May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ஊசிக்கு பயந்த கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/ தபசுக்குமார்

1 min read

Kannayiram who was afraid of Injhachan/ comedy story/ Tabasukumar

10/11/2022
.கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்வழியில் சுற்றுலா பஸ்சில் மதுரை பெரியார் பஸ்நிலையம் வந்தார். அங்கு மனைவி பூங்கொடிக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொண்டுவந்தவர் குடையை கடையில் மறந்து வைத்து விட்டுவந்து விட்டார். பின்னர் மனைவி விரட்டியதால் கொட்டும் மழையில் நனைந்தபடி அந்த குடையைத்தேடி ஓடினார். கடையில் சேர் பக்கத்தில் அவர் வைத்திருந்த குடையை தேடினார். ஆனால் அந்த குடையை காணவில்லை.
அய்யா..இந்த சேர்பக்கம் ஒரு குடைவச்சிருந்தேனே பாத்தியளா என்று கேட்டார்.: அட பாகலைய்யா..என்று எல்லோரும் பதில்சொல்ல கண்ணாயிரம் கண்கலங்கினார்.
அய்யா..அது பழையக்குடை..மேல மூணு ஓட்டை வேற இருக்கும்..பாத்தியளாய்யா என்று மீண்டும் கேட்க அங்கிருந்தவர் உடனே யோவ்..பழைய குடைங்கிற பிறகு ஏய்யா அதை தேடுற..என்று கேட்க கண்ணாயிரம் கோபப்பட்டார்.
ஏங்க அது பழைய குடைன்னாலும் ராசியான குடைங்க..ஓட்டை குடையானாலும் உருப்படியான குடைங்க என்று அந்த குடையை கொண்டு போகாட்டி என்மனைவி என்னை குற்றாலத்துக்கு கூட்டிட்டு போகமாட்டா..ஆமா என்று கண்களை கசக்கினார். அப்போது கடைக்காரர் இரக்கப்பட்டு அங்கிருந்தவர்களிடம் குடையை தேடும்படி கூறினார்.
அனைவரும் தேடினர். அருகில் உள்ள ஓடையில் அது தண்ணீரில் மிதந்தது.ஆ..அதான் என் குடை அதான் என் குடை என்று கண்ணாயிரம் கத்த ஓருவர் ஓடையில் குதித்து அதை எடுத்துவந்து கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
அதை யாரு எடுத்து குளத்திலே போட்டது என்று கண்ணாயிரம் குரல் எழுப்ப காத்துல பறந்து போயிருக்குமய்யா..குடை கிடைச்சிட்டுல்ல..கிளம்பு என்று கடைக்காரர் சொல்ல கண்ணாயிரம் குடையை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொட்டிய மழையில் நனைந்தபடி பஸ்சை நோக்கி ஓடிவந்தார்.
பஸ்படியில் காத்து நின்ற பூங்கொடி ஓடிவாங்க…ஓடிவாங்க என்க கண்ணாயிரம் ஓட்டப்பந்தய வீரரைப்போல் வேகமாக ஓடிவந்தார். மழையில் நனைந்து நன்றாக குளித்தவர்போல் காணப்பட்டார். அதைப்பார்த்த பூங்கொடி ஏங்க குடையை பிடிச்சிட்டு வரவேண்டியதுதானே. என்க கண்ணாயிரம் பதிலுக்கு குடையை கெட்டியா பிடிச்சிக்கிட்டுத்தானே வர்ரேன் என்றார்.
பூங்கொடி கோபத்தில் ஏங்க குடையை விரிச்சி பிடிச்சிக்கிட்டு வரவேண்டியதுதானே என்க கண்ணாயிரம் சற்றுக்கோபத்துடன் என்ன நீ சொல்லுற? குடைவிரிச்சா காத்துல பறந்திடாதா என்று கேட்டு திடுக்கிடவைத்தார்.
அது எப்படிங்க பறக்கும் என்று பூங்கொடி அதட்ட கண்ணாயிரம் பதிலுக்கு ஏன்பறக்காது..சேர்பக்கத்திலே நான் மடிச்சி வைத்த குடையே காத்துல பறந்து குளத்திலே கிடந்துச்சு..அப்படியிருக்கும்போது விரிச்ச குடை காத்துல பறக்காதா என்று எதிர்கேள்வி கேட்டார்.
பூங்கொடி பதில்சொல்லாமல் வாங்க பஸ்சிலே ஏறுங்க என்று கண்ணாயிரத்தின் தலையை துவட்டிவிட்டார். பஸ்சில் ஏறிய கண்ணாயிரம் குடையை மீட்ட வீரராக தன் இருக்கையை நோக்கிவேகமாக நடந்தார்.
இருக்கையில் மழைநீர் ஒழுகி இருந்ததால் ..என்ன இது ஈரமா இருக்கு…பின்னால இருப்போம் பூங்கொடி என்றார். அவரும் சரி..சரி..எல்லா பிரச்சினையும் உங்களைத்தேடியே வருது..போங்க..உட்காருங்க என்க கண்ணாயிரம் முகத்தில் வடிந்த தண்ணீரை துடைத்துவீசிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
அதைப்பார்த்த பயில்வான் என்ன கண்ணாயிரம் போலாம்மா..ஏப்படி என்க கண்ணாயிரம் போலாம் போலாம் என்றார்.
அடுத்த நொடி பயில்வான் டிரைவரைப் பார்த்து கையை அசைக்க பஸ் புறப்பட்டு சென்றது. டிரைவர் வேகமாக பஸ்சை இயக்கியதால் பஸ்சுக்குள் குளிர்ந்த காற்று வீச கண்ணாயிரம் ஆச் ஆச் என்று தொடர்ந்து தும்மினார்.
என்னங்க ஆச்சு என்று பூங்கொடி கேட்க கண்ணாயிரமோ..அதெல்லாம் ஒண்ணுமில்ல..நான் ஸ்டெடியாக இருக்கேன் என்று சொல்ல ஆச் ஆச்..ஆச்..ஆச்..ஆச்..ஆச்.என்று தொடர்ந்து தும்ம பஸ்சே அதிர்ந்தது.
ஏங்க என்னங்க ஆச்சு என்று பூங்கொடி மீண்டும் கேட்க கண்ணாயிரம் குரல்வராமல் சைகையால் பேசமுடியலன்னு தெரிவிக்க..பூங்கொடி அய்யோ..அவருக்கு என்னமோ ஆச்சு..பேச்சு வரமாட்டேங்குது. என்று கத்த கண்ணாயிரம் சும்மா இரு என்று சைகையால் அதட்ட பூங்கொடி கேட்கவில்லை.மழையில் நனையா தீங்கன்னு சொன்னா கேட்டாதான்ன..இப்பம் பேச்சுவராமல் கஷ்டப்படுறாரு..நான் என்ன செய்வேன் என்று புலம்ப பயில்வான் எழுந்துவந்து என்னாச்சு என்று விசாரித்தார்.
அவரிடம் மழையில் நனைந்து அவருக்கு பேசமுடியாம போச்சு..அவரை நல்ல டாக்டருக்கிட்ட காட்டி ஊசிபோடணுமுன்னு சொல்ல ஊசி என்றதும் கண்ணாயிரம் பயந்துபோய் வேண்டாம்..வேண்டாம்.என்று சைகையால் மறுக்க அதைப்பார்த்த பயில்வான் என்னசொல்லுறாரு கண்ணாயிரம் என்றுகேட்க பூங்கொடியோ..அதுவா போடுறது போடுறீய பெரிய ஊசியா போடுங்க என்கிறாரு என்று சொல்ல கண்ணாயிரம்..இல்லை..இல்லைஎன்று கையை அசைத்தார். ஆனால் யாரும் அதை புரிந்து கொள்ளவில்லை.
உடனே கண்ணாயிரம் ஏதோ சொல்ல முயல தும்மல் தொடர்ந்துவர கண்ணாயிரம் துவண்டுவிட்டார். அவரது கண்கள் சிவந்துவிட்டன. அதைப்பார்த்த பயில்வான் டிரைவரிடம் சென்று எதாவது ஆஸ்பத்திரி பாத்து நிப்பாட்டுங்க…கண்ணாயிரத்துக்கு ஒரு ஊசிபோட்டுட்டு போவோம் என்க டிரைவர் எரிச்சலாக பார்த்தார்.
.பஸ்விரைந்து சென்றது.
திருமங்கலம் வந்ததும் பஸ்நின்றது.
கண்ணாயிரத்தைப்பார்த்து இறங்குங்க..ஊசிபோட்டுட்டுவருவோம் என்று பயில்வான் சொல்ல கண்ணாயிரம் வேண்டாம் என்று கையை அசைக்க பூங்கொடி அவரை அதட்டி இறங்குங்க..ஊசி ஒண்ணும் செய்யாது.நான் இருக்கேன்ல என்று சொல்ல கண்ணாயிரம் வேண்டாவெறுப்பாக பஸ்சைவிட்டு இறங்கினார்.
பூங்கொடி அவர்பின்னால் இறங்க பயில்வான் இறங்கி..அங்கிருந்தவர்களிடம் இங்கே நல்ல டாக்டர் யாருங்க என்று கேட்க அங்கிருந்தவர்கள் இங்கே எல்லோரும் நல்ல டாக்டருதான். உங்களுக்கு எந்த டாக்டர்வேண்டும்..என்று கேட்க தொண்டையிலே கிச்சுகிச்சு பேசமுடியல..அதுக்கேற்ற டாக்டரை சொல்லுங்க என்றுகேட்க அவர்கள் தூரத்தில் இருந்த ஓரு கிளினிக்கை அடையாளம் காட்டினார்கள்.
உடனே கண்ணாயிரம் பூங்கொடி பயில்வான் மூன்றுபேரும் அந்த திசையை நோக்கி சென்றார்கள். அந்த கிளினிக்கு முன் பயங்கர கூட்டம்.. கைராசி டாக்டராம்..அதான் அவ்வளவு கூட்டம் என்றனர்.
அங்கிருந்த பெண் கண்ணாயிரத்திடம் நுழைவுசீட்டுவாங்கிட்டிங்களா என்று கேட்க கண்ணாயிரம் பேசமுடியாததால் வாயை காட்டி பேசமுடியல என்பதை சைகையால் விளக்க அந்த பெண் புரியாமல் தவிக்க பூங்கொடி அந்த பெண்ணிடம் பேசி கண்ணாயிரத்துக்கு நுழைவு சீட்டுவாங்கினார். ஒவ்வொருவராக டாக்டரை பார்த்துவிட்டு சென்றார்கள்.
ஒரு பெண் ஊசிபோட்டதால் அழுத குழந்தையிடம்..பெரிய ஊசியம்மா..டாக்டரை அடிச்சிருவோம்..சரியா..வீட்டுக்குப்போயி கம்பு எடுத்துட்டுவருவோம்..சரியா என்று சமாதானப்படுத்தி அழைத்துசென்றார்.
அதைப்பார்த்த கண்ணாயிரம் ஆ..ஊசி பயங்கரமா இருக்கும்போலய..அந்தால ஓடிவிடுவோமா என்று யோசித்தார்.
அதுக்கு வழியில்லை.டாக்டரிடமே…ஊசிவேண்டாம்..மாத்திரை கொடுங்கன்னு கேட்போம்..நமக்கு வேற வாய்வார்த்தையே வரமாட்டேங்குதே..ஆ..ஆ..ஆ..என்று சொல்லிப்பார்த்தார். சத்தமேவயவில்லை. என்னடா வம்பாபோச்சு என்றபடி கண்ணாயிரம் கலங்கி நின்ற நேரத்தில் கண்ணாயிரம்..கண்ணாயிரம்..கண்ணாயிரம் என்று ஒருவர் அழைக்க .பூங்கொடி உஷாராகி கண்ணாயிரத்திடம் வாங்க..வாங்க டாக்டர் கூப்பிடுகிறார் என்று கண்ணாயிரத்தை இழுத்துக்கொண்டு அறைக்கதவைத் திறந்து உள்ளே போனார்.
டாக்டரைபார்த்ததும் கண்ணாயிரம் அவருக்கு வணக்கம் போட்டார். அவரிடம் உட்காருங்க உங்களுக்கு என்ன செய்கிறது என்று கேட்க கண்ணாயிரம் பதில் சொல்ல திணற பூங்கொடி விளக்கமாக சொன்னார்.
டாக்டர் அவரிடம் குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டாரா என்று கேட்க ஆமா.ஏதோ இதய குளுமைன்னு சொன்னாரு..என்று பூங்கொடி சொல்ல டாக்டர் திகைப்புடன் அது என்ன..இதயகுளூமை புதுசா இருக்கே..கண்டதையும் சாப்பகடுறதா என்று டாக்டர் கண்டிக்க கண்ணாயிரத்துக்கு ஜிகர்தண்டா நினைவுக்குவர…ஒருமாதிரிவாயை அசைத்து சொல்ல முயல கீச் குரல்மட்டும் வெளியே வந்தது.
அது புரியாமல் டாக்டர் விழிக்க பூங்கொடி..அதாவது ஏதோ தண்டா..தண்டான்னு சொன்னாரு..நீங்க பெரிய ஊசியா போடுங்க டாக்டர் என்று சிபாரிசு செய்தார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் கோபத்தில். சத்தம்வராமல் கத்தினார். டாக்டர் அவரை சமாதானப்படுத்தி கண்ணாயிரம் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பு வைத்து பார்த்தார். மூச்சை இழுத்து விடுங்க என்க கண்ணாயிரம் மூச்சை இழுத்துவிட்டார். ஏன்பதட்டமா இருக்கீறீங்க…நார்மலா மூச்சை இழுத்துவிடுங்க என்று டாக்டர் சொல்ல கண்ணாயிரம் மெதுவாக மூச்சை இழுத்துவிட்டார். அப்படியாவது ஊசிபோடாமல் விடுவார் என்று கண்ணாயிரம் நினைத்தார்.
ஆனால் டாக்டர் மெல்ல கண்ணாயிரத்திடம் வாயை திறங்க என்க கண்ணாயிரம் வாயை திறக்க டாக்டர் டார்ச்லைட்டு அடித்துப்பார்த்தார். தொரோட் இன்பங்சன் ஆயிருக்கு..என்றவாறு டாக்டர் ஒரு பேப்பரில் மருந்து மாத்திரை எழுதினார்.
பூங்கொடியிடம் அதை கொடுத்த டாக்டர்..மருந்து மாத்திரை எழுதி இருக்கிறேன்.நாலு நேரத்துக்கு கொடுங்க..சுடு தண்ணிதான் குடிக்கணும்.சரியாகிடும் என்றார்.
அப்பாட ஊசியிலிருந்து தப்பிச்சோம் என்று கண்ணாயிரம் மகிழ்ந்த வேளையில் டாக்டர் பெல்லை அழுத்தினார்.
நர்ஸ் வேகமாக உள்ளே வந்தார். இவருக்கு ஒரு இன்ஞ்செக்சன் போடுங்க என்றார்.
நர்சு அடுத்த அறைக்கு செல்ல கண்ணாயிரமும் பூங்கொடியும் பின்தொடர்ந்து சென்றனர்.
இன்ஞ்செகாசன்னா தொண்டை சரியில்லன்னா இஞ்ஞிமரப்பா தருவாங்களா என்று கண்ணாயிரம் கேட்க பூங்கொடி எனக்கு தெரியலன்னு சொல்ல கண்ணாயிரம் உனக்கு எதுவும் தெரியாது என்று குரல்வராமல் ஏச..கண்ணாயிரத்தைப் பார்த்து இங்கேவாங்க என்று நர்சு அழைக்க கண்ணாயிரம் சிரித்தபடி அந்த அறைக்குள் சென்றார்.நர்சு கையில் பெரிய ஊசியுடன் நிற்பதைப்பார்த்ததும்…ஆ..என்று வாயை பிளந்தபடி அந்த அறையைவிட்டு வெளியே ஓடிவர இரண்டுபேர் அவரைபிடிக்க பாய்ந்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.