May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

குடையை தவறவிட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram who missed the umbrella/ comedy story/ Tabasukumar

5.11.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும் வழியில் மதுரை வந்தார். மல்லிகை பூ வாங்கவும் ஜிகர்தண்டா சாப்பிடவும் பெரியார் பஸ்நிலையம் சென்றார். ஜிகர்தண்டா இந்தி பெயர் என்பதால் அது நினைவுக்கு வராமல் தடுமாறிய கண்ணாயிரம் அதன் தமிழ் சொல்லான இதய குளுமை வேண்டும் என்று கேட்க கடைக்காரர் அதன் பொருள் புரியாமல் தடுமாற சுடிதார் சுதா கடைக்காரரிடம் சொல்லி ஜிகர்தண்டா கொடுக்க சொன்னார். அதை கடைக்காரர் கண்ணாடி கிளாசில் தர கண்ணாயிரம் வாங்கி டீயூஸ்பூனில் எடுத்து சாப்பிட்டார். சொத்தைபல்லில்பட்டு குளிர்ச்சிதாங்காமல் ஆ..என்று கத்தினார்.
இதயகுளுமை இதயத்துக்கு நல்லா இருக்கு..பல்லுக்கு நல்லா இல்ல..ஓரே குளிரு..பல்எல்லாம் கூச்சமாக இருக்கு.. பல்லில்படாமல் விழுங்கிடவேண்டியதுதான் என்று நினைத்த கண்ணாயிரம் ஜிகர்தண்டாவை அப்படியே வாயில் ஊற்றினார்.காசு கொடுத்து வாங்கியதை வீணாக்கக்கூடாது என்று நினைத்தார். ஆனாலும் குளிர்தாங்காமல் கிடுகிடு என்று ஆடினார். சுடிதார்சுதா கண்ணாயிரத்திடம் கையை அசைத்துவிட்டு நடந்தார். கண்ணாயிரம்..அட..இது வேற வம்பா..யாராவது பார்த்தா பூங்கொடியிடம் போட்டுக்கொடுத்திடப்போறாங்க. என்றபடி முகத்தை திருப்பிக்கொண்டார்.
ஒருவழியாக ஜிகர்தண்டாவை குடித்து முடித்த கண்ணாயிரம்…ச்சே..டேஸ்டு நல்லாத்தான் இருக்கு..ஆனா இந்த குளிருதான் சரியில்ல ..பூங்கொடிக்கு ஒண்ணு வாங்கிட்டுப்போவோம்…சந்தோஷப்படுவா என்று நினைத்த கண்ணாயிரம்..கடைக்காரரிடம் ஒரு இதயக்குளூமை ஒரு பார்சல் என்று கத்தினார். கடைக்காரர் ஒருமாதிரியாக பார்த்துவிட்டு..அதுவும் பார்சலா..நல்லா இருக்கு என்று கூறியவாறு ஒரு பாக்கெட்டில் இதயகுளுமை கொடுக்க கண்ணாயிரம் காசை குடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் பஸ்சை நோக்கிவீரநடை நடந்தார்.
பூங்கொடியை பார்த்து …பூங்கொடி இது தேவாமிர்தம் மாதிரி இனிக்கும்.பாலு ஐஸ்கிரிம் எல்லாம் போட்டிருக்கு..சாப்பிடு..என்று கொடுத்தார். பூங்கொடியும் மகிழ்ச்சியுடன் வாங்கியவர் என்ன குளிரா இருக்கு…பாத்திரத்தில் ஊத்தித்தான் குடிக்கணும்..என்றார். பூங்கொடி மகிழ்ச்சி அடைந்ததால் கண்ணாயிரமும் மகிழ்ச்சி அடைந்தார்.
பூங்கொடி பாத்திரத்தில் ஊற்றி இதயகுளுமையை கொஞ்சம் குடித்துப்பார்த்தார்.ஆ..ஹா அருமை..என்னசுவை என்றவாறு குடித்தார். அந்த அழகை கண்ணாயிரம் பார்த்து ரசித்தார். தன்னை பூங்கொடி பாராட்டமாட்டாரா என்று ஏக்கத்தில் பார்த்தார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.
பூங்கொடி மெல்ல கண்ணாயிரத்தைப் பார்த்து..உங்களால் நல்லதைப் பார்த்துவாங்க முடியாதே..இதை எப்படி வாங்கினீங்க..வேற யாராவது உங்களுக்கு உதவி பண்ணினாங்களா என்று கேட்டார். கண்ணாயிரம் உடனே..அது..நானாதான் பார்த்து கேட்டு வாங்கினேன் என்று மார்தட்டினார். அதைப்பார்த்த சுடிதார்சுதா..ஏங்க அவராத்தான் வாங்கினாரு..ஜிகர்தண்டான்னு பெயர் சொல்லத் தெரியாம குழம்பினாரு..நான்தான் கடைக்காரருக்கிட்ட விளக்கிச்சொல்லி. கொடுக்கச்சொன்னேன். கடைக்காரர் கொடுத்தார் என்று சிரித்தபடி சொன்னார்.
பூங்கொடி கண்ணாயிரத்தை முறைக்க..இல்ல..இல்ல..நான்தான்..நானேத்தான் காசு கொடுத்து ஒருபார்சல் என்று சத்தம்போட்டு கேட்டு வாங்கிவந்தேன் என்று விளக்கம் தந்தார்.
பூங்கொடி..நீங்கத்தான வாங்கீனிங்க..உண்மையை சொல்லுங்க..நீங்க வாங்கித்தந்தாத்தான் நான் சாப்பிடுவேன் என்று பூங்கொடி அடமீபிடித்தார். கண்ணாயிரம் உடனே..நானே குடிச்சிப்பார்த்துட்டு நல்லா இருந்தப்பறந்தான் வாங்கினேன் என்றார். அதைக்கேட்ட பூங்கொடி..ஏங்க எச்சில் பண்ணிட்டுத்தான் வாங்கினீங்களா…உங்களை என்று அடிக்கப்பாய..கண்ணாயிரம் உஷாராகி..இல்ல..இல்ல..நான் தனியா வாங்கிசாப்பிட்டுப் பார்த்தேன். அது நல்லா டேஸ்டா இருந்துச்சு…அப்புறந்தான் உனக்கு தனியா இதய குளுமை பார்சல்வாங்கிவந்தேன் என்றார்.
பொய்சொல்லலையே என்றபடி பூங்கொடி ஜிகர்தண்டாவை குடித்தார். கண்ணாயிரம் குளிருதா என்று கேட்டபடி சிரித்தார். பூங்கொடி..ம்.குளிருது…குளிருது..என்றவாறு ருசித்து குடித்தார்.ம்..நான் பார்த்து வாங்கியதாச்சே..நல்லா இல்லாம எப்படிபோகும்..என்று கண்ணாயிரம் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார்.
பூங்கொடி பாதி குடித்துவிட்டு மீதியை பாத்திரத்தில் மூடிவைத்தார்.கண்ணாயிரம் அதைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவராக வந்து பஸ்சில் ஏறினார்கள். பயில்வானும் வந்து பஸ்சில் ஏறினார். எல்லோரும் வந்தாச்சா என்று கேட்டவர் பஸ்சில் சுற்றிப்பார்த்தார். ஆ..எல்லோரும் வந்தாச்சு…இனி நேரா நெல்லை போகவேண்டியதுதான்..இடையில் பஸ் எங்கும் நிக்காது என்றார். அப்போது மீண்டும் மழை கொட்டத்தொடங்கியது. மழையைப் பார்த்ததும் கண்ணாயிரம் அப்பாட..நான் ஜிகர்தண்டா வாங்கிட்டுவந்தபிறகு மழைபெஞ்சுது.. இல்லன்னா.. எல்லாம் தண்ணியாபோயிருக்கும்..நல்லவேளை தப்பிச்சேன்..என்று பெருமூச்சுவிட்டார்.
அதைப்பார்த்த பூங்கொடி..ஏங்க மழைவிடாது போலிருக்குது..குளிரா இருக்குது..என்றார். அப்போது பஸ் புறப்படதயாரானது. பயில்வான் ரைட்டு என்று சொன்னதும் பஸ் அங்கிருந்து மெல்ல புறப்பட்டு வெளியேவந்தது. இந்த நேரத்தில் பஸ்சின் மேற்கூரையில் தங்கியிருந்த தண்ணீர் அதிலிருந்த ஓட்டைவழியாக..நேராக பஸ்சுக்குள் இருந்த கண்ணாயிரம் பூங்கொடி மேல் ஓழுகியது..என்ன மழை ஒழுகுது..ஓட்டை பஸ்சு..ஓட்டை பஸ்சு என்று கண்ணாயிரம் ஏச கோபம் அடைந்த பூங்கொடி ஏங்க..அந்த பழைய குடையை எடுத்துபிடிங்க என்று கத்தினார்.
கண்ணாயிரம் வேகமாக குடையை தேடினார். குடையை காணவில்லை. பூங்கொடி குடையை காணம் என்று கண்ணாயிரம் சொல்ல..பூங்கொடி ஆத்திரத்தில் குடையை காணோமா..நீங்கதான எடுத்திட்டுப்போனீங்க…என்ன பண்ணுனிங்க என்க கண்ணாயிரத்துக்கு பக் என்றது.
ஆஹா..ஜிகர்தண்டாவாங்க போன இடத்திலே வச்சிட்டு மறந்துவந்திட்டேன்..இப்ப என்ன பண்ணுறது என்றார்.
இறங்கிபோயி எடுத்துட்டுவாங்க..அது பழைய குடை என்றாலூம் ராசியான குடை..ஓடுங்க என்று பூங்கொடி கத்த கண்ணாயிரம் அது பழைய குடைதானே போன போகட்டும் என்று சொல்ல நீங்களும் பழைய ஆளுதான்..உங்களைவிட்டுருட்டுமா..என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் அடடா..ஆபத்து..என்று நினைத்தவர் பஸ் நிக்கட்டும்..குடையை காணம்..குடையை காணம் என்று கத்தினார்.
பயில்வான்..என்னாச்சு..என்னாச்சு என்க கண்ணாயிரம் குடையைவிட்டுவிட்டுவந்த கதையை சொல்ல பயில்வான் எழுந்து சென்று டிரைவரிடம் பஸ்சை நிறுத்தசொன்னார்.என்ன கண்ணாயிரம் ஏதாவது குழப்பம் பண்ணிட்டாரா என்றபடி டிரைவர் பஸ்சை நிறுத்த கண்ணாயிரம் அப்பாட..பஸ்நின்னுட்டு என்றவர் பூங்கொடியிடம் புதுகுடையை கொடு வெளியிலே மழை பெய்யுது..நான் ஓடிப்போயி எடுத்துட்டு வந்திடுறேன் என்றார். அதைக்கேட்ட பூங்கொடி..ம்..புதுக்குடையா..கிடையாது..பழைய குடையை தேடிப்போயி புதுக்குடையை விட்டுட்டு வந்திடுவீங்க..போங்க..மழையிலே நனைஞ்சிக்கிட்டு போனாத்தான்..உங்களுக்கு அறிவு வரும் என்று ஆவேசமாக சொல்ல கண்ணாயிரம்..இந்த கண்ணாயிரம் எதுக்கும் அசங்கமாட்டான்..வந்தா குடையுடன்தான்வருவேன் இல்லாவிட்டால் வரமாட்டேன் என்றபடி பஸ்சைவிட்டு இறங்கி ஓடினார்.
கொட்டிய மழையில் நனைந்து கொண்டே ஜிகர்தண்டா கடையை நோக்கி சென்றார். குடை இருக்குமா இருக்காதா..ஓட்டைக்குடையை யாரு எடுப்பா என்றபடி கடையை நெருங்கினார். சேரில் அமர்ந்து ஜிகர்தண்டா குடித்த இடத்தைப்பார்த்தவர் இங்கேதானே குடையைவச்சேன்..என்றவாறு கூர்ந்துபார்த்தார். ஆனால் அங்கு குடை இல்லை. கண்ணாயிரத்துக்கு தலைசுற்றியது.(தொடரும்)
-வே.தபசுகுமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.