அ.தி.மு.க. முன்னாள் எம.எல்.ஏ. கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்தார்
1 min read
A.D.M.K. Former M.L.A. Coimbatore Selvaraj joined DMK
7.12.2022
அ.தி.மு.க. முன்னாள் எம.எல்.ஏ. கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்தார்
கோவை செல்வராஜ்
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ், ஒபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அவர் அறிவித்தார். திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், இலவச பேருந்து பயண சலுகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக தற்போது கம்பெனி போல் மாறி விட்டதாகவும், திமுக அரசை விமர்சிக்க அதிமுகவினருக்கு தகுதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விப்பமில்லை
முன்னதாக நேற்று கோவை செல்வராஜ் கூறியதாவது:-
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இவர்களுடன் பயணிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன். அதிமுக 4 ஆக உடைந்து விட்டது. இனி அவர்கள் யாரும் சேரவும் முடியாது, அதிமுகவையும் காப்பாற்ற முடியாது.
பழனிசாமியும், ஓபிஎஸ்சும் பாஜகவின் கொத்தடிமைகளாக மாறிவிட்டனர். இன்றைய சூழலில், தமிழகத்தையும், தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலினை தவிர, மற்ற எந்த தலைவருக்குமே தகுதியில்லை. இதனால் யாருடைய வற்புறுத்தலுமின்றி, சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறேன்.
தற்போது மாவட்ட செயலாளர்களாக உள்ள 3 பேர், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என 5 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்வு பின்னர் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.