April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

ஹாலிங்பெல் ரகசியத்தை கண்ட கண்ணாயிரம்/ நகைசுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram who discovers the secret of Hallingbell/ comedy story/ Tabasukumar

5.1.2023
கண்ணாயிரம் நெல்லையிலிருந்து குற்றாலம் சென்றபோது அங்குள்ள ஓட்டலில் 66-வது எண் அறையில் தங்கியிருந்தனர். இரவில் அவர்கள் தூங்கியபோது ஹாலிங் பெல் தொடர்ந்து அடிக்கப்பட்டது. கதவும் தட்டப்பட்டது. இதனால் கண்ணாயிரம் உடல் முழுக்க தேங்காய் எண்ணை தடவிக்கொண்டு வேட்டியை தார்பாய்ச்சி மடக்கிக்கட்டிக்கொண்டு குடையை துப்பாக்கிபோல் தூக்கிக்கொண்டு ஹாலிங்பெல் அடித்தவரைப்பிடிக்க கதவை திறந்து வெளியே வந்தார். பூங்கொடியும் தலைவிரிக்கோலத்துடன் கையில் இரண்டு பாத்திரங்களை தூக்கிக்கொண்டு ஆவேசமாக வெளியே வந்தார். வெளியில் யாரும் இல்லாததால் ஓட்டல் வரவேற்பு அறை ஊழியரிடம் புகார்செய்ய அங்கு நடந்து சென்றார். கண்ணாயிரமும் அவர் பின்னால் வேகவேகமாக நடந்து சென்றார். வரவேற்பறையில் ஊழியர் தூங்கிக்கொண்டிருந்ததால் பூங்கொடி கோபத்தில் அவர் தலையில் நச் என்று பாத்திரத்தால் அடித்தார். ஊழியர் வலி தாங்காமல் திடுக்கிட்டு எழுந்தபோது தலைவிரிகோலமாக நின்ற பூங்கொடியைப் பார்த்து பேய் பேய் என்று கத்தினார்.
அங்கே ஊழியரின் முன்னால் தேங்காய் எண்ணை தடவியபடி குடையை தூக்கியவாறு நின்ற கண்ணாயிரத்தைப் பார்த்து..அய்யய்யோ…திருடன்..திருடன் என்று கத்தினார். இந்த சத்தம் கேட்டு வாசலில் நின்ற காவலாளி கையில் கம்புடன் வேகமாக அங்கு ஓடிவந்தார். யார் டா அது..நான் இருக்கும்போது எனக்கு தெரியாம ஓடிவந்த கொள்ளைக்காரன்… ஏய்..ஓடாத…ஓடாத.. .நில்லு..அடிச்சிருவேன் என்று மிரட்டினார்.
கண்ணாயிரம் மிரண்டுபோய் நான் கொள்ளைக்காரன் இல்லை.உங்க கஸ்டமரு…என்று சொன்னார். காவலாளி நம்பவில்லை.ஏய் முகமூடி கொள்ளைக்காரன்தான் இப்படி வேட்டியை மடிச்சிக்கட்டிக்கிட்டு உடம்பெல்லாம் எண்ணை தேய்ச்சிக்கிட்டு வருவான்..பொய் சொல்லாதே..இப்பவே போலீசுக்கு போன் பண்ணப்போறேன் என்று கத்தினார்.
கண்ணாயிரத்துக்கு ஒண்ணும் ஓடவில்லை. ஓய்..புரியாம பேசாதியும்..கொசுக்கடி தாங்காமத்தான் நான் உடம்பிலே தேங்காய் எண்ணை தடவியிருக்கேன்.. என்னைப்போயி கொள்ளையன்னு சொல்லுறீய..உன்னை குடையால அடிப்பேன் என்று பாய்ந்தார்.
காவலாளி தன் கையிலிருந்த கம்பால் குடையை தட்டினார். கண்ணாயிரம் மனம் தளரவில்லை. வாள் சண்டை போடுவதுபோல் இருவரும் சுழன்று சுழன்று தாக்கினர். பூங்கொடி..நிறுத்துங்க..நிறுத்துங்க என்று சொல்லிப்பார்த்தார். அவர்கள் கேட்கவில்லை. பூங்கொடியை பேய் என்றும் கண்ணாயிரத்தை திருடன் என்றும் நினைத்த ஓட்டல் ஊழியர் மயங்கிகிடந்தார். அவரை முதலில் எழுப்பவேண்டுமே.. இவர்கள் சண்டை போட்டுக்கொண்டிரிக்கிறார்களே என்று கோபத்தில் பூங்கொடி கத்தினார். அவர்கள் வாள் சண்டை போல் பாய்ந்து பாய்ந்து தாக்கினார்கள்.
இதைப் பார்த்த மற்றொரு ஊழியர் அங்கு ஓடிவந்தார். யார் நீங்க..இந்த நேரத்தில் இங்கே வந்தீங்க…இங்கே ரூம்பெல்லாம் கிடையாது…புள் போங்க..போங்க என்று விரட்டினார்.
பூங்கொடி கோபத்தில் யோவ்…யாரய்யா நீ விவரம் தெரியாம கத்துற…நாங்க ஓட்டல் கஸ்டமரு.. நாங்க 66-ம் நம்பர் ரூமிலே தங்கியிருக்கிறோம்..என்றார் பூங்கொடி. 66_ம் நம்பர் ரூம்பா…அதை யாருக்கும் கொடுக்கிறது இல்லையே..பொய் சொல்லுறீயளா..என்று அதட்டினார்.
பூங்கொடி உடனே தன் இடுப்பில் சொருகியிருந்த சாவியை எடுத்துக்காட்டினார். அதைப்பார்த்ததும்..ஆமா..கூட்டம் அதிகமாக இருந்ததால அந்த ரூமையும் கொடுத்துட்டாங்களா.. உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி..அந்த ரூம்புதான் பிரச்சினை..பாடாபடுத்துது..என்றார்.
அதற்கு அந்த ஊழியர் நீங்க ரூமில் இருந்து இண்டர்ஹாமில் உங்க பிரச்சினையை சொல்லியிருக்கலாமே..இப்படி கீழே வரவேண்டிய அவசியமே இல்லையே என்றார். பூங்கொடி கோபத்தை அடக்கிக்கொண்டு..அந்த இண்டர்ஹாமை எடுக்காததுதான் பிரச்சினை. அதனாலத்தான் பிரச்சினையை சொல்லுறதுக்காக நாங்க கீழே வந்தோம். எங்களைப்பார்த்து பயந்து வரவேற்பறை ஊழியர் மயங்கிவிழுந்துவிட்டார்.. என்று சொன்னார்.
அப்படியா என்ற ஊழியர் வரவேற்பறையில் மேஜைக்கு கீழே மயங்கிக்கிடந்த ஊழியரைப்பார்த்தார். அட..மயங்கில்லா கிடக்கான் என்றபடி வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் ஓங்கி அடித்தார். அந்த வரவேற்பறை ஊழியர் எழுந்து பேய் பேய்..திருடன் திருடன் என்று கத்த அங்கு நின்ற மற்ற ஊழியர் ஏய் கத்தாதே..அவங்க 66-வது அறையிலே தங்கியிருக்கிறவங்க…ஏதோ பிரச்சினையின்னு இண்டர்ஹாமிலே சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க..நீ எடுக்கல..தூங்கிட்டா..அதனாலே மேலே இருந்து வந்திருக்காங்க..என்றார்.

அப்படியா ..கொஞ்சம் தூங்கிட்டேன்..அதனால வந்தவினை..சாரி தப்பா நினைக்காதீங்க.. என்று வரவேற்பறை ஊழியர் பூங்கொடியிடம் கூறினார்.
சரி காவலாளியிடம் அவர் ஏன் சண்டை போடுறாரு என்று கண்ணாயிரத்தைப்பார்த்து பூங்கொடியிடம் வரவேற்பறை ஊழியர் கேட்டார்.
அதா..என் வீட்டுக்காரரு உடம்பிலே எண்ணை தேய்ச்சிருப்பதைப்பார்த்து அவரை காவல்காரர் முகமூடி கொள்ளைக்காரன் என்று சொல்லிப்புட்டாரு. அதனால கோபத்திலே காவலாளியிடம் வாள் சண்டை போடுறாரு..என்றார். காவலாளி மீது ஆவேசம் அடைந்த கண்ணாயிரம் குடை கம்பியால் அவர் வயிற்றில் குத்த அய்யோ குத்திட்டான் குத்திட்டான் என்று காவலாளி கத்த ஒரே சத்தம். ஓட்டல் ஊழியர்கள் இரண்டுபேரும் கண்ணாயிரத்தை மடக்கிப்பிடித்து…நீங்க கொள்ளைக்காரர் இல்லை.கஸ்டமர் என்று சொன்னபிறகு கண்ணாயிரம் அமைதியானார். பழைய சினிமா படத்திலே வாள்சண்டை நிறைய பார்ப்பீங்களோ..அதான் புகுந்து புகுந்து தாக்கிறீயே என்று கண்ணாயிரத்திடம் சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை..தன்கை பலத்தை பரிசோதித்துக்கொண்டார்.
சரி..மேல ரூமில் என்ன பிரச்சினை..தலைவிரி கோலமா ஏன் வந்தீங்க என்று பூங்கொடியிடம் ஓட்டல் ஊழியர் கேட்க..பூங்கொடி..அதுவா..அது பெரிய பிரச்சினை..அறையை பூட்டிட்டு தூங்கினோமா..அப்போ திடீரென்று ஹாலிங்பெல் அடிக்கிற சத்தம்.யாரு யாருன்னு கேட்கோம்..சத்தமே இல்லை. மணியோ பன்னிரெண்டு.பேயாக இருக்குமோ அப்படின்னு கதவை திறந்துட்டுவந்து பாத்தா யாருமே இல்லை. திருப்பி கதவை பூட்டிவிட்டுவந்து படுத்தா..மறுபடியும் ஹாலிங்பெல் அடிக்கிற சத்தம்..அத்தோடு கதவை டமடமா..டமடமான்னு தட்டுற சத்தம். இதை வரவேற்பறை ஊழியரிடம் சொல்லலாம் என்றால் அவர் இண்டர்ஹாமை எடுக்கவில்லை. அதை சொல்லுறதுக்குத்தான் பயந்துபோய் கீழே வந்தோம். எங்க வீராவேச கோலத்தைப் பார்த்து தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.. அதான் பிரச்சினை என்றார். அதை கேட்டதும் ஓட்டல் ஊழியர்..ஹாலிங்பெல்லை அழுத்துறது யாரா இருக்கும் என்று கேட்க.. அந்த நேரத்தில் சலங்கை சத்தம் கேட்க..கண்ணாயிரம் உடனே பேய்..சலங்கை சத்தம் கேட்குது என்று சொல்ல ஓட்டல் ஊழியர் அவரிடம் பேயாவது..பிசாசாவது..அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க.. கதவிலே அலங்காரத்துக்காக சின்ன சின்ன மணி தொங்குது..காத்திலே அசையும் போது சலங்கை சத்தம்போல் கேட்குது என்றார். கண்ணாயிரம் அப்படியா ..நான்தான் பேயின்னு நினைச்சிட்டேன். அப்படின்னா..எங்க அறையிலே ஹாலிங்பெல்லை அழுத்துறது யாரு என்று கண்ணாயிரம் கேட்டார்.அதை மேலபோயி பார்ப்போம் என்று ஊழியர் சொல்ல கண்ணாயிரமும் பூங்கொடியும் அவரை அந்த அறைக்கு அழைத்துச்சென்றனர்.
பூங்கொடி கதவை திறக்க முயன்றார்.ம்..முடியவில்லை. இது பெரிய தகராறு பண்ணுது நீங்க திறங்க என்று ஊழியரிடம் சாவியை கொடுத்தார்.அவர் வாங்கி கதவை திறக்க முயற்சி செய்தார்.கதவு திறக்காமல் மக்கர் பண்ணியது. என்னசெய்யலாம் என்று அவர் விழித்தபோது.. ஏங்க அண்டாகா கசம் சொல்லுங்க..இரவு கதவை திறந்த ஊழியர் அப்படிதான் சொன்னார் என்றார் கண்ணாயிரம்.
அப்படியா..அவர் சும்மா விளையாட்டா சொல்லியிருப்பார்..கொஞ்சம் சாவியிலே எண்ணை போட்டா.. கதவு திறந்திடும் என்றார் ஊழியர். அதைக்கேட்ட கண்ணாயிரம் எண்ணைக்கா பஞ்சம் ..சாவியை கொடடுங்க என்று வாங்கி எண்ணை தேய்த்த தன் உடம்பில் சாவியை தடவிக்கொடுத்தார். ஊழியர் அதை வாங்கி கதவை எளிதாக திறந்தார்.. அடடா.எண்ணையிலே இவ்வளவு மவுசு இருக்கா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
கதவை திறந்து உள்ளே சென்றதும் ஒருவித வாடை அடித்தது. அதை உணர்ந்த ஊழியர் என்ன…அல்வா வாங்கி உள்ளே வச்சிருக்கியளா..அந்தவாடையைக் கண்டா குரங்கு விடாதே…அதான் வந்து ஹாலிங்பெல்லை அழுத்துதுன்னு நினைக்கிறேன்..அதை எடுத்து வீசியிருங்க என்றார்.
கண்ணாயிரம் விழித்தார். கஷ்டப்பட்டு வாங்கினதை வீசவா என்று யோசிக்க..அதை என்னிடம் கொடுங்க..நான் கீழே வச்சிருந்து காலையிலே தர்ரேன் என்றார். இது உள்ளே இருந்தா குரங்கு தூங்கவிடாது என்று நினைத்த கண்ணாயிரம் பெட்டிக்குள்ளிருந்து அல்வா பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். இதையும் மீறி குரங்கு வந்து ஹாலிங்பெல்லை அழுத்தினா என்ன செய்யுறது என்று கண்ணாயிரம் அப்பாவியாக கேட்டார்.அதற்கு அந்த ஊழியர்.ஒண்ணும் கவலைப்படாதீங்க..ஹுலிங்பெல் இணைப்பு ஒயரை இப்போ கட்பண்ணிருவோம்..அப்புறம் எப்படி ஹாலிங்பெல்லை அழுத்தமுடியும் என்றார்.
ஆமா..நல்ல ஐடியா..ஹாலிங்பெல் ஒயரை கட்பண்ணிடுங்க..என்று சொன்னார்.ஊழியரும் ஹாலிங்பெல் ஒயரை கட்பண்ணினார். ஹாலிங்பெல்லை அழுத்தினார். சத்தம்வரவில்லை.அப்பாட..நிம்மதி..யாரும் கூப்பிடணுமுன்னா கதவை தட்டிக்குப்பிடட்டும் என்று கண்ணாயிரம் வாயெல்லாம் பல்லாக சிரித்தார்.
ஓட்டல் ஊழியருக்கு கண்ணாயிரமும் பூங்கொடியும் நன்றி சொன்னார்கள். அவர் குட்நைட் என்று சொல்லிவிட்டு கீழே சென்றார். கண்ணாயிரம் வேகமாக கதவை லாக் செய்துவிட்டு வேகமாக போர்வையை விரித்து படுத்தார். பூங்கொடியும் அப்பாட..ஒரு பிரச்சினை தீர்ந்தது என்றபடி விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்தார். இருவரும் களைப்பில் நன்றாக தூங்கிவிட்டனர். விடிந்தது.கதவு பக்கம் யாரோ நடமாடுவது போல் இருந்தது. கண்ணாயிரம் விழித்தார். யாரோ நம்மை கூப்பிடவந்திருங்காங்க போல..ஹாலிங்பெல் அடிக்காததால வெளியே நிக்கிறாங்க போல என்று நினைத்துக்கொண்டு எழுந்தார்.மெல்ல கதவை திறந்து பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிரவைத்தது. ஒரு குரங்கின் மேல் மற்றொரு குரங்கு ஏறி நின்று ஹாலிங்பெல் சுவிட்சை அழுத்தி அழுத்தி பார்த்துக்கொண்டிருந்தது. சத்தம் வராததால் சுவிட்சை கையால் ஓங்கி குத்தியது. கண்ணாயிரம் பயத்தில் வேகமாக கதவை பூட்டினார். அவர் நெஞ்சு பக்பக் என்று அடித்தது.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.