April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் குளிக்கமுடியாமல் தவித்த கண்ணாயிரம் / நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram who was unable to take a bath in the Courtalam / comedy story / Tabasukumar

21.1.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் ஓட்டலில் 66-ம் எண் அறையில் மனைவி பூங்கொடியுடன் தங்கியிருந்தபோது குரங்குகள் ஹாலிங்பெல்லை அழுத்தி தொல்லை செய்ததால் அவருக்கு 6-ம் நம்பர் அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறைக்கு மனைவியுடன் பொருட்களை கொண்டுசென்ற கண்ணாயிரம் பின்னர் தான் விட்டுவிட்டுவந்த குடைகளை எடுக்க மீண்டும் பழைய 66-ம் எண் ரூம்புக்கு சென்றார். குடைகளை எடுத்துக்கொண்டு புதிய அறையை தேடிவந்தவர் அந்த அறை எண் மறந்ததால் ஒன்பதாம் எண் அறைகதவைத்தட்ட அங்கிருந்து சுடிதார்சுதா கதவை திறந்துவர கண்ணாயிரம் தனது ரூம்பு நம்பரை கேட்பதற்காக கதவை தட்டியதாக சொல்ல வாலிபர்கள் அவரை சுற்றிவளைத்து கேலிசெய்ய ஒரே பரப்பானது. சத்தம் கேட்டு கண்ணாயிரம் மனைவி பூங்கொடி வெளியே வந்து அவரை ரூம்புக்குள் அழைத்து சென்று புதிய அறையின் எண் ஆறை நினைவில்வைக்க பயிற்சிகொடுத்தார். ஒன்றும் சரிப்பட்டுவராத நிலையில் ஆறு மனமே ஆறு என்ற பாடல் ஒலிபெருக்கியில் எதிரொலிக்க ஆறு என்ற நம்பர் கிடைத்துவிட்டது என்று கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியில் கத்த அது பக்கத்து அறையில் உள்ளவர்களை இம்சை செய்ய அவர்கள் கண்ணாயிரம் தங்கியிருந்த அறையை முற்றுகையிட்டு…என்ன சத்தம்..காட்டு சத்தம்.பக்கத்து அறையில் ஆளு இருக்கணுமா வேண்டாமா..அமைதியாக இருங்க என்று சத்தம் போட்டனர்.
அதை கேட்டு கண்ணாயிரம் விழித்தார்.நாம சந்தோஷமா இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கல…பொறாமை என்று சொல்ல..பூங்கொடியோ..அதை ஏற்காமல்..ஏங்க நீங்கதான் காட்டு கத்துகத்தீனீங்க..அமைதியா இருங்க என்றார். கண்ணாயிரமும்..சரி என்று தன் வாயில் விரல் வைத்து..உஸ் என்றார்.
அப்போது ஹாலிங்பெல் அடிக்க…கண்ணாயிரம் மெல்ல கதவைத்திறந்து எட்டிப்பார்த்தார். அங்கே பயில்வான் நின்று கொண்டிருந்தார். என்ன கண்ணாயிரம் ..அருவியிலே குளிக்கப்போறோம்..சீக்கிரம் கிழம்புங்க…என்று சொல்லிவிட்டு சென்றார்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் உற்சாகமானார். பூங்கொடி..புறப்படு..புறப்படு.என்று அவசரப்படுத்தினார். பூங்கொடி..கொஞ்சம் பொறுங்க..தலையிலே.எண்ணை தேய்து அருவியிலே குளிச்சா முட்டாளுக்கும் அறிவு கிடைக்கும் என்பாங்க…நீங்க..தலை கால் கை உடம்பு முழுவதும் எண்ணை தேய்ங்க..என்றாள்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் கோபத்துடன்..அப்ப நான் முட்டாளா என்க பூங்கொடி அவரை சமாதானப்படுத்த..யார் சொன்னது.நீங்க அறிவாளி. தலைக்கு எண்ணை தேய்த்து அருவியிலே குளிச்சா பெரிய அறிவாளியாகிவிடுவீங்க…அப்புறம் உங்களை யாரும் கையிலே பிடிக்க முடியாது என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம்…மகிழ்ச்சியில் நான் பெரிய அறிவாளியாகப்போறேன் என்று கத்த பூங்கொடி அவர் வாயைப்பொத்தி..அமைதி..அமைதி..இந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது..சத்தம்போடாம உடம்பு முழுவதும் எண்ணை தேய்ங்க என்று சொல்ல கண்ணாயிரம் வேட்டியை மடக்கி தார்பாய்ச்சிக்கொண்டு உட்கார்ந்து உடம்பெங்கும் தேங்காய் எண்ணையை தடவினார். ஆ..இதுவே குளிர்ச்சியா இருக்கு…அருவியிலே குளிச்சா அந்த சுகமே தனி என்று மனம் மகிழ்ந்தார்.
அப்போது பூங்கொடி எண்ணை தேய்க்காமல் இருப்பதைப்பார்த்து…என்ன பூங்கொடி..நீ எண்ணை தேய்க்கலையா…உனக்கு அறிவு வேண்டாமா..என்று சொல்ல பூங்கொடி முறைத்துபார்த்துவிட்டு ஏற்கனவே எனக்கு அறிவு அதிகம் இருக்கு…போதும் போதும் என்றார்.

கண்ணாயிரம் உடனே..அதுவும் சரிதான்..நமக்குத்தான் அறிவு அதிகம் வேண்டியது இருக்கு. நம்மளைத்தின் ஏமாத்திப்புடுறானுவ..என்று மனதில் நினைத்துக்கொண்டார். அதோடு பொண்டாடியவிட நாம கொஞ்சம் அறிவாளியா இருக்கிறது நல்லதுதானே என்று மகிழ்ந்து கொண்டார்.
எண்ணை தேய்த்து முடிந்ததும் அறையினுள் கண்ணாயிரம் வேகமாக நடந்துப்பார்த்தார்.ஆ..எது வந்தாலும் சமாளிக்கலாம் என்று கைகளை முறுக்கினார்.

பூங்கொடி புதுக்குடை சேலை துண்டு மற்றும் ஆடைகளை கையில் எடுத்தார். பக்கெட் வேண்டும் என்று நினைத்தவர் அதில் தாமிரபரணி தண்ணீர் இருப்பதை பார்த்து..ஏங்க..இதை ஏன் இதிலே வச்சிருக்கீங்க..கீழே ஊத்திட்டு எடுத்திட்டு வாங்க என்றார்.
அதைக் கேட்டதும் கண்ணாயிரம் கோபம் அடைந்தார்.என்ன நீ விவரம் தெரியாமல் கத்துற.தாமிரபரணி தண்ணியை சாதாரணமாக நினைச்சியா..அந்த தண்ணி நாளடைவில் அப்படியே வத்தினா அதிலிருந்து தாமிரம் கிடைக்குன்னு சொல்லியிருக்காங்க…நீ அதைப்போயி கீழே ஊத்தச்சொல்லுற..போ..போ..நான் கொஞ்சம் விவரமா இருந்ததால இதெல்லாம் தெரியுது..நீ என்னபடிச்சே போ..என்று சத்தம் போட்டார். பூங்கொடி..சரி..சரி..நான் குளிக்க செம்பு எடுத்திட்டுப்போறேன் என்றார்.
உடனே கண்ணாயிரம்..என்ன குளத்திலா குளிக்கப்போறோம்..செம்பு எடுத்திட்டுப்போறதுக்கு …நாம அருவியிலே குளிக்கப்போறோம்…மேல இருந்து அருவி தண்ணி கொட்டும்.நாம தலையை வச்சி குளிக்கப்போறோம்.. இதுக்கு எதுக்கு செம்பு என்று கேட்டார்.
பூங்கொடியும்..ஆமா..சரிதான்..செம்பு வேண்டாம் என்றவர் ஆடைகள் மற்றும் புதுக்குடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். கண்ணாயிரமும் உடம்பு முழுவதும் எண்ணை வடிய தார் பாய்ச்சிய நிலையில் இடதுகையில் கம்பும் வலது கையில் குடையும் பிடித்தபடி புறப்பட்டார். தோளில் துண்டு வேட்டியை தொங்கவிட்டார்.பூங்கொடி அவரிடம்வெளியே போங்க…கதவை பூட்டி சாவியை வரவேற்பறையிலே கொடுத்துட்டுப்போவோம் என்க கண்ணாயிரம் வேகமாக வெளியே வந்தார். பூங்கொடி கதவை பூட்டிவிட்டு சாவியை இடுப்பில் தொங்கவிட்டபடி நடந்தார்.
அப்போது சுடிதார் சுதாவும் ஓரு பக்கெட்டில் ஆடைகளைவைத்துக்கொண்டு வேகமாக முன்னே சென்றார். அதைப்பார்த்த பூங்கொடி..ஏங்க..சுடிதார் சுதாவெல்லாம் பக்கெட் கொண்டு போறா..நீங்கதான் பக்கெட் எடுத்திட்டுவரக்கூடாதின்னு சொல்லிட்டிங்க..என்று முறைத்தார். கண்ணாயிரம் அதை கண்டு கொள்ளாமல் குடைபிடித்தபடி நடந்தார். எண்ணைவழிய நடந்த அவரை அனைவரும் வேடிக்கைப்பார்த்தனர். கண்ணாயிரம் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டார். பூங்கொடி வரவேற்பறையில் சாவியை கொடுத்தபோது ஏற்கனவே கண்ணாயிரத்திடம் வாங்கிய அல்வா பாக்கெட்டை ஓட்டல் ஊழியர் நீட்டினார். கண்ணாயிரம்..ஆபோதுமய்யா..அந்த வாடைக்கு குரங்கு எங்களை பாடாய்படுத்திட்டு..இப்போ குளிக்கப்போகும்போது அதை கொண்டு போறதா..வேண்டவே வேண்டாம் என்று கும்பிட்டார்.
ஊழியர் சிரித்துக்கொண்டே…சரி..குளிச்சிட்டுவாங்க…அப்புறம் பாத்துக்கலாம் என்றார்.
பயில்வானும் சிரித்துக்கொண்டார். பின்னர் பயில்வான் முன்னே நடக்க பின்னால் கண்ணாயிரம் பூங்கொடி சுடிதார் சுதா துபாய்க்காரர் மற்றும் வாலிபர்கள் வந்தனர். மெயின் அருவியை நோக்கி அவர்கள் நடந்தனர்.
அருவியின் ஓசை..ஓ என்ற ஒலியுடன் கேட்டது.குளிர்ந்த பனித்துளிகள் முகத்தில் விழுந்து ஈரமாக்கின. கண்ணாயிரத்துக்கு உடல் குளிர்ந்தது. பூங்கொடியைப் பார்த்து..பூங்கொடி..இப்பமே நடுங்குது. அருவியிலே குளிச்சா எப்படி இருக்கும் தெரியலையே…அந்த தண்ணி சளி பிடிக்குமா என்று கேட்டார்.
பூங்கொடி உடனே..ஏங்க..குற்றால அருவி தண்ணி மூலிகை கலந்தது. அதனால சளி பிடிக்காது. தைரியமாக குளிக்கலாம் என்க..கண்ணாயிரம் அப்படியா ..என்று வாய் பிளந்தார். அருவியை நோக்கி அனைவரது கால்களும் விரைந்தன.
ஆங்காங்க போலீசார் நின்று கூட்டத்தை ஒழுங்குபடுத்திய வண்ணம் இருந்தனர்.அருவிக்குச்செல்லும் பாதையில் கீழே இறங்கியபோது ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக பிரிந்து சென்றார்கள். கண்ணாயிரம் ஆண்கள் பாதையில் சென்றபோது திடீரென்று குரங்கு ஒன்று வேட்டியை பிடித்து இழுக்க..கண்ணாயிரம் அதை தட்டிவிட்டு பூங்கொடி பக்கம் ஓடி அவர் சேலையை பிடித்தபடி நடந்தார். இதைப்பார்த்த பெண் போலீஸ். அட..யாருங்க…பெண்கள் வரிசையில் ஆண் வருரது..போங்க..போங்க..ஆண்கள் வரிசைக்குப் போங்க..என்று அதட்ட..பூங்கொடியும் கண்ணாயிரத்திடம்..குரங்குக்கு பயப்படாதீங்க..கம்பைவச்சி அடிங்க…அங்கே ஆண்கள்பக்கம் போங்க..என்று விரட்டினார்.
கண்ணாயிரம் கண்களை கசக்கிக்கொண்டு ஆண்கள் கூட்டம் சென்ற பாதைக்கு சென்றார். அவர் உடம்பு முழுவதும் எண்ணை வழிய வழிய நடந்துவந்ததைப்பார்த்த ஒரு போலீஸ்காரர்…யாருய்யா அது..எண்ணையை தேய்ச்சிக்கிட்டு குளிக்கவருறது…அங்கே போய்யா..என்று விரட்ட..கண்ணாயிரம்..ஒன்றும் புரியாமல் விழித்தார். என்னங்க..அங்கே போனால் இங்கே போ என்கிறீங்க..இங்கே வந்தா அங்கே போங்கிறீங்க..நான் எங்கேதான் போறது என்று புலம்பினார்.
போலீசார் கவனம் வேறு பக்கத்தில் இருந்தபோது கண்ணாயிரம் ஆண்கள் பக்கத்தில் நழுவி ஓடப்பார்த்தார். போலீசார் அவரை கொத்தாக தூக்கி வெளியே கொண்டு வந்துவிட்டனர். எண்ணை தேய்த்தெல்லாம் அருவியிலே குளிக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.
இது என்னடா கிரஹமா இருக்கு.எண்ணை தேய்த்து குளிச்சாதான அறிவு வரும். அதை தடைபண்ணிட்டா எப்படி அறிவு வளரும். சுத்த அயோக்கியத்தனமால்லா இருக்கு. பிறகு நான் எப்படி குளிப்பேன் என்று ஏங்கினார்.
மற்றவர்கள் அருவியில் ஓடி ஓடி குளிப்பதைப் பார்த்த கண்ணாயிரம் கண்கள் கலங்கின. நாம குளிக்க முடியலையே என்று கண்களை கசக்கியபடி நின்றார்.எண்ணை வழிய வழிய தார்பாய்ச்சியபடி நின்ற கண்ணாயிரத்தை எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அங்கே கூட்டம் அதிகமாகி டிராபிக்ஜாமாகியது. உடனே ஒரு போலீஸ்காரர் கையில் லத்தியை தூக்கிக்கொண்டு கண்ணாயிரத்தை நோக்கி விரைந்தார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.