May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் வேட்டிக்கு வந்த ஆபத்து/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Danger came to Kannayiram Vedti / comedy story / Tabasukumar

27.3.2023
கண்ணாயிரம் குற்றால அருவியில் மதியம் உடலில் எண்ணையை துடைத்துவிட்டு தோளில் ஒரு வேட்டியை தொங்கவிட்டபடி சென்றபோது அருவியில் வெள்ளம் வர இரண்டுபேர் இறந்துவிட்டதாலும் மேலும் அருவியில் குளித்த இரண்டுபேர் உடலை தேடிவந்ததாலும் கண்ணாயிரத்தையும் மற்றவர்களையும் போலீசார் விரட்டி அடித்தார்கள்.
இதனால் ஓடிப்போய் மரத்தின் அடியில் கண்ணாயிரம் பதுங்க அவரை காணாமல் போலீசில் அவரது மனைவி பூங்கொடி புகார் செய்ய கண்ணாயிரத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க பரிசுவழங்கப்படும் என்று போலீசார் அறிவிக்க அவரை அடையாளம் கண்டு பரிசுபெற ஒருவர் துரத்த கண்ணாயிரம் போலீஸ் நிலையத்துக்குள் ஓடி நான்தான் முதலில் வந்தேன் எனக்கு பரிசு கொடுங்கள் என்றார்.
போலீசார் டென்சனாகி..இருய்யா..புகார் கொடுத்தவங்க வந்த பின்புதான் பரிசு கிடைக்கும் என்றனர்.
பரிசு பெரிசா இருக்குமல்லா என்று கண்ணாயிரம் நச்சரிக்க..போலீசார் அவரை ஏற இறங்க பார்த்தனர். யாருய்யா இவரு.. இடுப்பிலே உடுக்கவேண்டியதை தோளில் தொங்கவிட்டுக்கிட்டு என்று சிரித்தபடி..யோவ் வேட்டியை ஏன் தோளில் தொங்கவிட்டிருக்க என்று கேட்க.. கண்ணாயிரம்…ஏங்க..தோளில் துண்டைத்தான் தொங்கவிடணுமா..வேட்டியை தொங்கவிடக்கூடாதா..அருவியிலே குளிச்சப் பிறகு..புதிதாக உடுக்க வேட்டி வேண்டாமா என்று சொல்ல..யோவ் இப்பதான் அருவியிலே குளிக்கமுடியாதே..பிறகு எதுக்கு வேட்டி என்றனர்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..ஏன்சார் மானம் முக்கியமுல்லா..வேட்டி இல்லாம வெளியே போகமுடியுமா.. வெட்கமா இருக்காதா.. வேட்டிதான் முக்கியம்.. அதை எங்கே போட்டிருக்கோம் என்பது முக்கியமுல்ல..என்று சிரிக்க போலீசார்.. என்னய்யா சொல்லுறான் இவன்..கீழே பாதிதான் உடுத்திருக்கான்.. பெரிய வேட்டியை கீழே உடுக்காம மேலே தொங்கவிட்டிருக்கான். .ஒண்ணும் புரியலையே என்று விழித்தனர்.
அப்போது ஒலிபெருக்கியில்..முக்கிய செய்தி.. அருவியில் யாரும் குளிக்கவேண்டாம். வெள்ளம் குறையவில்லை..ஏற்கனவே இரண்டுபேர் இறந்துவிட்டனர். மேலும் ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. உறவினர்கள் வந்து அடையாளம் காட்டலாம்.. என்று அறிவிக்கப்பட்டது.
அதை கேட்ட போலீஸ்காரர்..ஓ..உடனை போகணுமே..என்று எண்ணியவர் கண்ணாயிரம் தோளில் கிடந்த வேட்டியை எடுத்து..யோவ் இங்கே இருய்யா கொஞ்ச நேரத்திலே கொண்டு தர்ரேன் என்க..கண்ணாயிரம் ஓ..அப்படியா..பத்திரம் தொலைச்சிடாதீங்க..வேட்டியிலே கண்ணாயிரம் என்று குறியீடு போட்டிருக்கும்..பாத்துக்குங்க..இது ராசியான வேட்டி..இதை உடுத்திட்டுப்போனா பல பிரச்சினையிலிருந்து தப்பிச்சிருக்கேன் என்று சொல்ல அந்த போலீஸ்காரர் அதை காதில் போட்டுக்கொள்ளமால் கண்ணாயிரம் வேட்டியுடன் வேகமாக கிளம்பினார்.
கண்ணாயிரம் அவரை பார்த்துக்கொண்டிருக்க மற்றொரு போலீஸ்காரர்..யோவ்..அங்கே போய் இரு என்று அதட்டினார்.
கண்ணாயிரம் அப்பாவியாக..வேட்டி வந்திருமுல்லா சார் என்க போலீஸ்காரர் மெல்ல வரும்..ஆனா வராது என்றார்.
கண்ணாயிரம் திடுக்கிட்டபடி..புரியலையே சார் என்க..அது அருவியிலே புதிதாக மீட்கப்பட்டவன் இருக்கும் நிலையை பொறுத்தது.. ஆமா வேட்டியில இனிஷியல்லதான் குறியீடு போடுவாங்க.. உன் பெயர் கண்ணாயிரமுன்னா வேட்டியிலே ஆங்கிலத்தில் கே அப்படிதானே குறியீடு போட்டிருக்கணும்.. ஏன் கண்ணாயிரமுன்னு முழுசா குறியீடு போட்டிருக்க.. என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம்.. என்ன கேணத்தனமா கேக்கிங்க சார்..கேன்னு குறியீடு போட்டால்..அது கருப்பசாமி என்னுடையது என்பான்.. கண்ணன் என்னுடையது என்பான்.. ஒரே கன்பூசியசா இருக்காது.. அதான் என் வேட்டியிலே கண்ணாயிரமுன்னு முழுசாக குறியீடுபோட்டிருக்கேன்..இப்பம் புரியுதா..எதிலும் விவரமா இருக்கணும் சார்..இல்லன்னா வேட்டியை கொண்டுபோயிருவாங்க..சார் என்று தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்.
போலீஸ்காரரும் ஆமா..ஆமா என்று தலையை ஆட்ட..கண்ணாயிரம் உஷாராக..சார்..என் வேட்டியை எதுக்கு போலீஸ்காரர் வாங்கிட்டு போறாரு..என்க அவரோ..தெரியலையப்பா என்றார்.
ம்..அவர் வேட்டியோட திரும்பி வரும்போது கேட்டுக்குவம் என்று கண்ணாயிரம் அமைதியானார்.

இந்த நேரத்தில் கண்ணாயிரத்திடம் போலீஸ்காரர் வாங்கிச்சென்ற வேட்டியை புதிதாக அருவியில் பிணமாக மீட்கப்பட்டவர் உடலில் போர்த்திவிட ஒரு ஸ்டெரச்சரில்வைத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் தள்ளிக்கொண்டுவந்தனர். கண்ணாயிரத்தை தேடி அலைந்த பூங்கொடி புதிதாக ஒரு உடல் மீட்கப்பட்டதாக தகவல் வந்ததால் அங்கு ஓடினார். ஸ்டெரச்சரில் முகத்தை மூடி கொண்டுவரப்பட்ட உடலை பார்ததும் வேகமாக அதன் அருகில் ஓடினார். வேட்டியில் கண்ணாயிரம் என்ற குறியீடு தெரிய..கண்ணாயிரம்தான் பிணமாக இருக்கிறார் என்று நினைத்து.. அய்யோ..போச்சே..புதுவேட்டியோட போயிட்டியளே..அய்யோ..முகத்தைவேற மூடிவச்சிருக்காங்களே என்று அழ.. காற்று வேகமாக அடித்து முகத்தில் மூடியிருந்த வேட்டிவிலக..பூங்கொடி..அதை பார்த்து..ஆ..இது என்வீட்டுக்காரர் இல்லை..என்வீட்டுக்காரர் கறுப்பா இருப்பார்.. இவர் சிவப்பா இருக்கார்.. இது வேற ஆள் என்று கத்தினார்.
அய்யோ வேட்டி என் கணவருடையது..ம் விடமாட்டேன்..வேட்டியை விடமாட்டேன் என்று சொல்லியபடி அந்த வேட்டிய உருவ ஆஸ்பத்திரி ஊழியர்கள்..அம்மா வேண்டாம்.. வேண்டாம்.. விபரீதமாயிடும்.. அவர்வேற டிரெஸ் போடலை..விட்டுருங்க விட்டுருங்க என்க.. பூங்கொடி கேளாமல் வேட்டியை இழுக்க..ஒரே சத்தம்..பூங்கொடி பிடிவாதமாக இருந்ததால் ஊழியர்கள் அந்த வேட்டியை உருவவிடாமல் தடுத்தனர்.
பூங்கொடி..ம்..ம் என்று தம்கட்டி இழுக்க.. சமாளிக்கமுடியாத ஆஸ்பத்திரி ஊழியர்.. ஏம்மா எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பிணத்துமேல போட்ட வேட்டியை இழுத்திட்டு போனீங்கன்னா..அந்த பிணத்தோட ஆவியும் உங்க கூடவந்திரும்..பரவாயில்லையா என்க பூங்கொடி..அய்யோ அந்த வேட்டியும் வேணாம்..ஆவியும் வேணாம்..ஆளைவிட்டா போதும் என்று வேட்டியை பிடித்த கையை உதறினார்.
இந்த பாவி மனூசன் வேட்டியைவிட்டுட்டு எங்கேதான் போனாரோ..தெரியலையே என்று போலீஸ்நிலையத்துக்கு ஓடிவந்தார்.
அந்த நேரத்தில் போலீஸ்நிலையம் வழியாக ஸ்டெச்சரில் முகத்தை மூடாமல் கொண்டு சென்ற உடலை எல்லோரும் எட்டிப்பார்க்க..கண்ணாயிரமும் எட்டிப்பார்த்தார். அப்பாட..அது நானில்ல என்று மனதை தேற்றிக்கொண்டவர்..உடலைமூடியிருந்த வேட்டியில் இருந்த கண்ணாயிரம் குறியீடை பார்த்துவிட்டு..ஆ..அது என் வேட்டி..என் வேட்டி என்று புலம்பினார்.
அந்த நேரத்தில் போலீஸ்நிலையத்துக்குள் புகுந்த பூங்கொடி..அங்கு பாதிவேட்டியுடன் நின்ற கண்ணாயிரத்தைபார்த்து..அய்யோ..என்று அவரை கட்டிப்பிடித்து அழ..கண்ணாயிரமும் கண்களை கசக்கினார்.
ஏன் பூங்கொடி..நான் போலீஸ்நிலையத்துக்கு வந்து எவ்வளவு நேரமாச்சு..நீ இப்பதானே வந்திருக்க.. என்மேல உனக்கு பாசம் கிடையாதா என்று கேட்க..பூங்கொடி மெல்ல சிரித்தபடி பாசம்தானே..பாவி மனுசா..உன்னை எங்கெல்லாம் தேடி அலைஞ்சேன்..பாசம் இல்லைங்கிறியா என்று கண்ணாயிரத்தின் முதுகில் ஓங்கி ஒரு அடிஅடித்தார்.
திருப்பி பலமா அடிவிழும் என்பதால் கண்ணாயிரம் ஆபத்து ஆபத்து என்று கத்தியபடி ஏட்டைய்யா ரூமுக்குள் ஓட பூங்கொடியும் துரத்திக்கொண்டே சென்றார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.