அகஸ்தியர் அருவிக்கு ஆசைப்பட்ட கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readஉ
4.4.2023
குற்றால அருவியில் வெள்ளம் என்பதால் கண்ணாயிரம் மற்றும் அவருடன் வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் கோபத்தில் ஓட்டலுக்கு வந்த கண்ணாயிரத்திடம்…அருவி தண்ணிதான் ஷவரில் வருகிறது.. அதில் குளியுங்கள் என்று அவரது மனைவி பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் பாத்ரூமுக்குள் புகுந்து ஷவர் குழாயை திருக்க அது கழன்று கையோடு வர பாத்ரூம் மற்றும் ரூமுக்குள் தண்ணீர் பெருகி ஓடியது. ஓட்டல் வாசல்வரை தண்ணீர் வந்ததால் ஓட்டல் ஊழியர்கள் பதட்டத்துடன் ஓடிவந்து கண்ணாயிரம் ரூமின் கதவை தட்ட..கண்ணாயிரம் அவர்களிடம் என்ன குழாய்வச்சிருக்கிய என்று வாக்குவாதம் செய்தார்.
கழன்ற குழாயை எடுத்துவந்து பூங்கொடி கொடுக்க ஓட்டல் ஊழியர்கள் தலையில் அடித்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்று குழாயை மாட்ட முயன்றார்கள்.முடியவில்லை. தண்ணீர் பீறிட்டு கொட்டியது.கண்ணாயிரம் நனைந்த துண்டுடன்..நான்தான் அப்பமே சொன்னேனே..குழாய் சரியில்லைன்னு நீங்க கேட்டாதானே என்று கன்னத்தில் விரல்வைத்தபடி சொன்னார்.
ஓட்டல் ஊழியர்கள்..யோவ் குழாயெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு..நீதான்யா உடைச்சிட்ட என்று குற்றம் சாட்டியவாறு பிளம்பரை அழைத்துவந்தார்கள். அவர் அரை மணிநேரம் போராடி குழாயை பொருத்தினார். அழுத்தி திறக்கவேண்டாம்.. மெதுவாக திறக்கணும் என்று அறிவுரை கூறிவிட்டு சென்றார்.
ஓட்டல் ஊழியர்கள் கண்ணாயிரத்தை ஒரு முறை முறைத்துவிட்டு ரூம்பை விட்டு செல்ல அவர் நாமா எந்த வம்புக்கும் போறதில்லை..ஆனா எல்லா வம்பும் நம்மை தேடியே வருது …என்ன பண்ணுறது என்று முகத்தை தடவினார். பூங்கொடி அவரிடம் என்ன ஈர துண்டோட நிக்கிறீங்க..கழற்றி காயப்போடுங்க.. என்க கண்ணாயிரம் இன்னோரு துண்டை உடுத்துக்கொண்டு ஈர துண்டை ஜன்னல் பக்கத்தில் பிழிந்து காயப்போட்டார்.
பூங்கொடியிடம்..பூங்கொடி அடுத்து எப்போ அருவியிலே குளிக்கப்போவோம் என்க..அவரோ.. அருவியிலா..இன்னும் அந்த ஆசை இருக்கா.. போங்க..போங்க..அதான் ஷவரிலே குளிச்சிட்டியளே..அது குற்றால தண்ணிதானே என்றார்.
கண்ணாயிரம் விழிப்புடன்.. பூங்கொடி..ஷவரிலே வந்தது குற்றால தண்ணிதான்..ஆனா குற்றால அருவி தண்ணி கிடையாது தெரியுமா..என்னை ஏமாத்த முடியாது..ஓட்டலுக்கு பக்கத்திலே போட்ட போரில இருந்துதான் ஷவருக்கு தண்ணி வருது..தெரியுமா..ஓட்டல்காரங்களே சொன்னாங்க..என்று சொல்ல பூங்கொடி..ம்..அப்படியா..நானும் ஷவரில வருரது.. அருவி தண்ணிதான்னுதான் நினைச்சேன்.. ஏமாத்திட்டாங்க என்றார்.
அப்போது பயில்வான் வேகமாக வந்து கதவை தட்ட..பூங்கொடி கதவை திறந்து என்ன என்று கேட்க..இன்னும் மூணு நாளைக்கு அருவியிலே வெள்ளம் குறையாது. அதனால அருவியிலே குளிக்க முடியாது. எனவே நாம குற்றாலத்தில இரவு தங்கிட்டு காலையிலே புறப்பட்டு பாபநாசம் போவோம். அங்கே அகஸ்தியர் அருவியிலே சுகமா குளிச்சிட்டு ஊருக்கு புறப்படலாம் என்று சொல்ல கண்ணாயிரம்..அப்பம் குற்றால அருவி அவ்வளவுதானா என்று இழுக்க…பயில்வான் அவரை சமாதானப்படுத்தும் விதமாக… .ஏங்க அகத்தியர் அருவி ரொம்ப குளிர்ச்சியா இருக்கும். அதிலே குளிச்சா புத்துணர்வு ஏற்படும் என்று சொல்ல கண்ணாயிரம் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தார்.
பயில்வான் மெல்ல..கண்ணாயிரம்..கவலைப்படாதே.. அகத்தியர் அருவியிலே எப்போதும் தண்ணியிருக்கும். மழைகாலத்திலேதான் அங்கே குளிக்கக்கூடாது என்பாங்க…இப்போ வெயில்காலம்தானே..சும்மா தண்ணி ஜில்லுன்னு இருக்கும்..நல்லா குளிக்கலாம் என்று சொல்லியபோதும் கண்ணாயிரம் உற்சாகமாகாமல் அமைதியாக இருந்தார்.
என்ன என்று கேட்டபோது..ம்..ஊருக்கு போனா குற்றால அருவியிலே குளிச்சோமுன்னு நீங்கள் எல்லாம் சொல்வீங்க..நான் அப்படி சொல்லமுடியாதே.. அகத்தியர் அருவியிலே குளிச்சேன்னுதானே சொல்லமுடியும்..என்று சொன்னார்.
உடனே..ஏய்..இந்த அருவியலே குளிச்சா உன் பாவம் எல்லாம் போயிடும் தெரியுமா..என்று பயில்வான் சொல்ல கண்ணாயிரம் ..அப்படியா..என்க பயில்வான் ஆமா .. என்று சொல்ல.. அப்படின்னா காலையிலே முதல் ஆளா அகத்தியர் அருவியிலே நான்தான் குளிப்பேன்.அப்பதான் பாவம் போகும்.அப்புறம் நீங்க குளிங்க..சரியா..எல்லோரும் ஒரே நேரத்திலே குளிச்சா பாவம் போக ரொம்ப கஷ்டப்படுமில்லையா…என்ன நான் சொல்லுறது என்று கண்ணாயிரம் கேட்டார்.
பயில்வானும் ஆமா..ஆமா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
கண்ணாயிரம் ஓடிப்போய் கதவை சாத்த ..பூங்கொடி..ஏங்க கதவை திறந்துவையுங்க..ரூம்பு காயட்டும்..தண்ணீ அப்படியே நிக்குது என்றார்.
கண்ணாயிரமும் சரி என்றபடி கதவை திறந்துவைத்தபடி தரையை பார்த்து..ப்பூ..ப்பூ என்று ஊதினார்.ஏங்க..நீங்க ஊதி தரை ஒண்ணும் காயாது.. அங்கே போய் உட்காருங்க என்று அதட்ட கண்ணாயிரம் சேரில்போய் உட்கார்ந்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.