April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தின் இடுப்புவலி தீர்ந்த ரகசியம்/நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayira’s Pelvic Pain Relieved Secret/Comedy Story / Tabasukumar

5.3.2023
கண்ணாயிரம் தன் மனைவியுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோது எண்ணை தேய்த்துக்கொண்டு அருவியில் குளிக்கச்செல்ல போலீசார் துரத்தியதால் ஓட்டலுக்கு ஓடிவந்தார். அங்கு மனைவி பூங்கொடிவந்ததும் நடந்ததைச் சொல்லி கண்ணாயிரம் கண்களை கசக்க உங்க உடம்பிலே உள்ள எண்ணையை துடைத்துவிட்டு வாங்க என்று அவர் சொல்ல கண்ணாயிரம் பாத்ரூமுக்குள் சென்று துண்டினால் எண்ணையை துடைத்து எடுத்தார். அப்போது வந்த ஓட்டல் பையனிடம் மீன் சாப்பாட்டுக்கு பூங்கொடி ஆர்டர் செய்ய அவன் சென்றவுடன் பாத்ரூமுக்குள்ளிருந்து வந்த கண்ணாயிரத்திடம் மீன்குழம்பு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அருவியிலே குளிக்கபோகலாம் என்று பூங்கொடி சொல்ல மகிழ்ச்சியில் வளைந்து வளைந்து ஆடிய கண்ணாயிரத்துக்கு இடுப்பு பிடித்துக்கொண்டது.
இதனால் வலியால் துடித்த கண்ணாயிரத்தின் இடுப்பை பூங்கொடி தடவிவிட..அவரோ..அய்யோ கொல்லுறாளே என்று கத்த வெளியில் மீன்குழம்பு சாப்பாடு கொண்டுவந்த ஓட்டல் பையன் இந்த சத்தத்தை தவறாக புரிந்து கொண்டு கண்ணாயிரத்தை கழுத்தை நெரிப்பதாக நினைத்து அவரை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டல் ஊழியர்களை அழைத்துவந்தான்.
அவர்கள் ஹாலிங்பெல்லை அழுத்த கதவை திறந்த பூங்கொடியிடம் குடும்ப சண்டை என்றாலும் இப்படி கணவன் கழுத்தை நெரிக்கக் கூடாது என்று ஓட்டல் ஊழியர்கள் அறிவுரை கூற அதைக்கேட்டு பூங்கொடி கத்த ஊழியர்கள் ஓடிப்போய் ஓட்டல் மேனேஜரை அழைத்துவந்தனர்.
அவர்..நகருங்க..நகருங்க…என்ன பிரச்சினை.. என்றபடி ஹாலிங்பெல்லை அழுத்தினார். கடும் கோபத்தில் பூங்கொடி கதவை திறக்க…அவரைப்பார்த்த மானேஜர்…என்ன சத்தம்.. ஒண்ணும் பிரச்சினை இல்லையே…அவர் ஏன் படுத்துக்கிடக்கிறாரு..என்று கேட்க…
பூங்கொடி …என்னங்க..எத்தனை பேர் இப்படிவந்து கேட்பீங்க.. ஓவ்வோருவருக்கும் பதில் சோல்லணுமா..என்று எகிற.. அவரோ நான் ஓட்டல் மானேஜர்.. என்னிடம் சொல்லித்தான் ஆகணும்..ஏடா கூடமா ஏது நடந்தாலும் நான்தான் பதில் சொல்லணும் என்க பூங்கொடி உஷ்ணமானார்.
என்னய்யா ஏடகூடமா பேசுற..என்று மேனேஜரை தாக்க பூங்கொடி பாய கண்ணாயிரம் இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்து அமைதி…அமைதி என்க பூங்கொடி ஒருபக்கம் அவரை தள்ள மேனேஜர் ஒரு பக்கம் அவரை தள்ள.. கண்ணாயிரம் விழிபிதுங்கியது.
சண்டை போடாதீங்க என்று கண்ணாயிரம் கத்த பூங்கொடி கோபத்தில் ஒருகுத்துவிட அம்மா என்று அவர் கத்த மேனேஜர் ஆ..நான் குத்தல என்க.. நான் குத்தல என்று கூச்சலிட்டார்.
கண்ணாயிரம் ஆ..நீங்க இல்ல..நீங்க இல்ல..என்று நெளிய பூங்கொடி மற்றொரு குத்துவிட கண்ணாயிரம் நிமர்ந்து நின்றார். ஆ…சரியா போச்சு.. ஆமா சரியா போச்சு..உண்மையாக சரியா போச்சு என்று சொல்ல மேனேஜர் கலைந்த முடியையும் டையையும் சரிசெய்துகொண்டு.. பதட்டத்துடன் என்ன சரியாச்சு ..சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் சிரித்தபடி. மதியம் அருவியிலே குளிக்கப் போறோமுன்னு மகிழ்ச்சியில் இடுப்பை வளைத்து ஆடினேனா.. இடுப்பு பிடிச்சிக்கிட்டு என் மனைவி தடவிவிட்டா அப்பமும் சரியாகலை.. இப்பம் என் மனைவி இரண்டு குத்துவிட்டா இடுப்பு வலி சரியாயிட்டுது.. அதான் சரியாயிட்டுது என்று சொன்னேன் என்றார்.
மேனேஜர் வேதனையுடன்.. உங்க இடுப்பை சரி செய்யத்தானே உங்க மனைவி இடுப்பை தடவிவிட்டாங்க.. பிறகு ஏன் கழுத்தை நெரிச்சமாதிரி…அய்யோ..கொல்லப்பாக்கிறா..காப்பாத்துங்க என்று ஏனய்யா கத்தின..என்று அவர் இடுப்பை பிடித்தபடி கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம்..ஓ..அதுவா..நான் சின்னவயசிலே ரொம்ப கலாட்டா பண்ணுவேன்.. என் இம்சை தாங்காம என் அம்மா என்னை தோசைகரண்டியால அடிக்கவருவாங்க.. நான் ஓடி ஓடி ஒளிவேன்.. அவங்க துரத்தி துரத்தி வருவாங்க.. நில்லுடா..நில்லுடான்னு விரட்டுவாங்க.. நான் நிக்கமாட்டேன்..பாத்தியளா என்று சஸ்பென்ஸ்வைத்து இழுத்தார்.
மேனேஜர் பற்களை கடித்தபடி…ம்.. தாங்கல..சீக்கிரம் சொல்லுங்க..என்க.. கண்ணாயிரம்.. ஓ..அப்படியா..சீக்கிரம் சொல்லுறன்.. நான் அம்மாவுக்கு டேக்கா கொடுத்துட்டு வீட்டைவிட்டு ஓடுவேன்.. என் அம்மா விடாம துரத்துவாங்க… அப்பம்பாருங்க.. நான் வளைந்து வளைந்து ஓடுவேன். ஓடிக்கிட்டே இருப்பேன். என் அம்மாவும் சளைத்தவர் இல்லே..பின்னால தொசை கரண்டியை எடுத்துக்கிட்டு விரட்டிட்டே வருவாங்க..
அப்பறம் பாத்தியளா..என்க மேனேஜரும் ஊழியர்களும் கன்னத்தில் விரல்வைத்து கீழே உட்கார்ந்தார்கள்.

அதைப்பார்த்த கண்ணாயிரம்..என்ன ரொம்ப சோர்வாயிட்டியளா…நான் அப்படியில்லே..சோர்வடையாமல் ஓடிக்கொண்டிருந்தேன்.. அப்புறம் பாத்தா ஒரு முட்டுச்சந்து.. அதை தாண்டி எங்கேயும் ஓடமுடியல.. முன்வச்சகாலை பின்வச்சு ஓடலாமுன்னு பாத்தா என் அம்மா தோசை கரண்டியை தூக்கியபடி நிக்கிறாங்க.. எனக்கோ பயம்.. அடிவிழும் என்று தெரிந்துவிட்டது. இதிலிருந்து தப்பிக்க என்ன வழின்னு யோசிச்சேன்.
அடிவிழமுன்னாலே..அடிவிழுந்தமாதிரி..அய்யோ வலி தாங்க முடியலையே..கொல்லப்பாக்கிறாங்களேன்னு பயங்கரமா கத்தினேன்.
அந்த சத்தத்தைக்கேட்ட பெண்கள் அனுதாபப்பட்டு ஏம்மா பிள்ளையைப்போட்டு இப்படி அடிக்கிற… அடிக்காதம்மா அடிக்காதம்மா..பச்சைப்பிள்ளை ஒண்ணும் தெரியாத மண்ணு.. அதுக்கு என்ன தெரியுமுன்னு சொன்னாங்க.
அதைக்கேட்ட என் அம்மாவுக்கு ஷாக்காயிட்டு அடிக்கவந்ததை நிறுத்திட்டாங்க.. அடப்பாவிப்பயல.. அடிவாங்காமலே அடி வாங்கினமாதிரி கத்துறீயா..இந்த வாயாலே நீ இங்கே இருந்தாலும் புழைச்சிக்கிடுவ என்று சொன்னாங்க.
அதை நான் தேவவாக்கா எடுத்துக்கிட்டேன்.
யார் அடிக்கவந்தாலும் அடிக்குமுன்னே அய்யோ அடிக்காங்களே.. அடிக்காங்களேன்னு கத்திடுவேன். இது என் பழக்கம் என்று சிரித்தார்.
அதைக்கேட்ட மேனேஜர்..பெரு மூச்சுவிட்டபடி..அடிக்க வந்தாத்தானே கொல்லப்பாக்கிறாங்களேன்னு கத்தணும்.. உங்க மனைவி பிடிச்ச உங்க இடுப்பை தடவிதானேவிட்டாங்க பிறகு ஏன் நீங்க கத்தணும் என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே..அது உங்களுக்கு தெரியாது..முதல்ல தடவிவிடுவா பிறகு இடுப்பு பிடிக்கிறமாதிரி ஏன் ஆடினீங்கன்னு இடிமாதிரி அடிவிழும்.. அதான் ..முன் கூட்டியே..அய்யோ கொல்லப்பாக்கிறாளேன்னு கத்தனேன். நீங்க எல்லாம் சத்தம் கேட்டு திரண்டுவந்து என்னை காப்பாத்துனதுக்கு மிக்க நன்றி என்றார்.
மேனேஜர் அவரை முறைத்து பார்த்தபடி..அட…போய்யா..என்றபடி கஷ்டப்பட்டு எழுந்தார்.ம்..
என்னாச்சு..என்று ஊழியர்கள் கேட்க..அவர்..ஆ..என் இடுப்பு பிடிச்சிக்கிட்டு என்று கத்தினார்.
கண்ணாயிரம் அவரிடம் என் மனைவி குத்துனா சரியாயிடும் என்க..அவரோ..ஓய் உம் மனைவி குத்தியதால்தான் எனக்கு இடுப்பு பிடிச்சிக்கிட்டு..போய்யா..போ..என்க
அவரை ஓட்டல் ஊழியர்கள் கைத்தாங்கலாக அழைத்துச்செல்ல கண்ணாயிரம் அப்பாவியாக அவரை பார்த்துக்கொண்டிருந்தார்.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.