May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

குரங்கிடம் சிக்கிய கண்ணாயிரம் போன்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannayiram phone caught by a monkey/ comic story/ Tabasukumar

8.4.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் வெள்ளம்வந்ததால் குளிக்கமுடியாமல் ஓட்டலுக்கு திரும்பினார்.பின்னர் பாத்ரூம் ஷவரில் குற்றால அருவி தண்ணீர்வருவதாக பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் ஷவரில் தண்ணீர் வருவதற்காக குழாயை திருக்க அது கையோடுவர பாத் ரூமுக்குள் பெருகிய தண்ணீர் அறைக்குள் வந்து ஓட்டலுக்கு வெளியே வர ஓட்டல் ஊழியர்கள் பிளம்பரை அழைத்து வந்து குழாயை சரிசெய்தனர்.
அப்போது பயில்வான் வந்து அருவியில் வெள்ளம் குறையாது.. நாளைக்கு காலையிலே பாபநாசம் போவோம் என்று சொல்லிவிட்டு சென்றார்.
கண்ணாயிரம் பாபநாசம் போகலாம் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தார். பூங்கொடியிடம்..பாத்தியா..பூங்கொடி.. நாம குற்றாலத்துக்கு வந்து எத்தனை நாளாச்சு..உங்க அப்பா போனில வந்து மாப்பிளை சவுக்கியமா இருக்கியளா.. குற்றாலம் நல்லா இருக்கான்னு என் போனில வந்து பேசலாமுல்ல.. பேசமாட்டார்.. என்று சொல்ல.. பூங்கொடியோ.. எங்க அப்பாவை குறை சொல்லாதீங்க… ஏங்கிட்ட எங்க அப்பா பேசினாரு.. மாப்பிளையை பத்திரமா பாத்துக்கன்னு சொன்னாரு என்றார்.
அவ்வளவு பேசுறவரு என்போனிலே வரலாமுல்லா..எங்கிட்ட பேசலாமுல்லா.. என்று கேட்டார். உடனே பூங்கொடி..உங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நினைச்சிருக்கலாம்… போன் போட்டா நீங்கதான் எடுக்கமாட்டிங்களே என்று சொல்ல கண்ணாயிரம்.. பொய்..பொய்..யார் போன் போட்டாலும் நான் உடனே எடுப்பேன் தெரியுமா என்றார்.
அதை நான் ஏத்துக்கமாட்டேன்…அருவியிலே காணாம போயிட்டியளோன்னு நான் பலமுறை போன்பண்ணிப்பார்த்தேன்.. நீங்க எடுக்கலையே.. என்று குற்றம்சாட்டினார்.
உடனே..சரி இப்போ போன் பண்ணுபார்ப்போம்.. நான் உடனே எடுப்பேன் என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடி கண்ணாயிரம் நம்பருக்கு போன் போட்டார்.
ஏங்க..நான் போட்டிட்டேன்..உங்க போன் ரிங் சத்தம் கூடவரலை.. போனை எங்க வச்சிருக்கிய என்று திட்ட.. கண்ணாயிரம்.. கால் சட்டைபைக்குள்ளே போட்டிருந்தேன்.. குற்றாலத்துக்கு வந்த பிறகு கால்சட்டையை கழற்றி இங்கே தொங்கவிட்டிருந்தேன்.. அந்த கால்சட்டையை எங்கே.. நீ எங்கேயும் எடுத்துபோட்டியா என்று கேட்டார்.
இல்லையே…என்று பதில் சொல்ல.. அப்போ எங்கே போச்சு…கால்சட்டையையும் காணம்.. அதிலிருந்த போனையும் காணமா.. எங்கே போச்சு.. என்று தேடினார்.
கிடைக்கவில்லை.
பூங்கொடி..என்நம்பருக்கு போன் பண்ணு… யாரும் எடுத்திருந்தா பேசுவாங்க என்று சொல்ல.. பூங்கொடி மீண்டும் கண்ணாயிரம் நம்பருக்கு தொடர்பு கொள்ள… நீங்க தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்.. சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும் என்று ஒலித்தது.
அதைக்கேட்ட பூங்கொடி.. ஏங்க எனக்கு தெரியாமா..வேறு யாருடன் தொடர்பில் இருக்கிய…சொல்லுங்க.. என்று அதட்ட கண்ணாயிரம்..ஆ..அப்படி யாருடனும் தொடர்பில் இல்லை.. என்னை நம்பு என்க.. .பூங்கொடியோ..ம். நான் நம்பமாட்டேன்..ஒரு பெண்ணே சொல்லுதே.. அதை எப்படி நம்பாம இருக்கமுடியும் என்று கேட்டார்.
உன் காதுக்கு அப்படி கேட்கா..திருப்பி போடு.. என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடி கண்ணாயிரம் நம்பருக்கு மீண்டும் போன் போட்டார்.
அப்போது..நீங்க தொடர்பு கொண்டவாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று ஒலிக்க ..பூங்கொடியோ..இப்பம் மாத்தி சொல்லுது.. கேளுங்க என்று போனை கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்.. ஓ..பொய்..பொய்.. நான் இங்கேதான இருக்கேன்.. பிறகு எப்படி நீங்கள் தொடர்பு கொள்ளும்வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று சொல்லலாம்.. நமக்குள்ளே சண்டையை இழுத்துவிடப்பாக்குது..என்றார்.
சரி..இப்போ..உங்க போனை எங்கே என்று பூங்கொடி கேட்க.. ஜவுளிக்கடைக்காரர் கடனை கேட்டு தொந்தரவு பண்ணுனதால..சுவிட்ச் ஆப்பண்ணி கால்சட்டைபைக்குள்தான் போனை போட்டேன் என்றார்.
இப்போ கால்சட்டையையும் காணம்..போனையும் காணமா..போச்சு..போச்சு என்று பூங்கொடி சத்தம்போட அப்போது பூங்கொடி போனுக்கு ஒரு அழைப்பு வந்தது..
யாரு என்று பூங்கொடி கேட்டபோது.. யாரா.. நான்தான் புதுவை ஜவுளிக்கடைக்காரர் பேசுறன்.. கண்ணாயிரம் இருக்காரா.. அவர் போனுக்கு போன் போட்டா.. குரங்கு மாதிரி கத்துறாரு.. நான் சத்தம் போட்டா.. போனிலே முத்தம் கொடுக்கிறாரு.. என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரு.. பணம் தருவாரா..மாட்டாரா.. என்று கண்டிப்பான குரலில் கேட்டார்.
பூங்கொடிக்கு தலை சுற்றியது. என்னங்க.. போனை காணமுன்னு சொல்லுறிய. .போன்போட்டா குரங்கு மாதிரி கத்துறியளாம்..முத்தம் கொடுக்கியளாம்..எனக்கு ஒண்ணுமே புரியலையே..என்றபடி திறந்து கிடந்த ஜன்னலை பார்த்தார்.
ஏங்க..நான் இந்த ஜன்னலை பூட்டிபோட்டிருந்தேனே.. யாரு திறந்துபோட்டது.. என்று கேட்க. .கண்ணாயிரம்.. என்ன பூங்கொடி..காற்று வரட்டுமேன்னு நான்தான் இரவு திறந்துபோட்டேன் என்று சொல்ல.. போச்சுடா..குரங்கு வருமுன்னுதான் பூட்டிவச்சேன்.. நீங்க திறந்துவச்சியளா..போச்சு..உங்க கால்சட்டையை இந்த ஜன்னல் வழியா குரங்குதான் தூக்கிட்டுப்போயிருக்கணும்..அதில் இருந்த போனை எடுத்து அமுக்கி.. குரங்கு விளையாடுது..யாரும் பேசினா..குரங்கு கத்துது.. யாரு உங்களை இந்த ஜன்னலை திறந்துவைக்கச்சொன்னது என்று பூங்கொடி திட்ட கண்ணாயிரம் மெல்ல.. கடைசி ரூமிலேதான குரங்கு வருதுன்னு இங்கேவந்தோம்.. இங்கே வராதுன்னு நினைச்சேன்.. ஏன் பூங்கொடி..என் கால்சட்டையையும் போனையும் குரங்குதான் எடுத்திட்டுப்போயிட்டா.. வேட்டி போச்சி.. இப்போது கால்சட்டையும் போச்சா… ஐயோ.. நான் என்ன பண்ணுவேன் என்று கண்களை கசக்கினார்.
அப்போது அருவா அமாவாசை பூங்கொடிக்கு போன்செய்து.. என்னம்மா..மாப்பிளை நல்லா இருக்காரா..போன் போட்டேன்..ஒரே காச்மூச்சுன்னு கத்துனமாதிரி பேசுனாரு.. ஒண்ணும் சரியா கேக்கலை..மாப்பிளை மிமிக்கிரி பண்ணுவாரா..அவர் பேசாட்டி பரவாயில்லை..தூன்னு துப்புறாரு..இது நல்லா இல்லை..ஆமா என்று சொல்லிவிட்டு போனைவைத்தார்.
பூங்கொடி…ஆ..என்று கத்தினார். என்ன பூங்கொடி என்று கண்ணாயிரம் பயத்துடன் கேட்க.. மண்ணாங்கட்டி..உங்க போனு ஒரு குரங்குகிட்ட மாட்டிக்கிட்டு.. அதை எப்படி மீட்கிறதுன்னு தெரியலையே என்று தலையில் கைவைத்து உட்கார்ந்தார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.