April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

பாட்டுபாடிய கண்ணாயிரத்துக்கு வந்த சிக்கல் /நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

The problem that came to the singer Kannayiram / comedy story / Tabasukumar

22.1.2023
சுற்றுலா வந்த கண்ணாயிரம் குற்றாலத்தில் தன் மனைவியுடன் ஆறாம் நம்பர் அறையில் தங்கியிருந்தார். அருவியில் குளிக்கச்செல்லலாம் என்றவுடன் கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தார். பூங்கொடி அவரிடம் ஏங்க..அருவியிலே எண்ணை தேய்த்து குளித்தால் அறிவு நல்லா வளரும் என்று சொல்ல கண்ணாயிரம் வேட்டியை தார்பாய்ச்சிக்கொண்டு உடம்பு முழுவதும் எண்ணை தேய்த்து வேட்டி துண்டை தோளில் தொங்கவிட்டபடி ஒரு கையில் கம்பும் ஒரு கையில் குடையும் பிடித்தபடி புறப்பட்டார். பூங்கொடி சுடிதார் சுதா துபாய்க்காரர் பயில்வான் மற்றும் வாலிபர்களும் சென்றனர். அருவியை நெருங்கியவுடன் ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒருபக்கமும் பிரித்து அனுப்பப்பட்டனர். குரங்கு துரத்தியதால் பூங்கொடி முந்தானையை பிடித்துக்கொண்டு ஓட முயன்ற கண்ணாயிரத்தை பெண் போலீசார் விரட்டிவிட்டனர். ஆண்கள் பக்கம் சென்ற கண்ணாயிரம் எண்ணை வழிய சென்றதால் இங்கே குளிக்கக்கூடாது என்று ஆண் போலீசார் அவரை விரட்டியடித்தனர். இதனால் கோபத்தில் ரோட்டுக்கு வந்த கண்ணாயிரம் அடுத்து எங்கே போவது என்று தெரியாமல் கையில் குடைத்தபடி உடம்பில் எண்ணை வழிய வழிய நின்று கொண்டிருந்தார்.
இதை பார்க்க மக்கள் திரண்டதால் அந்த பகுதியில் டிராபிகஷாமாகியது. உடனே ஒரு போலீஸ்காரர் கையில் லத்தியுடன் அங்கே பாய்ந்து வந்தார். கண்ணாயிரத்தைப் பார்த்து யாருய்யா..நீ.. விஜிபி கோல்டன் பீச்சிலே ஒருத்தர் ராஜா வேடத்தில் சிலைபோல் நிக்கிற மாதிரி கையில் குடைபிடித்து சிலைமாதிரி நிக்கிற… துட்டு வசூல் பண்ணுறீயா..ஓடுய்யா..டிராபிக்ஜாம் ஆகுது என்று சத்தம் போட்டார். உடனே கண்ணாயிரம் விரித்த குடையை மடக்கிக்கொண்டு இந்த இடத்தைவிட்டு கொஞ்சம் நகர்ந்து சென்றார்.
அங்கே கூடி நின்று வேடிக்கை பார்த்தவர்களை போங்க. போங்க…கூட்டம் போடாதீங்க போங்க என்று அவர்களை அப்புறப்படுத்தினார். கூட்டம் கலைந்து வாகனங்கள் சென்றபின் அந்த போலீஸ்காரர் மீண்டும் அருவிக்கரைக்கு வந்தபோது கண்ணாயிரம் அங்கே நின்று பெண்கள் குளிக்கும் பக்கத்தை நோக்கி கையை அசைத்து சைகையால் கூப்பிட்டார். இதைப்பார்த்து கோபம் அடைந்த போலீஸ்காரர் ஏய்யா .நீ இன்னும் போகலையா..பெண்கள் குளிக்கிறதை வேடிக்கை பாக்கிறீயா..அங்கே என்ன சைகை காட்டுற.. ஈவ்டீசிங் கேசில உள்ளே பிடிச்சி போட்டுருவம் என்று எச்சரித்தார்.
உடனே கண்ணாயிரம் …சார்..என்ன சார் அநியாயம் இது…என்னை அருவியிலே குளிக்கக் கூடாதுங்கீங்க ..அருவியிலே குளிக்கிற என் மனைவி பூங்கொடிக்கிட்ட சொல்லிட்டுப் போகலாமுன்னு பார்த்தா அதுவும் விடமாட்டேங்கிறீங்க .என்று கத்தினார்.
அதைப் பார்த்த போலீஸ்காரர்…ஏன் கத்துற…முதலில இந்த இடத்தை காலிபண்ணிட்டு ஓடிரு..இல்லை ..என்று லத்தியை ஓங்கினார்.
கண்ணாயிரம் கண்கலங்கியபடி பூங்கொடி…பூங்கொடி என்று கத்த சுடிதார் சுதாதான் திரும்பி பார்த்தார். கண்ணாயிரம் கையைக் காட்டி ஏதோ சொல்ல சுடிதார்சுதாவும் கையை அசைக்க பூங்கொடி அதைப்பார்த்துவிட்டார். என்ன இந்த ஆளு குளிக்காம பெண்கள் பக்கம் வந்து கையை ஆட்டுறாறு..என்று கோபத்துடன் கையை அசைக்க கண்ணாயிரமும் கையை அசைத்து போறேன் என்பதுபோல் சொன்னார்.
பூங்கொடி..என்ன இவர் குளிக்காம கிழம்புறாரு..குளிருதுன்னு நினைச்சிட்டாரோ என்று நினைத்தபடி அருவியில் குளித்தார்.
சுடிதார் சுதாவும் கொட்டும் அருவியில் தலைவைத்து ..அனுபவம் புதுமை..அருவியிடம்கண்டேன் என்று பாடியவாறு உல்லாசமாக குளித்தார்.

கண்ணாயிரம் பெண்கள் குளிப்பதையே பார்த்தபடி நிற்க…யோவ்..இங்கே நிக்காதீரும்..பெண்கள் குளிக்கிற பக்கம் ஆண்கள் நிக்கக்கூடாது…போங்க…போங்க…என்று அவர் முதுகில் கைவைத்து போலீஸ்காரர் தள்ளினார்.
கண்ணாயிரம் முதுகில் இருந்த எண்ணை தன் கையில்பட்டதால்…என்னைய்யா..முதுகிலே எண்ணை தேய்ச்சிக்கிட்டு…ச்சை என்க..கண்ணாயிரம் அவரிடம்..ஏன்சார்.. அருவியிலே எண்ணை தேய்ச்சிக்குளிச்சாதானே..அறிவு வளரும்..என்றார்.
போலுஸ்காரர் தலையில் அடித்துக்கொண்டு..யோவ் அருவியிலே எண்ணே தேய்த்து குளிச்சா அறிவு வளராது..அருவியிலே குளிக்கப்போறவங்க எல்லாம் வழுக்கிதான் கீழே விழுவாங்க… தண்ணி எங்கும் எண்ணை மிதக்கும். சுற்றுச்சூழல் மாசுபடும் புரியுதா ..ஆமா..என்ன கையிலே குடை ..என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே..குற்றாலத்திலே அடிக்கடி மழை பெய்யுமுன்னு சொன்னாங்க…அதான் குடை எடுத்துட்டுவந்தேன்..ஆனா…இங்கே சுள்ளுன்னு வெயில் அடிக்குது. என்று சிரித்தார்.
போலீஸ்கார்..யோவ் ..கொஞ்ச நேரம் நான் உம்மக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா…எனக்கே குழப்பமாயிரும் ..ஓடும் ஓடும் என்று விரட்டினார்.
கண்ணாயிரமும் இனி இங்கே நின்னா கதைக்கு ஆகாதுன்னு ஆண்கள் குளிக்கிற பக்கம் சென்றார். பயில்வான் துபாய்க்காரர் வாலிபர்கள் போட்டிப்போட்டு அருவியில் தலைவைத்து ஆ..ஊ என்று கத்தியவாறு குளித்தார்கள். அவங்கெல்லாம் குளிக்காங்க…நமக்குத்தான் குளிக்கமுடியல…அவங்களுக்காவது அறிவு வளருட்டும் என்று நினைத்தார்.
பயில்வான் சார்..பயில்வான்சார்…என்று பயில்வானை அழைக்க..அவருக்கு காது கேட்கவில்லை. பெரிய தொந்தியுடன் குளிக்க வந்த ஒருவர் கண்ணாயிரம் தன்னைத்தான் கேலி செய்கிறார் என்று நினைத்து…யோவ்..என் தொந்தியைப்பார்த்து கிண்டல் பண்ணுறுயா…தொலைச்சிடுவேன் என்று கையை ஓங்க…கண்ணாயிரம்…சார்..நான் உங்களை சோல்லல..எங்க பயில்வான் சாரை கூப்பிட்டேன் என்று சொல்ல.. என்னை ஏமாத்தலாமுன்னு நினைக்கிறுயா… தொலைச்சிடுவேன்..ஓடிடு..இங்கே இருந்து என்று மிரட்டினார்.
அதைக்கேட்டதும்.. கண்ணாயிரம் ஆடிப்போனார். ஆ.. எத்தனைவிதமான மனுசங்க இருக்காங்க….ஒருபக்கம் போலீஸ்காரர் விரட்டுறாரு. .இன்னொரு பக்கம் முரடன் மிரட்டுறான். நான் ஒரு தனி ஆளு…எப்படி சமாளிப்பேன்…ரூமுக்கு போகவேண்டியதுதான் என்று நினைத்தார்.
இவங்க பண்ணுன கலாட்டாவுல..ஓட்டலுக்கு எப்படி போறதுன்னு மறந்துபோச்சு…கொஞ்சம் யோசிச்சா..வழி தெரிந்திடும்..நமக்கும் நியாபக சக்திக்கும் ரொம்ப தூரம்..வழி தெரியாம வேறு எங்கும் போயிடக்கூடாது…யாரும் வாராங்களான்னு பார்ப்போம் என்று காத்து நின்றார்.
அப்போது கண்ணாயிரம் தங்கியிருந்த ஓட்டலில் இருந்த ஒருவர் கண்ணாயிரத்தைப்பார்த்து…என்ன குளிக்கலையா என்று கேட்க.. அதை ஏன் கேட்கிறீங்க..எண்ணை தேய்ச்சிருக்கிறதால அருவியிலே குளிக்கக்கூடாதாம்.. போலீஸ்காரங்க விரட்டுறாங்க.. ரூம்புக்கு போலாமுன்னா வழி தெரியல என்றார். உடனே அவர்…அப்படியா..வாங்க நான் ஓட்டலுக்குத்தான் போறேன்…வாங்க என்று அழைத்தார்.
கண்ணாயிரமும்..புண்ணியமா போச்சு என்று சொல்லியபடி குடையை மடக்கி கக்கத்தில் வைத்தபடி ஒரு கையை வீசியபடி நடந்தார்.
ஓட்டலுக்கு போயிடலாம்..ரூம் நம்பர் மறந்து போகக்கூடாதே..எல்லாரும் சிரிப்பாங்க .அதனால அந்த பாட்டைபாடியவாறு போவோம் என்று நினைத்தவர் ஒரு கையை ஏந்தியவாறு ஆறு மனமே ஆறு..அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று பாடியவாறு ஒருமாதிரி தலையை அசைத்தபடி நடந்து சென்றார்.
அப்போது அந்தவழியாக நிலக்கடலை பொட்டலத்திலிருந்து நிலக்கடலையை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு வந்தவர் அதில் கொஞ்சம் எடுத்து கண்ணாயிரம் கையில்வைத்தார். இதை திண்ணுக்கிட்டே பாடும்… அதான் காட்சிக்கு கட்சிதமா இருக்கும் என்று சொல்லிவிட்டு போனார். கடலையை பார்த்ததும் கண்ணாயிரம் ஆ..நிலக்கடலை..ருசியா இருக்கும்.. என்றவாறு நிலக்கடலை தொலியை ஊதிவிட்டு ஒவ்வொரு பருப்பாக தூக்கிவாயில் போட்டுக்கொண்டு..பாட்டை முணு முணுத்தவாறு சென்றார்.
சிறிது தூரம் சென்றதும்..ஆறு மனமே ஆறு என்று உரத்தக்குரலில் பாடினார். அந்த பாடலைக்கேட்ட ஒருவர் கண்ணாயிரம் கையில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டார். ஆ..காசு என்று கண்ணாயிரம் மகிழ்ச்சி அடைந்தபோது காசுபோட்ட நபர்..கண்ணாயிரத்தை சுற்றி சுற்றி பார்த்தார். ஆ..கை கால் எல்லாம் நல்லாதானே இருக்கு என்று கண்ணாயிரத்திடம் கேட்க.. ஆ. கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு என்று கண்ணாயிரம் தன் கை கால்களை அசைத்துகாட்டினார்.
அதைப்பார்த்த அந்த நபர்…ஆமா..கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..பிறகு ஏன் பாட்டுப் பாடி பிச்சை எடுக்கிற… இதுக்கு உதவிக்கு ஒரு ஆளு வேற என்று திட்டினார்.
அதைக்கேட்டதூம் கண்ணாயிரம் டென்சனாகி நான் உங்கிட்ட பிச்சை போடுனுன்னு கேட்டேனா. நீயா காசை போட்டுட்டு பிச்சை என்கிறீயா.. உன்னை விடமாட்டேன் என்று அவன் சட்டையை பிடித்து இழுத்தார்.
நீ சொன்னது என் மனைவிக்கு கேட்டிருந்தால் உன்னை தோலை உரித்து தொங்கவிட்டிருப்பார். என் அருவா மாமாவுக்கு தெரிந்திருந்தால் ஊர் பஞ்சாயத்துவைத்து உன் மானத்தை கப்பல் ஏற்றி இருப்பார்.. யாரை பார்த்து கேட்கிறாய் பிச்சை என்று.. மானங்கெட்டவனே….இன்னாபிடி உன் ஒரு ரூபா என்று அவன் கையில் திணித்தார்.
அவன் பைத்தியம்..பைத்தியம் என்று கத்தியவாறு கண்ணாயிரம் பிடியிலிருந்து தப்பி ஓடினான்.
ஓடட்டும்..என் கிட்டவாலாட்டுறானா..ஏதோ பாட்டைக்கேட்டு ரசித்து காசு குடுக்கிறானு நினைச்சா..பிச்சை என்கிறான். பிச்சி எடுத்திடுவேன் என்று காட்டுக்கத்தல் கத்தினார்.
அப்போது அங்கு வந்த ஒருவர் கண்ணாயிரத்தை அழைத்து வந்தவரைப்பார்த்து…என்னங்க.. குற்றாலத்துக்கு அழைச்சு வந்தும் பைத்தியம் குறையலையா.. இன்னைக்கு அமாவாசை வேற…கொஞ்சம் பைத்தியம் அதிகமாத்தான் இருக்கும். ஒருவாரம் தங்கியிருந்து சிகிச்சை கொடுங்க…ஏன் அவசரப்பட்டு கால் சங்கிலியை கழற்றியிருக்கீங்க…காலிலே சங்கிலியை மாட்டுங்க..எப்போ யார் மேல பாயுமுன்னு தெரியாது என்று சொல்ல “நான் பைத்தியம் இல்லை…நான் பைத்தியம் இல்லை” என்று யோசனை சொல்லியவரின் மீது பாய்ந்து அவர் கழுத்தை பிடித்தார் கண்ணாயிரம்.
அதைப்பார்த்து அங்கு நின்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.


வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.