April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை மிரளவைத்த அரைச் சாவி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

A semi-key that struck Kannayiram / comedy story / Tabasukumar

12.2.2023
கண்ணாயிரம் குற்றாலத்திற்கு மனைவியுடன் சுற்றுலா சென்றார்.அவர் உடலில் எண்ணை தேய்த்துக்கொண்டு அருவியில் குளிக்கச் சென்றதால் அவர் குளிக்கக்கூடாது என்று போலீசார்விரட்டியடித்தனர்.
இதனால் கோபம் அடைந்த கண்ணாயிரம் ஓட்டலுக்கு எப்படிசெல்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போது அதே ஓட்டலில் தங்கியிருந்த மற்றொரு நபருடன் வேகமாக நடந்துவந்தார். வெயிலில் நடந்துவந்ததால் அவர் உடலில் வியர்வை வழிந்தது. அவர் மடக்கிக் கட்டியிருந்த வேட்டியெல்லாம் வியர்வை சிந்தியது. ஓட்டலுக்கு வந்த கண்ணாயிரம் அப்பாட ஒருவழியா ஓட்டலுக்குவந்தாச்சு என்று நினைத்தார்.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று தனது அறையின் நம்பர் தெரிந்தாலும் ஓட்டல் வரவேற்பாளரிடம் சொல்லி சாவிவாங்கி அறைக்கதவை திறக்க யோசித்தார். நாம சாவி வாங்கிட்டுப் போயி கதவு திறக்காம சாவி நடுவழியிலே மாட்டிக்கிட்டா சிக்கல் என்று நினைத்தார்.

அவரை அழைத்துவந்தவர் கண்ணாயிரத்துக்கு டாடா சொல்லிவிட்டு பத்தாம் நம்பர் அறைச்சாவியை வாங்கிக்கொண்டு சென்றார். கண்ணாயிரம் தன் மனைவி பூங்கொடிவரட்டும் என்று காத்திருந்தார். சிறிது நேரத்தில் பூங்கொடி சுடிதார்சுதா பயில்வான் துபாய்க்காரர் மற்றும் இளைஞர்கள் அருவியில் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தனர்.
பூங்கொடியை பார்த்ததும் கண்ணாயிரம் எழுந்துசென்று பூங்கொடி என்னை அருவியிலே குளிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க…அதனால நான் கோவச்சிக்கிட்டு இங்கே வந்துட்டேன் என்று அழுவது போல் சொன்னார்.
உடனே பூங்கொடி..ஏங்க உங்களை குளிக்கக்கூடாதுன்னு சொன்னாங்க. என்று கேட்க அடபோ.. பூங்கொடி எண்ணை தேய்த்து அருவியிலே குளிச்சா அறிவு வளருமுன்னு நீ சொன்னே… அங்கே உள்ளவங்களுக்கு அதெல்லாம் தெரியமாட்டேங்குது.. ஏதோ எண்ணை தேய்த்து அருவியிலே குளிச்சா சுற்றுச்சூழல் கெட்டுருமாம்..அறிவு முக்கியமா…சுற்றுச்சூழல் முக்கியமா என்று கேட்டார்.
இரண்டும் முக்கியம்தாங்க…மதியம் சாப்பிட்டுட்டு மீண்டும் அருவியிலே குளிக்கப்போவோம்.. நீங்க இந்த எண்ணையெல்லாம் துடைச்சிட்டுவாங்க..என்றார்.
அப்போ இந்த எண்ணை தேய்க்காம குளிச்சா அறிவு வளருமா என்று கண்ணாயிரம் அப்பாவியாக கேட்க நீங்கதான் ஏற்கனவே எண்ணை தேய்ச்சிட்டியல்ல..அதை துடைச்சிட்டு குளிச்சாலும் அறிவு வளரும்..என்றார் பூங்கொடி.
அதைக்கேட்ட கண்ணாயிரம் அப்படியா என்க பூங்கொடி அறையை நோக்கி நடக்க..கண்ணாயிரமும் அவர்பின்னால் சென்றார். ஆறாம் நம்பர் அறைக்கு சென்றதும் சாவியை கொடுங்க கதவை திறப்போம் என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரம் அச்ச்சோ.. பேச்சுவாக்கலே அப்படியே வந்திட்டேன் என்றார்.
உடனே பூங்கொடி கோபத்துடன் இவ்வளவு நேரம் அங்கே நின்னியள ஏன் சாவியை வாங்கல என்று திட்டினார். தொலைந்துபோகுமுன்னு வாங்கல என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடி பற்களை கடித்தவாறு போங்க போங்க ..ஆறாம் நம்பர் அறைச்சாவின்னு கேட்டு வாங்கிட்டுவாங்க என்று விரட்டினார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் ஆறாம் நம்பர் அறைச்சாவி ஆறாம் நம்பர் அறைச்சாவி என்று சொல்லிக்கொண்டே வரவேற்பறையை நோக்கி நடந்தார்.
அங்கே இருந்த வரவேற்பாளிடம் என் பூங்கொடி சொல்லிச்சு.. ஆறாம் நம்பர் அறைச்சாவி தாங்க என்றார்.
வரவேற்பறை ஊழியர் ஆறாம்நம்பர் அறைச்சாவியை எடுத்துக்கொடுத்தார். கண்ணாயிரம் அதை கையில் வாங்கிவிட்டு கூர்ந்துபார்த்தார் பின்னர் வரவேற்பரை ஊழியரிடம்..என்னங்க.. இது அரைச் சாவிதானா என்று கண்ணாயிரம் கேட்டார். அதற்கு அவர் ஆமா..ஆமா அறைச்சாவிதான் என்றார்.
கண்ணாயிரம் சாவியை மேலும் கீழும் பார்த்துவிட்டு நீங்க பொய் சொல்லுறீங்க…இது அரைச்சாவி இல்லை..முழுசாவி என்றார்.
அதைக்கேட்டதும் வரவேற்பறை ஊழியர்..கோபத்தில் ஓய் காமெடியா பண்ணுற..ஓடிடு இல்லை நான் ஓடிடுவேன் என்று எச்சரிக்க கண்ணாயிரம் சாவியை வாங்கிக்கொண்டு தலை தெறிக்க ஓடினார்.
ஏன் மெதுவா வாங்க..சாவியை வாங்கிட்டுவர இந்த ஓட்டமா என்று பூங்கொடி கேட்க கண்ணாயிரம் மெல்ல அது ஒண்ணுமில்ல பூங்கொடி..நீ அரைச்சாவி கேட்டியா..ஓட்டல் ஊழியர் முழுசாவியை தந்தாரா.. அதனால அவரிடம் ஏங்க அரைச்சாவிதானே கேட்டேன்.. நீங்க முழுசாவி தந்திருக்கியள என்று சொன்னேன்.. அடிக்கவந்திட்டாரு என்றார் கண்ணாயிரம்.
உடனே பூங்கொடி..ஏங்க..உங்கள அடிக்காமவிட்டது பெரிசு. வாங்க சாவியை கொடுங்க என்று வாங்கி கதவை திறந்தார். அப்பாட..குளிச்சிடவருமுன்னால என்ன அலப்பறை பண்ணிட்டிய…போங்க பாத்து ரூமுக்குள்ளே பாத்து போங்க…பைப்பிலே உள்ள தண்ணியிலே துண்டை நனைச்சி உடம்பு முழுவதும் துடைச்சு எடுங்க. .எண்ணைவாடை போயிடும் என்றார்.
கண்ணாயிரம் சரி என்றபடி சூட்கேசில் அமுக்கிவைத்திருந்த ஒரு பழைய துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றார்.
குழாயை திறந்தார். தண்ணீர் கொட்டியது.துண்டை அதில் நனைத்தார். உற்சாகத்தில் வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது என்று பாடியவர் மூக்கில் ஏதோ எலி செத்துக்கிடப்பது போன்ற ஒருவாடை அடித்தது.
துண்டை தண்ணீரில் நனைத்துக்கொண்டே குழாயை முகர்ந்துபார்த்தார். ஆஹா..எலி செத்தவாடைதான் அடிக்குது.. தண்ணி தொட்டியில எலி செத்துக்கிடக்குமோ..அது தெரியாம தண்ணியை திறந்துவிட்டுடாங்க..இதை குடிச்சா என்ன ஆகும் என்று யோசித்தார்.
பூங்கொடி. பூங்கொடி..குழாய் தண்ணியிலே எலிசெத்த வாடை அடிக்குது என்று கத்தினார். உடனே…என்னங்க சொல்லுறீய..இது நல்ல ஓட்டலுங்க..நல்லா மெயிட்டண் பண்ணுவாங்க.. உங்களுக்கு மூக்கு சரியில்ல..என்று பூங்கொடி சொன்னார்.
கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது.எனக்கு மூக்கு நல்லாத்தான் இருக்கு..நீ வேணுமுன்னா வந்து குழாய் தண்ணீரை பாரு என்றார்.
பூங்கொடியும்..அப்படியா வந்து பார்க்கிறேன். ரூம்பை அடைச்சிக்கிட்டு நிக்காதீங்க…வெளியே வாங்க என்றார்.
கண்ணாயிரம் நனைந்த துண்டை தொளில் தொங்கவிட்டபடி வெளியேவர பூங்கொடி பாத்ரூமுக்குள் சென்று குழாய் தண்ணீரை திறந்துபார்த்தார்.
வாஷ்பேஷனில் தண்ணீர் பால்போல் பெருகி ஓடியது. எந்த வாடையும் வரவில்லை.தண்ணீரை கையில் வாங்கி முகர்ந்துபார்த்தார். அதிலும் எந்த வாசமும் வரவில்லை. பிறகு ஏன் அவர் எலி செத்தவாடை அடிக்குதுன்னு சொன்னாரு என்று பூங்கொடி யோசித்தபடி வெளியே வந்தார்.
என்னங்க…குழாயிலே தண்ணீர் நல்லாத்தான் வருது. எந்த வாடையும் இல்லை என்றார். அப்படியா என்றபடி கண்ணாயிரம் மீண்டும் பாத்ரூமுக்குள் சென்றார். தோளில் நனைந்த பழைய துண்டு தொங்க குழாயை திருக்கினார். தண்ணீர் கொட்டியது.மீண்டும் அதே வாடை..கண்ணாயிரம் மூக்கை துளைத்தது. ஆ..வாடை அடிக்கு வாடை அடிக்கு என்றபடி கண்ணாயிரம் வெளியே ஓடிவந்தார்.
பூங்கொடியிடம் சென்று பூங்கொடி உண்மையிலே வாடை அடிக்கு..நான் இந்த துண்டை நனைச்சு உடம்பிலே துடைப்பேன் என்று பூங்கொடி மூக்கின் அருகே துண்டை ஆட்டினார்
.அதிலிருந்து ஒருவித வாடை வீச..பூங்கொடி…அய்யோ அந்த துண்டை தூக்கி தூரவீசுங்க..எனக்கு மயக்கமே வரும்போல் இருக்கு என்றார்.
கண்ணாயிரம் தன் துண்டின் மேல் குறை சொல்வதை எதிர்த்தார். குழாயில் உள்ள தண்ணீர்தான் பிரச்சினை என்றார். பூங்கொடிக்கு ஒரு உண்மை புரிந்தது. கண்ணாயிரம் பழைய துண்டை தண்ணீரில் நனைத்து தோளில் தொங்கவிட்டிருந்ததால் அதிலிருந்து வாடைவந்ததை உணராமல் குழாய் தண்ணீரில் எலிசெத்தவாடைவருகுது என்று சொல்கிறார் என்று புரிந்தது.
உடனே வேகமாக எழுந்து கண்ணாயிரம் தோளில்கிடந்த துண்டை பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார்.கண்ணாயிரம் வாய்பிழந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.