பாஜக போராட்டத்தில் அண்ணாமலை, குஷ்பு பரபரப்பு பேச்சு
1 min read
Annamalai, Khushbu sensational talk in BJP protest
15.11.2022
பாஜக போராட்டத்தில் அண்ணாமலை, குஷ்பு பரபரப்பாக பேசினார்கள். அண்ணாமலை பேசும்போது 16 மாதங்கள் மட்டும் காத்திருங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என கூறினார்.
பாஜக போராட்டம்
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இன்று காலை பாஜக சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பால் விலை உயர்வை கண்டித்து அண்ணாமலை கோஷம் எழுப்பினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் கோஷம் எழுப்பினர்.
பின்னர் அண்ணாமலை பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளாக விலையை உயர்த்தி உள்ளார்கள். வீட்டு வரி வீட்டை விற்றால் கூட கட்டமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மண் திருட்டு, கனிம வளங்கள் திருட்டு அதிகரித்துள்ளது.
ஆவின் நிர்வாகம் திவாலான நிறுவனம். ஒரு புறம் பால் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு. மறுபுறம் பால் கொள்முதல் விலையால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். கொசு வலை விற்பதற்கு சென்னையில் ஒரு மேயர். கொசு வலையை கூட நம்பி வாங்கி விடக்கூடாது. டெங்கு, மலேரியா வந்தால்கூட தி.மு.க. நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு மட்டும் லாபம். சென்னையில் கொஞ்சமாக பெய்த மழைக்கு பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இனி வரும் டிசம்பர் மாத மழைக்கு என்னவாகும் என்று தெரியவில்லை.
விற்பனையாகாத பாலை காய்ச்சி வெண்ணையாக மாற்றி பொங்கலுக்கு பயன்படுத்திக் கொள்வோம் என அமைச்சர் நாசர் கூறி உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் நரேந்திர மோடியாக வேண்டுமானால் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக்கூடாது. குடும்பத்தாரையும் உடன் வைத்து கொள்ளக்கூடாது.
16 மாதங்கள் மட்டும் காத்திருங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழ்நாட்டில் இருந்து 26 எம்.பி.க்கள் பார்லிமென்ட்டுக்கு செல்வார்கள்.
கோவையில் நடந்த குண்டுவெடிப்பு அல்ல கொலைவெறி தாக்குதல். 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தொடர்ந்த என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
குஷ்பு
சென்னையில் 66 இடங்களில் நடைபெற்றது. இதில் அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல் தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா? முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம். மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன.
பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை. இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.
இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள். தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார். இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது தொடரும். அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.