April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

சுடிதார்சுதா கதவை தட்டிய கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram/Comedy story/ Tabasukumar when Suditharsuda knocked on the door

13.1.2023
கண்ணாயிரம் குற்றாலம் சென்றபோது அங்குள்ள ஓட்டலில் அவரும் அவரது மனைவி பூங்கொடியும் தங்கினார்கள். காலையில் கண்ணாயிரம் எழுந்துபார்த்தபோது அறைக்கு வெளியே ஒரு குரங்கின் மீது மற்றொரு குரங்கு ஏறி ஹாலிங்பெல்லை அடிக்க முயற்சி செய்தன. கண்ணாயிரம் உடனே கதவை பூட்டிவிட்டு பூங்கொடியை எழுப்பி குரங்கு இருக்கு என்று சொல்ல பூங்கொடி கதவை திறந்துபார்க்க குரங்கு ஒன்று வேகமாக உள்ளே வரமுயல பூங்கொடி வேகமாக கதவை சாத்த அதில் குரங்கின்வால் லேசாக சிக்கிக்கொள்ள அதை மீட்க மற்ற குரங்குகள் வந்து முற்றுகையிட்டன.
அறைக்குள் சிறைவைக்கப்பட்ட கண்ணாயிரமும் பூங்கொடியும் இண்டர்ஹாமில் அலற ஓட்டல் ஊழியர்கள் பட்டாசுவெடித்து குரங்குகளை விரட்டமுயல கோபம்கொண்ட ஒரு குரங்கு தீப்பந்த திரியை ஓலை குடில்மேல் போட அந்த தீயை அணைக்க தீயணைப்பு படை வந்தது. தீயை அணைத்தஅவர்களையும் குரங்குகள் விரட்ட கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் மீட்க வும் குரங்குகளை பிடிக்கவும் வனத்துறையினர் வலை மற்றும் கூண்டுகளுடன் வந்தனர்.
குரங்குவால் சிக்கிக்கொண்டுள்ள அறையை நெருங்கியவுடன் மற்ற குரங்குகள் சிதறி ஓடின. உடனே வால்சிக்கியிருக்கும் குரங்கின் அருகே கூண்டை வைத்தனர். கண்ணாயிரம் சிறைபட்ட அறைக்கதவை தட்டி மெல்ல கதவை திறங்கள் வால்சிக்கிய குரங்கு ஓடிடும் என்று வனத்துறை ஊழியர்கள் கூறினார்கள். இதையடுத்து பூங்கொடி மெல்ல கதவை திறக்க கதவில் வால் சிக்கிய குரங்கு துள்ளி எதிரே இருந்த கூண்டுக்குள் ஓடியது.
அதை வனத்துறையினர் லாவகமாக பிடிக்க மற்ற குரங்குகள் கண்களை உருட்டிப்பார்த்தன. குரங்குகள் இருந்த பகுதியில் மற்றொரு கூண்டை வைத்தனர். அதைப்பார்த்ததும் மற்ற குரங்குகள் என்னமோ ஏதோ என்று மரங்களை தாவி தாவி ஓடின.
உடனே கண்ணாயிரம் அறையின் கதவைத்தட்டி குரங்கு போயிட்டு வெளியே வாங்க என்று வனத்துறை ஊழியர்கள் சொல்ல கண்ணாயிரம் மெல்ல கதவை திறந்து எட்டிப்பார்த்தார். அப்போது கூண்டுக்குள் சிக்கிய குரங்கு கண்ணாயிரத்தைப்பார்த்து உய்..உய் உய்..ஹா..ஓ..என்று கத்தின. அந்த சத்தம் கேட்டதும் கண்ணாயிரம் ஆடிப்போனார். வனத்துறை ஊழியர்கள் அவரிடம் பயப்படாதீங்க.. ஒண்ணும் செய்யாது என்று தைரியம் ஊட்டினார்கள்.
அவர்கள்கொடுத்த தைரியத்தில் கண்ணாயிரம் மெல்ல வெளியே வந்தார்.
கூண்டுக்குள் சிக்கிய குரங்கைப்பார்த்து …ஈஈ…ஊஊ..என்ன சேட்டை பண்ணின…ஹாலிங்பெல்லை அமுக்குறது. எட்டிப்பார்த்தா ஓடிவிடுறது..என்ன அநியாயம். இப்பபாரு மாட்டிக்கிட்டியா.. இனி தப்பு செய்வீயாஎன்று ..பேசினார்.
பூங்கொடியும் பயந்து பயந்து வெளியே வந்தார். கூண்டுக்குள் அடைபட்ட குரங்கை பார்த்தார்.அந்த குரங்கு..ஆ..ஊ.என்று பூங்கொடி மீது பாய்வது போல் கூண்டுக்குள் சுற்றி சுற்றி வந்தது. அடி..அம்மாடி அது வாலை நச்சிட்டேன்னு எவ்வளவு கோபம். உள்ளே ஓடிவந்ததாலேதானே உன்வால் கதவிலே சிக்கிச்சி.. என் தப்பு ஒண்ணும் கிடையாதுப்பா..என்று சொல்ல அது வலி தாங்காமல் ஊ..ஊ என்று கத்தியது.
உடனே கண்ணாயிரம்..ஏய் பூங்கொடி..பக்கத்திலே போகாதே..சேலையை பிடிச்சி இழுத்துரும்..என்று கத்தினார். அதைக்கேட்ட பூங்கொடி..ஆமாங்க..இப்ப மற்றகுரங்குகளை காணோம்..இரவு மீண்டும் வந்தாலும் வரும். இனி இந்த ரூமிலே நாம தங்கக்கூடாது. கடைசி ரூமுங்கிறதாலே மரத்திலே இருந்து இறங்கி உள்ளே வந்துட்டு.. அதனாலே நாம வேற ரூமுக்கு போயிடுவோம் என்றார்.
கண்ணாயிரமும்..ஆமா..குரங்கு ஏற்கனவே நம்ம மேல கோபத்தில இருக்கு..இண்டர்ஹாம் வேற ஒர்க் பண்ண மாட்டேங்குது.. என்று புலம்பினார்.
அப்போது ஓட்டல் ஊழியர் ஒருவர் அங்கு வர அவரிடம் ஏங்க..இந்த ரூம்பு எங்களுக்கு சரிப்பட்டுவராது.பேசாம எங்களுக்கு வேற ரூம்பு கொடுங்க என்றார். வேற ரூம்பா என்று இழுத்த ஊழியர்..ஆ..ஆறாம் நம்பர் ரூம் காலையிலே காலியாகிட்டு…நீங்க அந்த ரூமுக்கு போங்க என்று சொன்னார். அந்த ஊழியருக்கு கண்ணாயிரம் நன்றி தெரிவித்தார்.
குரங்கபிடிபட்ட கூண்டை எடுத்துக்கொண்டு வனத்துறை ஊழியர்கள் புறப்பட இந்த குரங்கை என்ன செய்வீங்க என்று கண்ணாயிரம் கேட்க அதை காட்டில்கொண்டுபோய் விட்டுவிடுவோம் என்றனர். அப்படின்னா திரும்பிவந்திடுமே என்று பயத்துடன் கண்ணாயிரம் கேட்க..இனி இங்கே வராது என்று வனத்துறை ஊழியர்கள் சொல்ல கண்ணாயிரம் அப்பாடி என்று பெருமூச்சுவிட்டார்.
பூங்கொடி வனத்துறை ஊழியர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆறாம் நம்பர் அறைக்கு செல்ல தயாரானார். டிரங்பெட்டி ஒரு பேக் மற்றும் பிளாஸ்க் ஆகியவைகளுடன் புறப்பட்டார். கண்ணாயிரம் சூட்கேஸ் தொப்பி கண்ணாடி தாமிரபரணி தண்ணீர் உள்ள ஒரு பக்கெட்டு ஆகியவைகளுடன் புறப்பட்டார். குடை வந்து எடுத்துக்கலாம் என்று நடந்தார்.
ஒவ்வொரு அறை நம்பரா பார்த்தபடி கண்ணாயிரம் சென்றார். ஐம்பது….நாப்பது..முப்பது என்றபடி அவர் நடக்க பேசாமல் வாங்க..சின்னப்பிள்ளை மாதிரி உளறிக்கிட்டு இருக்காதீங்க .வாங்க என்று அதட்டினார்.
கண்ணாயிரம் சரி…சரி என்றபடி ஆ..நடந்தார். இறுதியில்..ஆ எட்டு ஏழு..ஒன்பது..என்ன..ஏழுக்கு முன்னாலே ஆறுதானே வரணும்..ஒன்பது இருக்கு என்று குழம்பினார்.
பூங்கொடி..ஆறாம் நம்பர் அறையை காணோம்..நம்மளை ஏமாத்திட்டாங்க என்று கத்தினார். பூங்கொடி..ஆமாங்க..ஆறை காணோம் …ஒன்பதுதான் இருக்க என்று சொல்ல..அங்கு வந்த ஓட்டல் ஊழியரை கண்ணாயகரம் மடக்கி ஆறை எங்கே என்று கேட்டார். ஆறா… இந்த அருவி இருக்கே இதுக்கு சிற்றாறு என்று பெயர். அருவி விழுந்து ஒடும் தண்ணிதான் ஆறு என்றார்.
ஐயய்யோ… ஆறு அது இல்லை. ஆறாம் நம்பர ரூம்பை எங்கேன்னு கேட்டோம் என்றார். அதா..இதான் ஆறாம் நம்பர் ரூம் என்று காட்ட..கண்ணாயிரம் ஏங்க..ஓன்பதாம் நம்பருன்னு போட்டிருக்கு..பிறகு எப்படி என்று அப்பாவியாக கேட்டார்.
அதா..அது கொஞ்சம் லூசு…என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு..நம்மளைத்தான் லூசுங்கிறான் போல என்று முறைக்க ஓட்டல் ஊழியர் அவரிடம் கோபப்படாதுங்க..இப்பம் ஒன்பதாம் நம்பர் இருக்கா..இதை கீழே இழுத்துவிட்டா..ஆறாம் நம்பர்..இப்பபாருங்க..ஆறாம் நம்பர்..சரியா..என்று சொல்ல அப்போ எப்படி ஒன்பது ஆச்சு கண்ணாயிரம் கேட்க.. யாரோ லூ..லூசாக இருக்கிற ஆறாம் நம்பர் போர்டை ஒன்பதா மாற்றிவச்சிருக்காங்க..என்றார்.
ஆ..வரும்போதே நம்பர் போர்ட் லூசு…உள்ளே எதுவெல்லாம் லூசா இருக்கோ என்று கண்ணாயிரம் முணங்க..ஓட்டல் ஊழியர் சாவியைவைத்து கதவை திறந்தார்.
கண்ணாயிரம் அப்பாட..என்றபடி சூட்கேசுடன் உள்ளே போனார்.பூங்கொடி..ஆ..இடுப்பெல்லாம் வலிக்குது.. கொஞ்ச நேரம் ரெஸ்டு எடுக்கணூம் என்றபடி உள்ளே சென்றார். ஓட்டல் ஊழியர் அவரிடம் ஆறாம் நம்பர் சாவியை கொடுத்துவிட்டு ஏதாவது வேணுமுன்னா இண்டர்ஹாமில் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
கண்ணாயிரம்..பூங்கொடியிடம்..நான் அறுபத்து ஆறாம் நம்பர் ரூமூக்கு போயி குடைகளை எடுத்திட்டுவர்ரேன் கதவை சாத்திக்கோ என்று சொல்லிவிட்டு சென்றார்.
குரங்கு இருக்குமோ என்ற பயம் வேறு இருந்தது. வேகமாக அறுபத்து ஆறாம் அறைக்கு விரைந்தார். குடைகளை எடுத்துக்கொண்டு கதவை சாத்திவிட்டு நடந்தார்…நாப்பது முப்பது இருபது என்று எண்ணியவாறு நடந்தவருக்கு தனது புதிய அறையின் நம்பர் மறந்துவிட்டது.
என்னடா இது..புதிய நம்பர்..யாருக்கிட்ட கேட்க…ஓன்பதாம் நம்பர்..அதை திருப்பி ஆறா மாத்தினான்..இது என்ன புது குழப்பமா இருக்கு…யாருக்கிட்ட கேட்க..ஒரு ரூம்பை தட்டி கேட்போமா..ஒன்பதாம் நம்பர் ரூம்பையே தட்டிக்கேட்போம் என்று தட்டினார். கதவை திறந்து கொண்டு சுடிதார் சுதா வெளியே வந்தார். ஆ..என்று கண்ணாயிரம் அதிர்ச்சியில் நின்றார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.