ஆலங்குளம் அருகே மின்னல் தாக்கி மாணவர், தொழிலாளி சாவு
1 min read
Student, laborer killed in lightning strike near Alankulam
6.4.2023
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஆணையப்பபுரம் மற்றும் ரெட்டியார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்னல் தாக்கியது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஆணையப்பபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சொள்ளமாடன் (வயது 49). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் ஆடுகள் வளர்த்தார். வேலை முடிந்த பின்னர் மாலை வேளையில் ஆடுகளை வயல்வெளிகளில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அவருடன், உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் (40), குமரேசன் மகன் சசிதரன் (16) ஆகியோர் தங்களது ஆடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றனர். 3 பேரும் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த மழை பெய்தது. திடீரென இடியுடன், மின்னல் தாக்கியது. அது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. மின்னல் தாக்கியதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதனைக்கண்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, சொள்ளமாடன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
நாராயணன், சசிதரன் ஆகிய இருவரும் சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்து எழுந்து உயிர் பிழைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மின்னல் தாக்கியதில் 3 ஆடுகளும் செத்தன. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் இருந்த சொள்ளமாடன் உடலை மீட்ட கடையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்
ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் வேலாயுதம். விவசாயியான இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவர் 15-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு துணையாக மூத்த மகன் தேவ் ஆனந்த் (17) இருந்து வந்தார். தேவ் ஆனந்த் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று இறுதி தேர்வு எழுதியுள்ளார். தேவ் ஆனந்திற்கு விடுமுறை என்பதால் நேற்று வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். ரெட்டியார்பட்டி ஊருக்கு வெளிப்புறம் உள்ள குளத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது மழை பெய்தது. திடீரென மின்னல் தேவ் ஆனந்த் மீது தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவ் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-முத்துசாமி, நிருபர் தென்காசி