June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு கைகொடுத்த வலதுகால்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

The right leg that gave a hand to Kannayira/ comedy story/ Tabasukumar

24.3.2023
கண்ணாயிரம் உடலில் எண்ணை தேய்த்துக்கொண்டு அருவியில் குளிக்க சென்றபோது போலீசார் துரத்தியடித்ததால் மதியம் மனைவி பூங்கொடியுடன் குளிக்கசென்றார்.
அப்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு பேர் இறந்துவிட்டதால் குளிக்கவந்தவர்களை போலீசார் விரட்டினார்கள்அருவியில் மூழ்கிய மேலும் இரண்டு பேரை தேடிவந்த நிலையில் போலீசாரின் அடிதாங்காமல் மரத்தின் அடியில் கண்ணாயிரம் பதுங்கி நின்றார். ஆனால் கண்ணாயிரத்தை தேடிய பூங்கொடி அவர் கிடைக்காததால் பயந்து போய் போலீசில் சொல்ல அவர்கள் கண்ணாயிரம் எங்கிருந்தாலும் போலீஸ்நிலையத்துக்குவரவும் என்று ஒலிபெருக்கியில் சொன்னார்கள். வெகுநேரமாக கண்ணாயிரம் வராததால் அவரது அங்க அடையாளங்களை சொல்லி அவரை குண்டுகட்டாக போலீஸ்நிலையத்துக்கு தூக்கிவருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்க கண்ணாயிரத்தை அடையாளம் கண்ட ஒருவர் கண்ணாயிரத்தை பிடித்துகொடுத்து பரிசை தட்டிச்செல்ல நினைத்து அவர்மீது பாய கண்ணாயிரம் ஓட பரபரப்பானது.
கண்ணாயிரம் வேகமாக ஓடியபோது பின்னால் துரத்திவந்தவர் கண்ணாயிரத்தின் வேட்டியை பிடித்து இழுக்க அதுகிழிந்து அதில் ஒரு பகுதி கண்ணாயிரம் கையிலும் மற்றொரு பகுதி பின்னால் துரத்திவந்தவர் கையிலும் இருக்க கண்ணாயிரம் போலீஸ்நிலையத்தை நோக்கிவேகமாக ஓடினார்.
பின்னால் துரத்திவந்தவர் முன்னாடி ஓடி கண்ணாயிரத்தை போலீசில் ஒப்படைத்து பரிசை தட்டிச்செல்லலாம் என்று நினைக்க கண்ணாயிரமோ நாம் முந்திச்சென்று பரிசை பெறவேண்டும் என்று நாலுகால் பாய்ச்சலில் ஓடினார்.
அவர் போலீஸ்நிலைய வாசலிலில் வலதுகாலைவைத்தபோது பின்னால் வந்தவரும் வலதுகாலை போலீஸ்நிலைய வாசலில்வைத்து நான்தான் முதலில் வந்தேன் என்றுவாதாடினார்.
கண்ணாயிரமோ.. இல்லை இல்லை.. நான்தான் முதலில் கால்வைத்தேன் என்று உரக்ககத்தினார். அந்த சத்தம்கேட்டு ஓடிவந்த போலீஸ்காரர் ஒருவர் யாருய்யா நீங்க இங்கேவந்து சத்தம்போடுறீங்க ..தொலைச்சிருவன் என்று மிரட்டினார். அதைக்கேட்ட கண்ணாயிரம்..சார்.சார். தொலைச்சவங்க எல்லாம் உங்ககிட்ட வந்து கம்பளைண்டு பண்ணுவாங்க….நீங்களே தொலைச்சிடுவேன் சொல்லுறீங்க.. ஏன்சார் ஜாக்கிரதையா இருக்கமாட்டீங்களா என்று சொல்லி சிரித்தார்.
அதை கேட்ட போலீஸ்காரர் யோவ் யாருய்யா இவன் நேரம் கெட்ட நேரத்தில காமெடி பண்ணுறான்..ரெண்டு போட்டேன்னா என்று லத்தியை ஓங்கினார்.
அப்போது கண்ணாயிரத்தை துரத்திவந்தவர்..சார்..அவரை அடிக்காதீங்க…இவர் முக்கியமான ஆளு..புதுவையை சேர்ந்த கண்ணாயிரத்தை பிடித்து கொடுத்தால் பரிசுன்னு ஒலிபெருக்கியிலே சொன்னீங்களே..அந்த கண்ணாயிரம் இவர்தான் என்று அறிமுகப்படுத்தினார்.
ஓ..அவனா இவன்..இடுப்பிலே பாதி வேட்டி இருக்கு..இன்னொரு வேட்டியை தோளிலே தொங்கவிட்டிருக்கான்..ஆ கருப்பு உருவம்.. திருட்டு முழி..ஆ..அவனேத்தான் என்றவர் போலீஸ் நிலையத்துக்குள் சென்று தகவல் கூறினார்.
உடனே ஏட்டையா வந்து கண்ணாயிரத்தை பார்த்துவிட்டு…ஓ..இவ்வளவு நேரம் எங்கே போனான்.. இரண்டு தட்டு தட்டி உள்ளே இழுத்திட்டுவாங்க என்றார்.
உடனே ஒரு போலீஸ்காரர் வந்து வாய்யா உள்ளே என்க கண்ணாயிரம் முடியை சரிசெய்துகொண்டு..வர்ரமுல்ல என்று உள்ளே செல்ல அவரை துரத்தி வந்தவரும் கண்ணாயிரத்துடன் உள்ளேவர முயன்றார்.
இதைப்பார்த்த போலீஸ்காரர்..கோபமாகி..நீ யாருய்யா..கண்ணாயிரம் மட்டும்தான் உள்ளேவரணும்..நீ போய்யா என்று அதட்ட அவரோ..சார்..நான்தான் கண்ணாயிரத்தை கண்டுபிடிச்சி போலீஸ்நிலையத்துக்கு கொண்டுவந்தேன்..பரிசு கொடுப்பேன்னு ஒலிபெருக்கியிலே சொன்னீங்களே..அந்த பரிசை கொடுங்க..நான் போயிடுறேன் என்றார்.
உடனே கண்ணாயிரம் ஆ..இல்லை..இல்லை..இவன் என்னை கண்டுபிடிச்சு கொண்டுவரலை..நான்தான் நீங்கள் தேடிரியன்னு ஓடிவந்தேன்..பரிசை எனக்குத்தான் நீங்க கொடுக்கணும் என்க போலீஸ்காரர் விழித்தார்.
இது என்ன புதுவம்பா இருக்கு என்று நினைத்தபோது கண்ணாயிரத்தை துரத்திவந்தவன்…சார்..சார்..அவன் பொய் சொல்லுறான். நான் தான் கண்ணாயிரத்தை கண்டுபிடிச்சேன். அவன் ஓடப்பாத்தான். நான்விடலை.துரத்திவந்தேன். அவரை தப்பவிடலை.தகவல் சொல்ல ஓடிவந்த நான்தான் போலீஸ்நிலைய வாசலில் முதன்முதலா கால்வைத்தேன்..அதனால பரிசு எனக்குத்தான் என்க கண்ணாயிரமோ..சார் பொய் சொல்லுறான். இவன் பரிசை தட்டிச்சென்றுவிடக்கூடாது என்று ஓடிவந்து நான்தான் முதலில் போலீஸ்நிலைய வாசலில் கால்வைத்தேன் என்றார்.
அதைக்கேட்ட போலீஸ்காரர்.. இது என்னைய்யா வம்பா போச்சு.. ஏட்டையாக்கிட்ட வாங்க என்று அழைத்துபோனார். ஏட்டைய்யா அவர்களை பார்த்து..யாருய்யா கண்ணாயிரம் என்க..கண்ணாயிரம்..நான்தான் அய்யா என்றார்.
இவர் யாருய்யா என்று கேட்க.. கண்ணாயிரம் அது எனக்கு தெரியாதய்யா என்றார்.
கண்ணாயிரத்தை துரத்திவந்தவர்..சார்..சார்..கண்ணாயிரத்தை கண்டுபிடிச்சி கொடுத்ததே நான்தான் சார். எனக்கு பரிசு கொடுங்க..நான் போயிடுறேன் என்றான்.
என்ன பரிசா..என்று ஏட்டைய்யா விழிகளை உயர்த்த கண்ணாயிரம் சார்..சார்..அவனுக்கு பரிசு கொடுக்காதீங்க..நான்தான் முதன்முதலில் ஓடிவந்து போலீஸ்நிலையத்திலே கால்வைத்தேன். என்வேட்டியை அவன் கிழித்தபோதும் நான் போராடி ஓடிவந்து கபடிவிளையாட்டில் வெற்றிக்கோட்டை தொடுவதுபோல நான்போலீஸ்நிலைய வாசலை தொட்டேன். அதனால பரிசு எனக்குத்தான் கொடுக்கணும்..என்றார்.
ஏட்டு கோபம் அடைந்து..யோவ் யாரு முதல்ல வந்ததுன்னு தான் பிரச்சினையா..104..அந்த சீசிடிவியை போடுய்யா..யாரு முதல்ல வந்தான்னு பார்ப்போம் என்க..சீசிடிவையை போலீஸ்காரர் இயக்க..கண்ணாயிரமும் பின்னால் துரத்திவந்தவரும் ஒரே நேரத்தில் போலீஸ்நிலைய வாசலில் கால்வைத்திருப்பது பதிவாகி இருந்தது.. என்ன இது இரண்டுபேரும் ஒரே நேரத்தில் கால்வச்சிருக்காங்க…என்று ஏட்டைய்யா குழம்ப..கண்ணாயிரமோ சார்..சார்..அங்கே பாருங்க..நான்தான் வலது காலை மிதிச்சி இடதுகாலை தூக்கி நிக்கிறேன்பாருங்க..அவன்..ம் இடது காலை மிதிச்சி வலதுகாலை தூக்காம தரையிலே வைத்திருக்கிறது பாருங்க..வலது கால் எவ்வளவு முக்கியமானது. வலது காலை எடுத்துவச்சி வாங்கடின்னு பாட்டு கேட்டிரிப்பீயள. .நான் உங்க போலீஸ்நிலையத்தை நல்ல இடமா மதிச்சி வலது காலை எடுத்துவச்சி வந்திருக்கேன் பாருங்க என்க.. ஏட்டைய்யா அந்த காட்சியை மீண்டும் மீண்டும் பாரத்துவிட்டு..ஆமா..நீ கெட்டிக்காரன். வலது காலை எடுத்துவச்சி போலீஸ் நிலையத்துக்கு வந்திருக்க.. உன்னுடைய அறிவை பாராட்டுறேன்.. அதுமட்டுமல்ல கபடி விளையாட்டு ரூல்படி இடது காலை தூக்கியதாலே நீங்கத்தான் ஜெயித்தீங்க. என்றவர் கண்ணாயிரத்தை விரட்டிவந்தவரை பார்த்து படுவா ராஸ்கல்.. இடது காலை எடுத்துவச்சா போலீஸ்நிலையத்துக்குள் வந்த..என்ன நினைச்சிக்கிட்டு இருக்க ஓடிடு..இல்ல நான் பொல்லாதவனாகி விடுவேன்.. ஓடு என்றுவிரட்ட அவன்..சார்..பரிசு..சார் பரிசு என்க ஒரு போலீஸ்காரர் அவனை பிடித்து இழுத்துவெளியே கொண்டு போனார்.
அதைப்பார்த்த கண்ணாயிரம். அவனை விட்டுடாதீங்க.. நாலு போடுபோட்டு அனுப்புங்க..என்வேட்டியை கிழிச்சுப்புட்டான். ஒரு பகுதியை எங்கே போட்டான்னே தெரியல என்று கண்ணாயிரம் கத்தினார்.

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *