June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

1 min read

Court orders parents to hand over cell phone used by student Srimathi

14.11.2022
மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீமதி மரணம்

மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தந்தை ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி விசாரணையும் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

செல்போன்

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 214 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும்படி ஏற்கெனவே கோர்ட்டு உத்தரவிட்டும் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்பதெல்லாம் இல்லை. செல்போனை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும் மாணவியின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம். நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனு தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *