நெல்லையில் மீட்கப்பட்ட பெண் யானை திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைப்பு
1 min read
Rescued female elephant in paddy handed over to Trichy Elephant Rehabilitation Centre
5.4.2023
நெல்லையில் வனத்துறையினர் சுமார் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு திருச்சியை அடுத்த எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
யானை மையம்
திருச்சியை அடுத்த சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதியின்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி, இந்திரா, கோமதி, சுமதி, கிரபி, ரூபாலி ஆகிய 9 யானைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 9 யானைகளுக்கு தலா ஒரு பாகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
நெல்லை
இந்த நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அனுமதியின்றியும், போதிய பராமரிப்பு இல்லாமலும் வளர்க்கப்பட்ட யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்துவதாக தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். இதன்படி வனத்துறையினர் சுமார் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு திருச்சியை அடுத்த எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். மறுவாழ்வு மையத்தின் புதிதாக வந்துள்ள சுந்தரி யானையை தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் மற்றும் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் வனக் கால்நடை மருத்துவ அலுவலர் யானையை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைக்கு வழங்க வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிக்கை கொடுக்க இருக்கிறார். அதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அது மட்டுமின்றி யானைக்கு காச நோய் உள்ளிட்ட ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை அறிய யானையின் சளி, சாணம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு சில நாட்களில் ஏற்கனவே மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுடன் இந்த யானையும் சேர்க்கப்படும். அதுவரை சுந்தரி யானை தனிமையில் வைத்து பராமரிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். புதிதாக வந்துள்ள யானை சுந்தரியை சேர்த்து மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.