May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இருட்டான கடையில் அல்வா வாங்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram bought by Alva in a dark shop/ comedy story/ Tabasukumar

4.12.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்வழியில் நெல்லை வந்தார். தாமிரபரணி ஆற்றில் மற்றவர்கள் குளித்தபோது இவர் உடல் நலம் சரியில்லாததால் குளிக்கவில்லை. ஆனால் ஒரு பக்கெட்டில் தாமிரபரணி தண்ணீரை எடுத்துக்கொண்டு பஸ்சுக்கு வந்தார். அந்த தண்ணீர்வற்றி தாமிரம் கிடைக்கும் என்று நம்பி மூடிவைத்தார். வாங்கிவந்த நைலான் கயிற்றை பஸ்சில்கட்டி துணிகளை காயப்போட்டார்.
இந்த நேரத்தில் பயில்வான் பஸ்சில் ஏறினார். எல்லோரும் வந்தாச்சா…அடுத்து பஸ் நெல்லை டவுனுக்கு போகும். அங்கு நெல்லையப்பர் சாமியை வழிபட்டுவிட்டு இரவு ஏழு மணிக்கு அல்வா கடையிலே அல்வா சாப்பிட்டுவிட்டு குற்றாலம் போகலாம் என்றார். அதைக்கேட்டதும் ஆ..அல்வா சாப்பிடலாம்..சீக்கிரம் போகலாம் என்று கண்ணாயிரம் உற்சாகத்தில் தலையை ஆட்டினார்.
சுடிதார்சுதாவும்..ஆ..நெல்லை அல்வா ரொம்ப சுவையாக இருக்கும்..சூடா சாப்பிட்டா தேவாமிர்தமாக இருக்கும்..என்றார். பூங்கொடி மெல்ல கண்ணாயிரத்தை பார்த்து என்ன சிரிப்பு…அல்வாவை வாங்கி கண்டமானிக்கு தின்னுப்புடாதீக…இன்னும் உங்களுக்கு தொண்டை சரியாகலை…முதலில் டானிக்கை குடிங்க என்று அதட்டினார். கண்ணாயிரமும்..ம்..டானிக் குடிப்பேன்…அப்புறம் அல்வா சாப்பிடுவேன் சரியா என்க பூங்கொடியும் சரி என்றார். பாட்டலில் இருந்த டானிக்கை அவர் கண்ணாயிரம் வாயில் கொஞ்சம் ஊற்ற அவர்..போதும் போதும் என்று கையை ஆட்டினார்.
பயில்வான் பஸ் புறப்படலாம் என்று சொல்ல பஸ் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டது. பஸ் முழுவதும் துணிகள் காயப்போட்டிருந்ததால் அவை காற்றில் அசைந்து படபடவென்று சத்தமிட்டது. பஸ் நெல்லை சந்திப்பிலிருந்து புறப்பட்டு ஈரடுக்கு மேம்பாலம் வழியாக நேராக டவுண் வந்து சேர்ந்தது. நெல்லையப்பர் கோவில் அருகே வந்ததும்பஸ்சை டிரைவர் நிறுத்தினார். கோவிலுக்கு போகிறவர்கள் போயிட்டுவாங்க என்று பயில்வான் சொல்ல அனைவரும் இறங்கினார்கள். இரவு எட்டுமணிவரை பஸ் இந்த பகுதியில் ஓரமாக நிறுத்தப்படும். சுற்றிப்பார்த்திட்டு வாங்க என்றார் பயில்வான்.
அனைவரும் சரி என்று கோவிலை சுற்றிப்பார்க்க புறப்பட்டார்கள். கண்ணாயிரம் பஸ் பக்கத்திலே நின்றார். நான் பஸ்சுக்கு காவலுக்கு இருக்கிறேன் நீங்க போயிட்டுவாங்க என்று சொன்னார். அவருக்கு பக்கெட்டில் உள்ள தாமிரபரணி தண்ணீரை யாரும் தூக்கிட்டுப்போயிடக்கூடாது என்றபயம் இருந்தது. ஆனால் அதை சொல்லாமல் சமாளித்தார். பூங்கொடியும்..ஏங்க.. இங்கே இருங்க..எங்கேயும் போயிடாதீக..பஸ்சிலே துணிகாயப்போட்டிருக்கு பறந்து போயிடப்போகுது என்று எச்சரித்தார்..
சுடிதார் சுதா ஒரு கைப்பையை தொங்கவிட்டபடி நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றார். அவரைத்தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பின்தொடர்ந்து வந்தனர்.
சுடிதார்சுதா நெல்லையப்பர் கோவிலின் சிறப்புகளை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார்..
இந்த கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயம்.
அம்மன் சன்னதி யில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது.
கோவிலில் நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்திசிலை இருந்ததை பாராத்தீர்களா…அது பத்தடி உயரம். வெள்ளை நிறத்தில் உள்ள அந்த சிலை கண்ணைக்கவரும்..
கோவிலின் இரண்டாவது பிரகாரத்துக்கு போவோம் வாங்க. இங்கே பாருங்க…இது சாதாரண தூண்கள் இல்லை. இசைத்தூண்கள். இதை தட்டிப்பார்த்தால் ஏழு ஸ்வரங்கள் கேட்கும் என்றார் சுடிதார்சுதா.
அந்த இசைத்தூண்களை தட்டிப்பார்க்க மற்றவர்களும் அந்த தூண்களை தட்ட ஆரம்பித்தனர். கோவில் முழுவதும் டங் டங் என்று இசை சத்தம் ஒலிக்கத்தொடங்கியது. அதை அனைவரும் கேட்டு ரசித்தனர்.

பின்னர் கோவிலில் உள்ள தாமிரசபையை பார்த்தார்கள். இந்த ஊருக்கு நெல்லை என்று ஏன் பெயர்வந்தது…என்று வாலிபர் ஒருவர் கேட்டார். உடனே சுடிதார்சுதா.. இதை நம்ம கண்ணாயிரம் கேட்பாருன்னு பதில் தேடிவச்சிருந்தேன்.
வேதபட்டர் என்ற பட்டர் சிவபெருமான் மீது அதிக பற்று கொண்டிருந்தார். சாமி நைவேத்தியத்துக்காக அவர் வீடு வீடாக சென்று நெல் சேகரித்தார். சாமி சன்னதி அருகே அந்த நெல்லை காயப்போட்டுவிட்டு குளத்தில் குளிக்கசென்றார். அப்போது திடீரென்று மழை கொட்டியது. அதைப் பார்த்த பட்டர் மனம் பதைத்தார். கொட்டும் மழையில் நெல் நனைந்துவிடுமே என்று பயந்தார். உடனடியாக குளத்திலிருந்து கோவிலுக்கு ஓடிவந்தார். அங்கே அவர் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. காயப்போட்டிருந்த நெல்லை சுற்றி மழை பெய்தது. ஆனால் ஒரு துளி மழைகூட நெல்மீது விழவில்லை. இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு ராமபாண்டிய மன்னனும் வந்து பார்த்தார். உலகுக்கு மழைபெய்வித்து நெல்லுக்கு மழை பெய்யாமல் நெல்லுக்கு வேலி போல்நின்று சிவன் காத்தார் என்பதை உணர்ந்தார் .எனவே வேணுவனம் என்றிருந்த இந்த பகுதிக்கு நெல்வேலி என்று மன்னர் பெயர் சூட்டினார் என்று விளக்கம் அளித்தார்.
பின்னர் நெல்லையப்பர் சன்னதியிலும் காந்திமதியம்மாள் சன்னதியிலும் வணங்கிவிட்டு வெளியே வந்தனர். மணி இரவு ஏழுஆகியது. அல்வா நினைவு அனைவருக்கும் வந்தது. கோவிலிலிருந்து வெளியே வந்தனர்.
இருட்டுக்கடை அல்வா என்றபடி அந்த கடையை நோக்கி ஓடினார்கள் கடை முன் ஏகப்பட்டகூட்டம் .சூடாக அல்வாவை ரகம்வாரியாக வாங்கிச்சென்றார்கள். ஒரே ஒரு மின்விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சீக்கிரம் காலியாயிரும் ..உள்ளே போய் வாங்குங்க என்று சிலர் சொல்ல சுடிதார்சுதா மற்றும் பூங்கொடி இதர வாலிபர்கள் கூட்டத்துக்குள் புகுந்து போராடி அல்வா வாங்கி வெற்றிக்கோப்பையை பரிசாக பெற்றது போல வீரநடை நடந்து பஸ்சை நோக்கிவந்தனர்.
பஸ்சில் பாதுகாப்புக்காக விட்டுச்சென்ற கண்ணாயிரத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். அல்வா சாப்பிடுவதில் குறியாக இருந்தார்கள். அதைப்பார்த்த கண்ணாயிரத்துக்கு கோபம்வந்தது. ஏங்க இங்கே நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்திட்டியளா ..எல்லோரும் அல்வா வாங்கிட்டு வந்திட்டியளா.. எனக்கு என்று கூச்சலிட்டார். அதைப்பார்த்த பூங்கொடி ஏன் கத்துறுங்க….அல்வா விற்றுக்கிட்டுத்தான் இருக்கு எட்டுமணிவரை விப்பாங்க .கடை இருட்டா இருக்கும். ஒரே ஒரு விளக்கு மட்டும் எரியும். சீக்கிரம் போங்க..மணி எட்டாகப்போகுது என்று பூங்கொடி அவசரபாபடுத்தினார்.
கண்ணாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு நாலுகால் பாய்ச்சலில் இருட்டுக்கடை அல்வா கடையை தேடி ஓடினார். இருட்டுக்கடை யில் விரைவில் அல்வாவிற்று விட்டதால் எட்டுமணி ஆகும் முன்னே விளக்கு அணைக்கப்பட்டது. இந்த நேரத்தில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. எங்கும் ஒரே இருட்டு. கண்ணாயிரம் விழிபிதுங்கி நின்றார்.
இருட்டுக்கடையை நான் எங்கே தேடுவது என்று அவர் விழித்தபோது ஒருகடையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு தெரிந்தது. மற்றபடி கடை இருந்தது. கண்ணாயிரம் அடித்துபிடித்து அந்த கடையை நோக்கி ஓடினார். அல்வா இருக்கா என்று கேட்டார். கடைக்காரர் இருக்கு என்க கண்ணாயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அல்வா கொடுங்க என்றார்.
கடைக்காரர் அல்வா எடுக்க சென்றபோது கண்ணாயிரம் கடைக்குள் சுற்றிப்பார்த்தார். என்னபார்க்கிறீங்க என்று கடைக்காரர் கேட்க கடை இருட்டா இருக்கானு பார்த்தேன் என்றார். எதுக்கு அப்படி பார்க்கிறீங்க என்று கடைக்காரர் கேட்க இருட்டுக்கடையிலேத்தான் அல்வா வாங்கணுமுன்னு சொன்னாங்க..அதான் பாத்தேன்..என்றார்.
கடைக்காரர் பதில் சொல்லாமல் அல்வாவை கண்ணாயிரத்திடம் கொடுக்க..அவர்..ஆ..கிடைச்சது அல்வா என்றபடி பஸ்சை நோக்கி ஓடினார்.
இருட்டாக இருந்ததால் கொஞ்சம் தடுமாறினார்.அவர் பஸ்சை நெருங்கியபோது மின்சாரம் வந்து விளக்கு எரிந்தது. கண்ணாயிரத்தைப்பார்த்த பூங்கொடி ஏங்க இருட்டுக்கடையிலே அல்வா வாங்கினிங்களா..என்று கேட்க..கண்ணாயிரம் ஆமா..வாங்காம விடுவேனா..இதோபார் என்று ஒருகடையின் பெயர்பொறிக்கப்பட்ட அல்வா பாக்கேட்டை காட்டினார். அதைப்பார்த்த பூங்கொடி ஏங்க…எங்களுக்கு இருட்டுக்கடையிலே அல்வாவை இலையிலே கொடுத்தாங்க..நீங்க பாக்கெட்டிலே வாங்கிட்டுவந்திருக்கீங்க..இது இருட்டுக்கடை அல்வா இல்லை என்றார். கண்ணாயிரம் என்ன நீ ..தப்பா சொல்லுற நான் அல்வா வாங்கின கடை இருட்டாத்தான் இருந்துச்சு. ஒரே ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டு மட்டும் எரிந்தது..என்றார்.
பூங்கொடி விடாமல் நீங்க ஏமாந்திட்டிங்க என்று சொல்ல.. கண்ணாயிரம் கோபத்தில் ஏய் கடை இருட்டா இருந்துச்சா இல்லையா என்பதுதான் முக்கியம். நான் அல்வா வாங்கின கடை இருட்டாத்தான் இருந்துச்சு..நான் கடையிலே நல்லா சுத்திப்பாத்துதான் வாங்கினேன் தெரியுமா..என்றார்.
உடனே பூங்கொடி..ஏங்க டேஸ்டு முக்கியம் இல்லையா. என்று கேட்க கண்ணாயிரம்…எல்லாம் இனிக்கத்தான் செய்யும் ..சரி..நான்வாங்கிட்டுவந்ததும் ஒருவகையிலே இருட்டுக்கடை அல்வாதான். இதையாரூம் குறை கூறக்கூடாது என்றபடி அல்வாவை எடுத்து தன்வாயில் போட்டார். அது வாயில் அப்பிக்கொள்ள…தண்ணி தண்ணி என்று சைகயையால் காட்டினார். கொஞ்சம் பொறுங்க.தண்ணி கொண்டுவாரேன் என்றபடி பூங்கொடி பஸ்சுக்குள் ஏறி ஒரு பிளாக்சில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். கண்ணாயிரம் அந்த தண்ணீரை குடிக்க தண்ணீர் தொண்டைக்குழிக்குள் இறங்கவில்லை. அதன்பின ஒரு குச்சியால் கண்ணாயிரம் வாயில் இருந்த அல்வாவை வெளியே எடுத்தார். அதன்பின் கண்ணாயிரம் தண்ணீரை குடித்துவிட்டு..அப்பாட அல்வா ரொம்ப கல்மாதிரி இருக்கு…இதை உருக வச்சுத்தான் சாப்பிடணுமுன்னு நெஞ்சை தடவினார்.
அதைப்பார்த்த பூங்கொடி என்னாச்சு உங்களுக்கு என்றபடி பதட்டமானார்.(தொடரும்)
.-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.