May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கட்டப்பொம்மன் படம்பார்த்து மயங்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kattappomman film mesmerized Kannairam/ comedy story/ Tabasukumar

19.12.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்வதற்கு முன்பு நெல்லை சென்றார். பின்னர் நெல்லை டவுனுக்கு சுற்றுலா பஸ் சென்றது.நெல்லையப்பரை வழிபட்ட சுற்றுலா பயணிகள் இரவில் இருட்டுக்கடை அல்வா வாங்கிக்கொண்டு பஸ்சுக்கு வந்தனர். பஸ்சுக்கு பாதுகாப்பாக இருந்த கண்ணாயிரம் அடித்துபிடித்துக்கொண்டு அல்வா வாங்க ஓடினார். அப்போது மின்தடை ஏற்பட்டதால் இருட்டான ஒருகடையில் அல்வா வாங்கிக்கொண்டு பஸ்சுக்கு ஓடிவந்தார். அந்த அல்வா வாயில் அப்பிக்கொண்டதால் விழுங்க படாதபாடு பட்டார். பூங்கொடி தண்ணீர்கொண்டுவந்து கொடுக்க கண்ணாயிரம் தண்ணீர் குடித்து அமைதியானார்.
அந்த நேரத்தில் பயில்வான்வந்தார். என்ன எல்லோரும் வந்தாச்சா…இனி ஆலங்குளம் தென்காசி வழியாக நேராக குற்றாலம் போய்விடுவோம்..பஸ்சிலே ஏறுங்க…நேரமாயிட்டு என்றார். பஸ்சுக்கு வெளியே கதை பேசிக்கொண்டிருந்தவர்கள் வேக வேகமாக வந்து பஸ்சில் ஏறினார்கள். கண்ணாயிரமும் பூங்கொடியும் பாதி அல்வாவோடு அம்மாடி ..அப்பாடி என்றபடி பஸ்சில் ஏறி இருக்கைக்கு சென்றனர். சுடிதார்சுதா இருட்டுக்கடை அல்வாவை சுவைத்து சுவைத்து சாப்பிட்டுவிட்டு இலையை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு கையை கழுவினார். சுடிதார்சுதாவுக்காக பஸ்காத்து நின்றது. ஒருவாலிபர் மினரல்வாட்டர் பாட்டிலை நீட்ட சுடிதார்சுதா அந்த தண்ணீரை மடக்மடக் என்று குடித்தார்.
உடனே கண்ணாயிரமும் பிளாஸ்கில் இருந்த வெந்நீரை குடித்தார்…என்ன பஸ் புறப்படலையா என்று கண்ணாயிரம் முரட்டுக்குரலில் கேட்க அதைப்பார்த்த..பூங்கொடி ஏங்க..இன்னும் உங்க குரல்மாறலைங்க…என்னசெய்யுறது என்று கேட்டார். கண்ணாயிரம்..ஆ..ஆ..என்று வாயைப்பிளந்துகாட்டினார். வாயை மூடுங்க..பயமா இருக்கு என்று அதட்டினார். அப்போது இரண்டு பெட்டியில் சினேக்ஸ் பாக்கெட்டுகளை தூக்கிக்கொண்டு பஸ்சில் ஏறினார்கள். அவர்களைத்தொடர்ந்து சுடிதார்சுதாவும் பஸ்சில் ஏறினார். சுற்றுலா பயணிகளிடம் ஒருவாலிபர் பேசினார்..அன்பான சுற்றுலா பயணிகளே…நம்ம மேடம் சுடிதார் சுதா சார்பாக அனைவருக்கும் சினேகஸ் வழங்கப்படுகிறது என்று கூறினார். மற்ற வாலிபர்கள் ஒவ்வொருவருக்காக சினேக்ஸ் பாக்சையும் சிறிய மினரல் வாட்டர்பாட்டிலையும் கொடுத்தார்கள். எல்லோரும் தேங்ஸ் என்று வாங்கிக்கொண்டனர்.
கண்ணாயிரம் கையை நீட்டினார்.பூங்கொடி முறைத்ததால்…வேண்டாங்க..எனக்கு தொண்டை சரியில்லை என்று சமாளித்தார். வாலிபர்களும் வற்புறுத்தவில்லை.
பயில்வான் பஸ்சில் சுற்றிப்பார்த்தார். எல்லோரும் சீட்டிலே உட்காருங்க. …உட்காருங்க.. அப்போதான் எண்ணமுடியும் என்றார்.அனைவரும் அமர்ந்ததும் சரி…பஸ்புறப்படலாம் என்றார் பயில்வான்.
பஸ் ஆர்ன் அடித்தபடி புறப்பட்டது. இரவு எட்டு மணி ஆகிவிட்டது. ஏதாவது படம் போடுங்கள் என்று வாலிபர்கள் குரல் எழுப்பினர். உடனே உதவி டிரைவர் எழுந்து சத்தம் போடாதீங்க நல்லபடமா போடுறன் என்றபடி டிவிடெக் பக்கம் சென்றார்.
சிறிது நேரத்தில் டிவியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் போடப்பட்டது. உடனே இளைஞர்கள் உற்சாகமாக இப்போதான் வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலையை பாத்தோம். உடனே அந்த படமும் ஓடுதா…நல்லாயிருக்கு…நல்லாயிருக்கு என்றனர்.
உடனே கண்ணாயிரம் என்னது கட்டப்பொம்மன் சிலையை பார்த்தீர்களா…நான்பாக்கல..என்னை ஏமாத்திட்டிய என்று குரல் எழுப்ப பூங்கொடி அவரை அமைதிப்படுத்தினார். ஏங்க..அவங்க சும்மா சொல்லுறாங்க..உங்களை யாரும் ஏமாற்றமுடியுமா..நீங்க படத்தைப் பாருங்க…எல்லாம் வரும் என்றார்.
கண்ணாயிரம் அதைக்கேட்டு..ம்..என்னையாரும் ஏமாத்தமுடியுமா என்றபடி படத்தைப்பார்த்தார்.சிவாஜி கணேசனின் நடிப்பில் தன்னை மறந்தார். ஆ…அபாரம்..என்னநடிப்பு..என்ன நடிப்பு என்று புகழ்ந்தார். அவரிடம் கொஞ்சம் டானிக் குடியுங்கள் என்று பூங்கொடி கெஞ்சினார். கண்ணாயிரம்..ஆ..இந்தபடமே போதும்..எனக்கு வேறு டானிக் எதுக்கு என்று முரட்டுக்குரலில் கூறினார்.
சுடிதார்சுதாவும் சினாக்ஸ் சாப்பிட்டபடி .படத்தை ரசித்துபார்த்தார். பழைய படமானாலும். சூப்பர்…ஓல்டு இஸ் கோல்டு என்று மற்றவர்களிடம் கூறினார்.அதோடு சிவாஜி கணேசனுக்கு ஆசிய சிறந்த நடிகர் பட்டம் இந்த படத்தில்தான் கிடைத்தது என்றும் விளக்கிறார். துபாய்க்காரரும்..ஆ..ஹா..சிவாஜிகணேசனின்..தமிழ் உச்சரிப்பு..வீரம் கொப்பளிக்கும் வசனம்..அருமை..அருமை என்று புகழ்ந்தார். கண்ணாயிரம் எழுந்து நின்று கொண்டு கைகால்களை அசைத்து வசனங்களுக்கு ஏற்ப வாயை அசைத்தார்.
மாட்டுவண்டியை பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவள கன்னியம்மா..உன் காசு மாலை பத்திரம்மா…என்ற பாடல் காட்சி வந்தபோது கண்ணாயிரமும் இடுப்பை அசைத்து கையை தூக்கி லாவகமாக பாடினார்.
சுடிதார் சுதா மற்றும் துபாய்க்காரர் கன்னத்தில் விரல்வைத்து ரசித்தார்கள். கண்ணாயிரத்துக்குள் இவ்வளவு கலைரசனை இருக்கிறதா என்று வியந்தனர். கண்ணாயிரம் உடம்பு வலித்தாலும் விடுவதாக இல்லை. பல வசனங்களை சிவாஜி பேசுவதற்கு முன்பே பேசினார். வரி கேட்ட ஜாக்சன் துரையிடம் கட்டப்பொம்மன் எதிர்த்து பேசும் வசனம் வந்தபோது கண்ணாயிரம் நெஞ்சை நிமர்த்தி வானம்பொழிகிறது…பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி..நீ மாமானா இல்லை மச்சானா..யாரைப் பார்த்து கேட்கிறாய் வரி…யாரைப்பார்த்து கேட்கிறாய் கிஸ்தி..எங்களோடு வயலுக்கு வந்தாயா.. ஏற்றம் இறைத்தாயா? இல்லை
அங்கு கொஞ்சிவிளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா..என்று மூச்சு இரைக்க வசனம் பேசிவிட்டு அமர்ந்தார்.
தண்ணி..தண்ணி என்று குரல் எழுப்பினார். பூங்கொடி துடித்தெழுந்து…தண்ணுர் கொடுத்தார்.தண்ணீர் குடித்தபின்னும் கண்ணாயிரத்துக்கு மூச்சுவாங்கியது. அதைப்பார்த்த பூங்கொடி பயந்து போய் ..படத்தை நிப்பாட்டுங்க…படத்தை நிப்பாட்டுங்க என்று கத்த உதவி டிரைவர் ஓடிவந்து படத்தை நிறுத்தினார்.
என்ன ஆச்சு…கண்ணாயிரத்துக்கு என்ன ஆச்சு..என்றபடி எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள். கண்ணாயிரம் முரட்டுக்குரலில் ஒண்ணுமில்ல..வசனம் பேசும்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். ஐந்து நிமிடத்தில் சரியாகிடும்.மீண்டும் படத்தைப்போடுங்க..நிறுத்தாதீங்க என்றார்.
சுடிதார் சுதா ஆச்சர்யமாக அவரைப்பார்த்தார்.
பூங்கொடியோ..ஏங்க..உங்களுக்கு இளம்வயசுன்னு நினைப்பா..டானிக் குடிக்கிற நேரத்திலே இது தேவையா..சும்மா இருங்க.. இரண்டு வரிவசனம் பேசும் முன்னே இப்படி இழுக்குது..என்று எச்சரித்தார். கண்ணாயிரம் கேட்கவில்லை. நாட்டு சுதந்திரத்துக்காக எத்தனையோபேர் உயிர் விட்டிருக்காங்க..நான் இந்த வசனத்தை பேசுறதாலே உயிர்போனா..அது எனக்கு பெருமைதான் என்று உணர்ச்சிவசப்பட்டார்.
பூங்கொடி ம்…என் கோபத்தை கிளப்பாதீங்க..டானிக்கை குடிங்க..என்றார். கண்ணாயிரம்…டானிக்கா…வீரவசனத்தை பேசினா தானே தொண்டை திறந்திடும் போ..போ..எனக்கு வீரம் பொங்கிவழிகிறது. என் தேசப்பற்றைக் கட்டுப்படுத்தாதே…போர்…போர்..போர்..என்று முழங்கினார்.
எல்லோரும் கண்ணாயிரத்தை ஆச்சரியத்துடன் பார்க்க…நிறுத்தாதீர்கள் படத்தை. சுதந்திர காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடட்டும்..எங்கும் சுதந்திர கீதம் ஒலிக்கட்டும் என்றார்.
இளைஞர்களும் மீதிபடத்தை போடுங்கள் என்று சொல்ல உதவி டிரைவர் படத்தை ஓடவிட்டார். படம் ஓடியது. கண்ணாயிரம் நிமிர்ந்து உட்கார்ந்தார். படத்தில் வாள் சண்டை வரும் போது கீழே இருந்த குடையை எடுத்து வாள் போல் சுழற்றி சுழற்றி ஆடினார். எல்லோரும் கைத்தட்டியதால் கண்ணாயிரம் உற்சாகமாகி சுழன்று சுழன்று குடையை சுழற்ற திடீரென்று பஸ்சில் மின்னிக் கொண்டிருந்த பல்ப் மீது குடையின் முன்பகுதிபட்டு கிளிங் என்று சத்தம் கேட்டது. பார்த்தால் பல்ப் உடைந்து கீழே சிதறியது. கண்ணாயிரம் அதை கண்டு கொள்ளாமல் மேலும் குடையை சுழற்ற பயில்வான் பாய்ந்து குடையை பிடுங்கி கீழேவைத்தார்.
கண்ணாயிரம் வேகம் குறைந்து கீழே அமர்ந்தார்.என்ன பல்பு போச்சா..பரவாயில்லை.பணம் கட்டிவிடுகிறேன். படத்தை நிறுத்திவிடாதீர்கள் என்று கண்ணாயிரம் கேட்டுக்கொண்டார்.
பயில்வான் அவரிடம் கண்ணாயிரம் அமைதியாக இருந்து படம் பாருங்க என்று கூறினார். சரி என்று கண்ணாயிரம் சொன்னாலும் படம் பார்க்க பார்க்க அவருக்கு உணர்ச்சி அதிகமாகியது.
கடைசியாக கட்டப்பொம்மனை கைது செய்து பானர்மேனிடம் நிறுத்தியபோது..சிவாஜி கணேசன் உணர்ச்சி கொந்தளிபில் அங்கு நிற்கும் எட்டப்பனைப்பார்த்து ஏய்..எட்டப்பா என்று கத்த கண்ணாயிரமும் எழுந்து ஏய் எட்டப்பா என்று ஆவேசமாக கத்த…அந்த குரல் எங்கும் எதிரொலித்தது.
கண்ணாயிரம் ஆ..என் தொண்டை திறந்துவிட்டது. எனக்கு நல்ல குரல்வந்துவிட்டது.வெற்றி…வெற்றி என்று முழங்கினார். அதைக்கேட்ட பூங்கொடி..அடே பரவாயில்லையே…டானிக்குக்கு திறக்காத தொண்டை ஒரு வசனத்தில் திறந்துவிட்டதே என்று மகிழ்ந்தார்.
முழு படத்தையும் பார்த்தா அவருக்கு உண்மையிலே வீரம்வந்தாலும் வந்துவிடும் என்று நினைத்தார். கண்ணாயிரம் தொண்டை சரியானதால் உணர்ச்சிபொங்க வசனங்களை பேசினார். கட்டப்பொம்மனை தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்லும் காட்சிவந்தபோது கண்ணாயிரமும் அதேபோல் பஸ்சில் நடந்தார். தூக்கு கயிறு முன் கட்டப்பொம்மன் பேசும் வசனம் வந்தபோது..துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை என்று கனல் பறக்கவசனம் பேசினார்.
கட்டப்போம்மனை தூக்கிலிடும் காட்சிவந்து சோகப்பாடல்வந்தபோது அனைவரும் கண்ணீரில் மிதந்தபோது கண்ணாயிரமும் கண்களில் கண்ணீர்வடிய கீழே விழுந்தார். அவர் நன்றாக நடிக்கிறார் என்று எல்லோரும் நினைத்தனர. படம் முடிந்து வணக்கம் போட்டபின்னும் கண்ணாயிரம் எழவில்லை.ஏங்க படம் முடிஞ்சுட்டு எழும்புங்க என்று பூங்கொடி அவரை தட்டி எழுப்பினார். ஆனால் அவர் எழவில்லை.என்னங்க…என்னங்க என்று கன்னத்தில் அறைந்தபோதும் அவர் விழிக்கவில்லை. அய்யோ..என்னமோ ஆச்சு அவருக்கு…சோககாட்சியில் உண்மையிலே மயங்கி விழுந்திட்டாரு..நான் என்ன செய்வேன் என்று அழுதார்.
சுடிதார் சுதா ஓடிவந்து கண்ணாயிரத்தை பார்த்தார். எல்லோரும் தள்ளிப்போங்க..காற்று வரட்டும்..என்று கூறியவாறு கண்ணாயிரம் முகத்தில் மினரல்வாட்டர் தண்ணீரை அடித்தார். கண்ணாயிரம் மெல்ல கண்களை திறந்தார்.
ஏங்கபடத்தை முதலில் இருந்து மீண்டும் போடுங்க..சிவாஜி கணேசனை திரும்பபார்த்திட்டா கண்ணாயிரம் எழுந்துடுவாரு என்று சொன்னார். அதன்படி வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் முதலில் இருந்து போடப்பட்டது.
செந்தூர் குமரா. என்று சிவாஜி கணேசன் பேசும்வசனம் வந்ததும் கண்ணாயிரம் எழுந்து உட்கார்ந்தார். ஆ. .என் தலைவன் வந்துட்டார் என்று உற்சாகமாக விசில் அடித்து பார்க்கத்தொடங்கினார்.
கண்ணாயிரத்துக்காக கட்டப்பொம்மன் படம் மீண்டும் ஓடியது.கண்களை கசக்கியபடி கண்ணாயிரம் …ஆவலோடு பார்த்தார்.எல்லோரும் அதை ரசித்தனர்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.