நீட் தேர்வில் விலக்கு- பிரதமரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் கோரிக்கை
1 min read
Exemption from NEET exam- Minister Udayanidhi Stalin’s personal request to the Prime Minister
28.2.2023
பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தபோது நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்தார்.
உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
கோரிக்கை
பிரதமர் மோடியை சந்தித்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்தவில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். கேலோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்துமாறும் கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.