பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பாவூர்சத்திரம், கடையத்தில் நின்று செல்ல கோரிக்கை
1 min read
Request for Balaruvi Express train to halt at Paoorchatram, Shop
28.12.2022
திருநெல்வேலி இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் கடையும் பாவூர் சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி ரயில் பயணிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலியில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு வண்டி எண்: 16791/16792 திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்ற நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின் பாலக்காடு செல்லும் போது பாவூர்சத்திரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும் போது கடையத்திலும் நிற்காமல் செல்கிறது.
இந்த ரயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர்சத்திரம் சுற்று வட்டார பொதுமக்களும் வியாபார பெருமக்களும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். கேரளா செல்ல இந்த பாலருவி ரயில் உபயோகமாக இருந்து வந்தது.
வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கிடப்பட்டு கடையம், பாவூர்சத்திரம் ரயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று மதுரை ரயில்வே கோட்ட மூத்த வர்த்தக மேலாளர், தென்னக ரயில்வே தலைமை வர்த்தக மேலாளருக்கு 2021 ஜன 4 அன்று கடிதம் எழுதினார். மேலும் இந்த இரு ரயில் நிறுத்தங்கள் வழங்குவதற்கு வர்த்தக ரீதியாகவும், இயக்குதல் ரீதியாகவும் சாத்தியக்கூறுகள் உள்ளது என்று 04.10.21 அன்று மதுரை ரயில்வே கோட்ட மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர் அவர்கள், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள
தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கண்ட ரயில் நிறுத்தங்கள் குறித்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதினால் இந்த இரு ரயில் நிறுத்தங்களும் உடனடியாக கிடைத்துவிடும் நிலை உள்ளது.
மேலும் கொரோனாவுக்கு முன்பு கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிலையங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிலையில், அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை 6 மாத காலகட்டங்களில், 23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரயில் நிலையமும், 15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ரயில் நிலையமும் கையாண்டுள்ளது.
மேலும் இந்த திருநெல்வேலி தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி விரைவு ரயில் இதுவாகும். அதுவும் முக்கிய ரயில் நிலையங்களான கடையம், பாவூர்சத்திரம் என இரண்டு ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வது தமிழக பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர் .
இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ரயில்வே கோட்டம் தெற்கு ரயில்வேக்கு முன்மொழிந்துள்ளது. உடனடியாக திருநெல்வேலி தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த எம்பி, எம்எல்ஏக்கள் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திற்கு சென்று உடனடியாக இந்த ரயில் நிறுத்த முன்மொழிவை ரயில்வே வாரியத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதினால் ஒரு மாதங்களுக்குள் ரயில் நிறுத்தங்கள் கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.