April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை பாடாய்படுத்திய 6-ம் நம்பர்/ நகைச்சுவை / தபசுகுமார்

1 min read

6th number that confused Kannayiram / Comedy / Tabasukumar

16.1.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் 66-ம் எண் அறையில் மனைவி பூங்கொடியுடன் தங்கியிருந்தார். அங்கு ஹாலிங்பெல்லை அழுத்தி குரங்குகள் சேட்டை செய்ததால் அந்த அறைக்கு பதிலாக வேறு அறை வேண்டும் என்று ஓட்டல் ஊழியரிடம் பூங்கொடி கேட்க அவர் ஆறாம் நம்பர் ரூம் காலியாகிறது அங்கு போங்கள் என்று சொன்னார். உடனே கண்ணாயிரமும் பூங்கொடியும் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு ஆறாம் நம்பர் அறையை தேடிப்போனார்கள். அங்கு அறை எண் போர்டு லூசாக இருப்பதால் ஆறு ஒன்பதாக மாறியிருப்பதை கண்டு தடுமாறி மீண்டும் அந்த நம்பரை ஆறாக மாற்றி அந்த அறைக்குள் சென்றார்கள்.
பின்னர் அறுபத்தாராம் நம்பர் அறையில் விட்டுவந்த குடைகளை எடுக்க கண்ணாயிரம் சென்றார். அந்த குடைகளை எடுத்துக்கொண்டு குரங்குக்கு பயந்து வேகமாக வரும்போது தனக்கு இரண்டாவதாக ஒதுக்கிய அறை எண்ணை மறந்துவிட்டார். ஒன்பதாம் அறையைத்தான் மாற்றி உள்ளே போனோம் அது என்ன நம்பர் தெரியலையே என்று புலம்பியவர் ஒன்பதாம் நம்பர் அறைக்கதவை தட்டிக்கேட்போம் என்று முடிவுசெய்து அந்த அறை கதவை தட்டினார்.
அந்த அறைக்கதவை திறந்துகொண்டு சுடிதார்சுதா வர கண்ணாயிரம் அதிர்ச்சி அடைந்து குடையால் தன்முகத்தை மறைக்க முயன்றார். ஆனால் சுடிதார்சுதா உஷாராகி..கண்ணாயிரம்தானே…ஏன் என் அறை கதவை தட்டின..என்று கேட்க..கண்ணாயிரம் தடுமாறி நான் யாரு..? ஆமா..எப்படி? ..என்று பதட்டத்துடன் கேட்டார்.
இந்த நிலையில் சுடிதார்சுதா தங்கியிருந்த அறை கதவை கண்ணாயிரம் தட்டிவிட்டார் என்று தகவல் பரவ வாலிபர்கள் ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்ததும் கண்ணாயிரம் தப்பி ஓடமுயல வாலிபர்கள் ஓடிவந்து இருபுறமும் சுற்றி வளைத்தனர்.
சுடிதார்சுதா அறைகதவை ஏன் தட்டினேன்னு மாறி மாறி கேட்டனர்.
கண்ணாயிரம் கண்ணீர் மல்க..ஏங்க..இது சுடிதார்சுதா ரூமுன்னு எனக்கு தெரியாது. என் ரூம் நம்பர் மறந்துபோச்சு..அதைக் கேட்கிறதுக்காக ஒன்பதாம் நம்பர் அறைக்கதவை தட்டினேன் என்க..வாலிபர்கள் நம்பாமல்..அது எப்படிங்க..சரியா சுடிதார்சுதா தங்கியிருக்கிற ஒன்பதாம் எண் அறையைப்பார்த்து தட்டினீங்க..ஏன் ஏழு அல்லது எட்டாம் நம்பர் கதவை தட்டியிருக்கலாமுல்ல…என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டனர்.
கண்ணாயிரம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவர்கள் நம்பவில்லை. கண்ணாயிரம் பொய் சொல்கிறார் என்று வாதிட்டனர். கண்ணாயிரம் அவர்களிடம் உண்மையிலே என் ரூம்நம்பர் மறந்துபோச்சு..அதைக்கேட்கிறதுக்காகத்தான் கதவை தட்டினேன் என்று சொல்ல சுடிதார்சுதா பரிதாபப்பட்டு. ஏங்க உங்க ரூம்பு கடைசியிலேதான் இருந்துச்சு..அது ஏதோ அறுபத்து ஆறுன்னு நினைக்கிறேன். நேரா கடைசியிலே போய்பாருங்க..அதாம் உங்க ரூம்பு என்றாள்.
கண்ணாயிரம்..ஆ..அது இல்லை என்க வாலிபர்கள் உஷாராகி..ஏய் ரூம்பு நம்பர் கேட்கிற சாக்கிலே சுடிதார்சுதாவை பார்க்க வந்திருக்கான்டா..அதை மறைக்க என்னவெல்லாம கம்பி கட்டுறவேலையெல்லாம் பாக்கிறார். இதை பூங்கொடியிடம் சொல்லிடவேண்டியதுதான் என்று பயம்காட்ட..கண்ணாயிரம் கொஞ்சம் நடுக்கத்துடன் ஏங்க குரங்கு தொல்லை தாங்காம கடைசி ரூம்பை காலி பண்ணிட்டு இங்கேவந்துட்டோம். ஒன்பதாம் நம்பர் என்ற போர்டு இருந்த அறை எண்ணை மாற்றி அந்த அறையை எங்களுக்கு கொடுத்தாங்க..அந்த அறையிலைத்தான் பூங்கொடி இருக்கா..அது எந்த ரூம்பு தெரியாமத்தான் தவிக்கிறேன் என்று கண்ணாயிரம் அழாத குறையாக சொன்னார்.
அப்போது வாலிபர்கள் அது எப்படிங்க ஒன்பதாம் நம்பர் இருந்ததை எப்படி மாற்றமுடியும் என்று கேட்க..அதா அந்த ஒன்பதாம் நம்பர் போர்டு லூசா இருந்துச்சு. அதை தலைகீழா மாற்றி அந்த அறையை எங்களுக்கு கொடுத்தார்கள் என்க..வாலிபர்கள் சந்தேகத்துடன் சுடிதார்சுதா அறை எண் ஒன்பது என்றிருந்த போர்டை திருப்ப முயன்றார்கள். அது அசையவில்லை.பார்த்தீரா..இந்த போர்டை அசைக்க முடியல..பிறகு எதுக்கு ஒன்பதாம் நம்பர் அறை போர்டை மாற்றி கொடுத்தாங்கன்னு பொய் சொல்லுறீங்க என்று அதட்ட கண்ணாயிரம் பதில்சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டார்.
பூங்கொடி வெளியில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்றபடி கதவை திறந்துபார்த்தார். கண்ணாயிரம் அழ சுடிதார்சுதா மற்றும் வாலிபர்கள் அவரை வேடிக்கைபார்ப்பதை பார்த்து..ஏங்க அங்க என்ன பண்ணுறீங்க..கண்ட கழுதைகளும் சிரிக்குது..இங்கே வாங்க என்று சொல்ல கண்ணாயிரம் குடைகளை தூக்கிக்கொண்டு பூங்கொடியை நோக்கி ஓடினார்.
அவர் கோபத்தில் என்னங்க..குடையை எடுத்திட்டுவர இவ்வளவு நேரமா என்று அதட்ட..கண்ணாயிரம்..அதா..நான் குடைகளை எடுத்துட்டு வேகமா வந்தேன்னா…நம்ம புதிய ரூம் நம்பர் மறந்துபோச்சு…அதை அவங்ககிட்டே கேட்டேன்..அதுக்குத்தான் அவங்க சிரிக்காங்க என்று சொல்ல..பூங்கொடி..வாங்க முதல்ல உள்ளே..முதலில இந்த நம்பரைக்கூட நினைவுவைக்கமுடியாதா..என்று ஏசினார்.
அதற்கு அவர்..இல்லை பூங்கொடி..குரங்கு பயத்திலே வேகமா ஓடிவந்தேனா அதிலே மறந்துபோச்சு…எல்லா ரூமும் ஒண்ணுபோல வேற இருக்கு..எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது.என்றார்.
உடனே பூங்கொடி அவரிடம்..சரிதான். விவரமானவங்களுக்கே குழப்பத்தான்செய்யும். நீங்க வேற விவரம் இல்லாத ஆளு.நீங்க எப்படி குழம்பாம இருப்பீங்க..உங்களுக்கு நம்ம ரூம்பு நம்பரை நினைவுவைக்க ஒருஐடியா சொல்லுறன் என்றார்.
கண்ணாயிரமும் ஆவலுடன் ஆ..சொல்லு சொல்லு என்க பூங்கொடி சொல்லத்தொடங்கினார். ஏங்க..நாம தங்கியிருந்த பழைய ரூம்பு நம்பர் 66. இதிலே ஒண்ணை கழிச்சா எவ்வளவு என்று கேட்க கண்ணாயிரம் தனது சிந்தனையை சுழலவிட்டு.அறுபத்தாறு..அதிலே ஒண்ணை கழிச்சா …ஒண்ணை கழிச்சா அதுஅறுபத்தைந்து என்று ஓங்கி அடித்தார்.
அதைக்கேட்டதும் பூங்கொடி ஆடிப்போனார். கணக்கெல்லாம் சரியாத்தான் போடுறாரு என்று மனதுக்குள் மகிழ்தாலும்,, ஏங்க அறுபத்தாறிலே ஒண்ணை நீக்குங்க என்று சொல்லுறதுக்குப் பதிலாக ஒண்ணை கழிங்கன்னுட்டு தப்பா சொல்லிட்டேன்..சரி 66நம்பரில் ஓண்ணை நீக்கினா எவ்வளவு என்று கேட்க கண்ணாயிரம் உடனே 66எண்ணில் ஒண்ணே இல்லையே…இருந்தால்லா ஒண்ணை நீக்கமுடியும். என்று சொல்ல பூங்கொடி.ம்..உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறதுக்குள்ளே நானே குழம்பிபோவேன்னு நினைக்கிறேன் என்று முகத்தை தொடைத்துக்கொண்டார்.
சரி..உங்களுக்கு சாட்கெட்மெதடில் சொல்லிக்கொடுத்தா சரிவராது..அதனால ஆறுன்னு சொல்லி சொல்லி நினைவிலேவச்சிக்கிங்க என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் உடனே ஆறு ஆறு ஆறு என்று சொல்லி மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். பூங்கொடியும் ஆ..அப்படித்தான்..மீண்டும் மீண்டும் சொல்லுங்க என்க கண்ணாயிரம் ஆறு ஆறு ஆறு என்று ரூம்பை சுற்றி சுற்றிவந்து மனப்பாடம் செய்தார்.
சிறிது நேரம் கழித்து பூங்கொடி அவரிடம் ரூம்பு நம்பரை மனப்பாடம் பண்ணிட்டியளா என்று கேட்க கண்ணாயிரம் ஆ..அழகாக மனப்பாடம் பண்ணிட்டேன் என்க பூங்கொடி அவரிடம் சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் தொண்டையை சரிசெய்தபடி என் ரூம் நம்பர் ஆறு ஆறு ஆறு ஆறு என்று சொல்ல பூங்கொடியோ தலையில் கைவைத்தபடி ஆறுன்னு ஒரேமுறை சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் ஆறுஆறுஆறு என்று ஒரே முறையில் சொல்லிமுடித்தார். பூங்கொடிக்கு தலை சுற்றியது.
இந்த ஆறாம் நம்பரை எப்படி உங்களுக்கு நினைவில்வைக்க வைப்பது என்று யோசித்தவர். ஏதாவது பாடல்மூலம் நினைவில்வைக்க சொல்லலாம் என்று நினைத்தார்.ஆ
ஒன்றானவன்..உருவில்..இது ஆறுவருவதற்குள் மறந்துவிடுவார்.அந்த பாட்டு வேண்டாம்.வேறு என்ன பாட்டு..என்று பூங்கொடி யோசித்தார். ஆறுன்னு என்னபாட்டு வருது..? என்று நடந்தபடி சிந்தித்தார்.

கண்ணாயிரம் உடனே ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே..என்ற பாடலைபாடி இதிலே முதலில் ஆறுன்னு கொஞ்சம் சவுண்டுவருதே என்றார்.
பூங்கொடி முறைக்க கண்ணாயிரம்வேறு திசையில் திரும்பி தலையில் அடித்து யோசித்தார்.
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல
உயிரா உடம்பா பிரிந்துசெல்ல..என்று கண்ணாயிரம் பாடினார்.
இதில் எங்கே ஆறு வருது பூங்கொடி கேட்க
கண்ணாயிரம் பதிலுக்கு ஆறுவருதான்னு பார்த்தேன் என்று அசடு வழிந்தார்.
ஆறுன்னு வருற சினிமா பாட்டு எங்கே…எங்கே என்று பூங்கொடி கத்த..எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் ஒரு பாடல் காற்றில் கலந்துவந்தது. அந்த பாடல்..ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..
இந்த பாடலை கேட்டதும் கண்ணாயிரம் துள்ளிக்குதித்தார். ஆறு வந்துட்டு ஆறு வந்துட்டு என்று சொல்ல பூங்கொடியும் ஆமாங்க..ஆறு ஆறு..அந்தபாடல்…அருமை..அருமை என்றார்.
இருவரும் அந்த பாடலை பாடி ஆட..அது எங்கும் எதிரொலிக்க….அடுத்த அறையில் இருந்தவர்கள் அந்த சத்தம் தாங்காமல் கோபத்தில் கண்ணாயிரம் அறைமுன் திரண்டனர்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.