனமா இருக்கிறீங்க…குடையிலே எப்படி ஓட்டை விழுந்ததின்னு தெரியுமா..தெரியாதா என்று மீண்டும் கேட்க கண்ணாயிரம் தலையை ஆட்டினார்.
உடனை பூங்கொடி சரி..உங்களுக்கு தெரியாதுல்லா..இனி இந்த குடையை நீங்கதான் வச்சிக்கிடணூம்..குற்றாலத்துல இந்த குடையைத்தான் நீங்க பிடிக்கணும் என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு எலிமேல் பயங்கர கோபம் வந்தது.
நீ ஏதாவது பண்ணிட்டுப்போக..நான்மாட்டிக்கணுமா…விடமாட்டேன் உன்னை..என்று மனதுக்குள் சபதமிட்டார்.
அப்போது பயில்வான் பஸ்சில் ஏறினார். என்ன பிரச்சினை…என்று கண்ணாயிரத்திடம் கேட்க..கண்ணாயிரமும்..வாங்க அண்ணாச்சி இந்த கொடுமையை என்வாயால எப்படி சொல்வேன்…என்று இழுக்க அப்படின்னா எழுதிக்காட்டு என்று பயில்வான் மடக்க..போங்கண்ண நல்லா ஏழுத தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன் என்று கண்களை கசக்கினார்.
பயில்வான் அவரை சமாதானப்படுத்தி ஏன் காதில ரகசியமா சொல்லுங்க என்க கண்ணாயிரம் மெல்ல இந்த இடத்துக்கு மாட்டுத்தாவணின்னு எப்படி பெயர்வந்துச்சு என்ற சந்தேகத்தையும் பூம்பூம்மாட்டுக்கு போட்டிருப்பது தாவணியா போர்வையா என்ற சந்தேகத்தையும் கிளப்பினார்.
பயில்வான் முறைத்து பார்த்துவிட்டு உங்களுக்குத்தான் இப்படியெல்லாம் சந்தேகம் வருது..பூம்பூம்மாட்டுக்கு போட்டிருப்பது தாவணியல்ல..அது அலங்கார போர்வை. புரியுதா என்று சொல்ல கண்ணாயிரம் புரியுது.. ஆனா..இந்த இடத்துக்கு மாட்டுத்தாவணின்னு ஏன் பெயர்வந்தது என்று கேட்டார்.
உடனே பயில்வான்..அது சரியா தெரியல…சுடிதார்சுதாவுக்குத்தான் அது தெரியும்.நான் கேட்டுப்பார்க்கிறேன் என்றார்.
ஆங்கில நாவல் படித்துக்கொண்டிருந்த சுடிதார்சுதாவிடம்…சுதாம்மா..ஒரு சின்ன சந்தேகம்..இந்த இடத்துக்கு மாட்டுத்தாவணின்னு ஏன் பெயர்வந்தது தெரியுமா என்று பயில்வான் கேட்டார்.
சுடிதார் சுதா நாவலை மடக்கிவைத்துவிட்டு..கண்ணாயிரம் கேட்டாரா..இது சிம்புள் கொஸ்டின்…இந்த பகுதியிலே முன்பு மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தையில் மாடுகள் அணிவகுத்து நிற்கும்.சில மாடுகள் தாவிதாவி ஓடும். மாடுகள் தாவித்தாவி அணிவகுத்து நிற்கும் இடம் மாட்டுத்தாவணியாகிற்று என்றார்.
கண்ணாயிரம் சந்தோஷத்தில் கைத்தட்டினார்.
சுடிதார்சுதா தேங்ஸ் என்க பூங்கொடி கண்ணாயிரத்தின் காதை திருகினார்.ஆ..என்று அவர் கத்த பூங்கொடி சிரித்தார்.
சுடிதார் சுதா எழுந்து உங்களுக்கு ஜிகிர் தண்டா தெரியுமா என்று கேட்டார். உடனே கண்ணாயிரம் எழுந்து எனக்கு அடிதண்டாதான் தெரியும் என்றார். மற்றவர்களும் எங்களுக்கும் தெரியாது என்றார்கள்.
இதையடுத்து சுடிதார் சுதா பேசினார். “இது மதுரையில ரொம்ப பேமஸ்..குளிர்பானம் மாதிரி .இதற்கு ஜிகிர்தண்டான்னு ஏன் பெயர்வந்தது தெரியுமா..ஜிகிர்தண்டான்னா…ஹிந்தி வாக்கியம். இதற்கு தமிழில் இதயத்துக்கு குளுமையானது என்று அர்த்தம்.” என்றார்.
கண்ணாயிரம் உடனே ஜிகிர்தண்டான்னா ‘இந்தி’யா என்று வாய்பிளந்தார். மற்றவர்கள் பெயரில என்ன இருக்கு..அது எங்கே கிடைக்கும் என்று கேட்க பெரியார் பஸ்நிலையம் அருகே கிடைக்கும்.வாங்கிப்பருகலாம் என்றார் சுடிதார் சுதா.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் என்ன அது ரொம்ப குளுமையா இருக்குமா..மழைவேற பெய்யுதே சளிபிடிக்காதா என்று கேட்டார். அது குளுமையா சுவையா இருக்கும்..சாப்பிட்டுப்பார்த்தாத்தான் அதன் அருமை தெரியும் என்று சுடிதார் சுதா சொல்ல..கண்ணாயிரம் நாக்கில் எச்சில் ஊறியது..ஆ..பெரியார் பஸ்நிலையம் வழியா போங்க…நானும் மல்லிகை பூ வாங்கணும் என்று கண்ணாயிரம் அடம்பிடித்தார்.
பயில்வான்..என்ன சாப்பிடுற பொருள் உள்ள ஊரா போனா எப்போ குற்றாலம் போறது..சீசன் முடிஞ்சிடும் என்று எகிறினார்.
இளைஞர்கள் கோரஷாக…சுடிதார்சுதா என்ன விரும்புகிறாங்களோ அதை செய்யுங்க..இந்த டூரே அவுங்களுக்காகத்தான் என்றனர்.
கண்ணாயிரமும் பயில்வானிடம்..ம் கொஞ்சம் பாத்து செய்யுங்க என்றார். டிரைவரோ போலீஸ் தடுத்தா நீங்கதான் பதில் சொல்லணுமுன்னு சசொல்ல இளைஞர்கள் நாங்க பேசிக்கொள்கிறோம் என்றனர்.
சரிப்பா..எல்லோரும் பஸ்சில் ஏறியாச்சா..ஆ..எல்லாம் சரியா இருக்கு ரைட்டு என்றார் பயில்வான்.
பஸ் மாட்டு தாவணியிலிருந்து பெரியார் பஸ்நிலையத்தை நோக்கி விரைந்தது. கண்ணாயிரம் வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி பயணித்தார். ஜிகிர்தண்டா குளிரா இருந்தாஎன்ன வாங்கிவச்சிக்குவோம்…வெயில் அடிச்சவுடன் சாப்பிடுவோம் என்று நினைத்தார். இந்த பெயரு வேற வாயில நுழைய மாட்டேங்குது.அடிக்கடி மறந்து போகுது அடிதண்டா..இல்ல..இல்ல..வேற என்னவேல்லா சொன்னா…இதுக்குத்தான் இந்தி நுழையக்கூடாதுன்னு சொல்லுறது..மனசிலேயும் நிக்கமாட்டேங்குது..காதிலேயும் நுழையமாட்டேங்குது என்று புலம்பியபடி இருந்தார்.
முதலில் இந்த மல்லிகை பூவை வாங்கி பூங்கொடியை சமாதானப்படுத்தணூம்.அப்புறந்தான் அந்த அடிதண்டாவை பாக்கணும் என்று சொல்லிக்கொண்டார்.
பஸ் வேகமாக சென்றது.குறிப்பிட்ட தூரம் சென்றதும் போலீசார் மறித்து மாற்றுவழியை சொல்ல…கண்ணாயிரம் திடுக்கிட்டார். பஸ்சில் இருந்தபடியே..என்ன நீங்க..மாட்டுத்தாவணியிலே மல்லிகை பூ கிடைக்கல..பெரியார் பஸ்நிலையத்திலே கிடைக்குன்னா..அங்கேயும் போகவிடமாட்டிக்கிறுங்க…என்ற உளர..போலீஸ்காரர் அது புரியாமல் என்னய்யா உளறுற..டிராபிக் நெருக்கடியாகிடும் போகக்கூடாது என்க கண்ணாயிரம் ஏதோ உளற புதுவை போலீஸ் வேன் ஒன்று வேகமாக அங்கு வந்தது.
சுற்றுலா பஸ்சில் கண்ணாயிரத்தை பார்த்த புதுவை போலீசார் ஆச்சரியத்துடன்..என்ன கண்ணாயிரம் இங்கே என்று கேட்க கண்ணாயிரம் ஏதோ பூ..பூ என்று உளற கள்ளநோட்டு வாலிபரைத்தான் கோட்வேர்டில் பூ பூ என்கிறார் என்று புரிந்து கொண்டு..ஓ..அவனை தேடிப் போறீயளா..சீக்கிரம் கண்டுபிடிங்க என்றனர்.
கண்ணாயிரம் பஸ்சை வழிமறித்த போலுஸ்காரரை காட்ட புதுவை போலீஸ்காரர்கள் அந்த போலுஸ்காரர் அருகில் சென்று பஸ்சிலிருக்கிறது சாதாரண ஆள் இல்லை.போலீசுக்கு உதவும் இன்பார்மர்.கள்ளநோட்டு கும்பல் தலைவனை பிடிக்க நியமிக்கப்படிருக்காரு என்று தெரிவித்தனர்.
போலீஸ்காரர் அதை நம்பாமல் கோணயன்மாதிரி இருக்கான்.ஏதோ பூ..பூன்னு கத்துறான் என்றனர்.
அதற்கு புதுவை போலீசார்…ஏங்க இன்பார்மர் அப்படித்தான் இருப்பாங்க..அப்பத்தான குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியும் என்க..அவர் அப்படியா…இந்த பஸ் மட்டும் போகட்டுமுன்னு வழிவிட பஸ் மின்னல் வேகத்தில் பறந்தது.
கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல் விழிக்க..எல்லோரூம் கண்ணாயிரம் கையைபிடித்து குலுக்கினார்கள்.சுடிதார் சுதா எழுந்து கைகுலுக்கவர கண்ணாயிரம் பதுங்கிக்கொண்டார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.