May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

வீடியோகாலில் குரங்கைபார்த்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை /தபசுக்குமார்

1 min read

Kannayiram seeing a monkey on a video call/comedy story /Thapasukumar

10.4.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் ஓட்டலில் தங்கியிருந்தபோது ஜன்னல் அருகே கொடியில் தன்செல்போனை கால்சட்டைக்குள்போட்டு தொங்கவிட்டிருந்தார்.அந்த ஜன்னலை காற்றுவருவதற்காக கண்ணாயிரம் திறந்து வைத்தபோது உள்ளே நுழைந்த குரங்கு செல்போன் இருந்த கால்சட்டையை தூக்கிச்சென்றுவிட்டது.

இதை அறியாமல் அவர் செல்போனை காணாமல் தேட ஜன்னல் திறந்திருப்பதால் குரங்குதான் தூக்கிச்சென்றிருக்கும் என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரம் கண்விழி பிதுங்கியபடி அமர்ந்திருந்தார். என் கால்சட்டை..என் செல்போன்..என்று அவர் கண்களை கசக்க.. பூங்கொடி டென்சினில் கத்த கண்ணாயிரம் அறைக்கதவை திறந்துகொண்டு வெளியே வந்து..என் செல்போனை காணலை நான் என்னசெய்வேன் என்று புலம்பினார்.
கண்ணாயிரத்தின் அழுகை சத்தத்தைக்கேட்ட சுடிதார்சுதா மற்றும் இளைஞர்கள் அங்கே ஓடிவந்தனர். என்ன ஆச்சு..ஏன் அழுற என்று கேட்க.. கண்ணாயிரமோ.. என்செல்போனை குரங்கு தூக்கிட்டுப்போயிட்டு என்றார்.
குரங்குதான் தூக்கிட்டுப் போயிருக்குன்னு எப்படி தெரியும் என்று சுடிதார்சுதா கேட்க ..அது..வந்து.. ஜவுளிக்கடைக்காரர் என் நம்பரிலே பேசியிருக்காரு.. குரங்கு கோபத்திலே.. காச்மூச்சுன்னு கத்தியிருக்கு.. ஆனா நான்தான் கத்தினேன்னு நினைச்சுக்கிட்டு பூங்கொடி போனில்வந்து அவர் விரட்டுறாரு.. என்று சொன்னார்.
அப்போது பூங்கொடி வெளியே வந்து ஏங்க..அவங்கக்கிட்ட ஏன் இதை சொன்னீய என்று விரட்ட கண்ணாயிரம்..போ..பூங்கொடி நாலுபேருக்கிட்ட சொன்னாத்தான் நாலு ஐடியா கொடுப்பாங்க.. அதைவச்சி என் செல்போனை மீட்கமுடியும் என்று சொன்னார்.
பூங்கொடி..ம் எப்படியும் போங்க..செல்போன் வந்தா சரி என்றார்.
அப்போது சுடிதார்சுதா மெல்ல.. கண்ணாயிரம் உங்க செல்போனை குரங்குதான் எடுத்திட்டுப்போயிருக்குன்னு உறுதியா நம்புறீயளா என்று கேட்க.. கண்ணாயிரமோ..ஆமா..வேற யாரு என்போனை எடுப்பாங்க… பாண்டிச்சேரியல இருக்கும்போது குரங்கு என் சட்டையை தூக்கிட்டுப்போச்சு.. இப்போ.. கால்சட்டையோட என் செல்போனையும் தூக்கிட்டுப்போயிட்டு..என்க இளைஞர்களோ கண்ணாயிரம் அப்போ கால்சட்டையே போடலையா..வெறும் துண்டுதான் கட்டியிருக்கியளா என்று கேலி செய்தனர்.
சுடிதார் சுதா அவர்களை சத்தம் போட்டுவிட்டு.. கண்ணாயிரத்தை யாரும் கேலிபண்ணக்கூடாது.. குரங்கு மட்டும்தான் அவரை கேலிபண்ணணும் என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
அந்த நேரத்தில் பயில்வானும் துபாய்க்காரரும் அங்குவந்து..என்ன பிரச்சினை.. ஏன் கூடியிருக்கீங்க என்று கேட்க.. கண்ணாயிரம் செல்போனை கால்சட்டையோட குரங்கு தூக்கிட்டுப் போயிட்டு என்று சொல்ல ஒரு இளைஞர் அது எப்படி குரங்குதான் தூக்கிட்டுப்போயிருக்குமுன்னு நினைக்கிறீங்க.. கண்ணாயிரம் கால்சட்டையை காக்கா தூக்கிட்டுப்போயிருக்காதா என்று கேட்டார்.
உடனே சுடிதார் சுதா காக்கா வடையைத்தான் தூக்கிட்டுப்போகும்.. கால்சட்டையை தூக்கிட்டுப்போகாது..என்றார்
அதை கேட்ட பயில்வான்..என்ன ஆளாளுக்கு ஒண்ண சொல்லாதீங்க. .கண்ணாயிரம் செல்போனை கால்சட்டையுடன் தூக்கிட்டுப்போனது குரங்கா…காக்கா என்பதை கண்ணாயிரம் போனுக்கு வீடியோகால் போட்டா தெரிஞ்சிடப்போகுது என்று சொல்ல அதுஎப்படி என்று கண்ணாயிரம் கேட்டார்.
ஏய் உன் நம்பருக்கு வீடியோகால் போட்டால் அதைவச்சிருக்கிற குரங்கு போனில் தெரியும் நாமபோய் பிடிச்சிடலாம் என்று பயில்வான் சொல்ல ஆமா.. அது நல்ல ஐடியாத்தான் என்ற பூங்கொடி உற்சாகமாக தன் செல்போனில் இருந்து கண்ணாயிரம் செல்போனுக்கு வீடியோகால் பண்ணினார்.
எல்லோரும் வீடியோகாலில் குரங்கை பார்க்கப்போகிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் பூங்கொடி வீடியோகால் போட்டபோது கட்டாகியது.
உடனே பயில்வான்..விடாதீங்க..மீண்டும் வீடியோகால் பண்ணுங்க என்று சொல்ல பூங்கொடி சாமியையெல்லாம் கும்பிட்டுவிட்டு மீண்டும் வீடியோகால் பண்ணினார்.
டக்கென்று கிடைத்தது. அதில் குரங்கு ஒன்று பற்களை காட்டி சிரிக்க அருகில் மற்றொரு குரங்கு கண்ணாயிரத்தின் கால்சட்டையை அரைகுறையாக போட்டபடி முறைத்துபார்த்தது. அதை புரிந்துகொண்ட..பூங்கொடி..ஆ.. குரங்கை கண்டுபிடிச்சாச்சு.. கண்ணாயிரம் கால்சட்டையை அதான் போட்டிருக்கு என்று சத்தம்போட..கண்ணாயிரம் மெல்ல செல்போனில் எட்டிப்பார்த்தார்.
அவரது கால்சட்டையை போட்டிருக்கும் குரங்கு நாக்கை கடித்தபடி பார்க்க..கண்ணாயிரம் கோபத்துடன்..ஏய் என் கால்சட்டையை போட்டுக்கிட்டு என்னையே நாக்கை கடிச்சு மிரட்டுறீயா.. உன்னை என்ன செய்யுறன்பாரு என்று ஆள்காட்டிவிரலை காட்டி எச்சரித்தார்.
அப்போது சுடிதார் சுதா ஏங்க..குரங்கை மிரட்டாதீங்க.. அது கோபத்தில செல்போனை தூக்கிவீசிடப்போகுது..அது எங்கே இருக்குன்னு பார்த்து நைசா பேசி செல்போனை வாங்கணும் என்றார்.
குரங்குகிட்ட என்னபாசையில் பேசுறது என்று இளைஞர்கள் நக்கலடித்தனர். சுடிதார் சுதா அவர்களிடம்..ச்சு.. ஆடுறமாட்டை ஆடி கறக்கணும்..பாடுற மாட்டை பாடிக்கறக்கணும். அதுபோல் செல்போனை வச்சிருக்கிற குரங்கிடம் நாம ஆடிப்பாடிதான் செல்போனை வாங்கணும் என்று சொன்னார்.
இப்போ குரங்கு எங்கே இருக்கு செல்போனில் பார்த்த சுடிதார் சுதா..ஆ..மரக்கிளையிலே சாஞ்சிக்கிட்டுத்தான் குரங்கு செல்போன் பார்க்குது.. அது எப்போ கீழே இறங்கிவருதுன்னு செல்போனில பாத்துக்கிட்டே இருக்கணும்..அது கீழே வந்ததும் போய் கெஞ்சிபேசி செல்போனை வாங்கிட்டு வந்திடுவோம் என்று சொல்ல.. இது நல்ல ஐடியாத்தான் என்றார் பயில்வான்.
அதைக்கேட்ட பூங்கொடி..ம்..எல்லாம் இந்த ஆளால வந்த வினைதான்…எவ்வளவு நேரம் வீடியோகாலில் இருக்கிறது. ஷார்ஜ் இறங்கிடும் என்க இந்த சார்ஐ இறங்கிறது பினச்சினை இல்லை…குரங்கு இறங்கிவரணும் அவ்வளவுதான் என்றார் பயில்வான்.
ம்…ச்சே..ரொம்ப இம்சையா போச்சு என்றபடி பூங்கொடி செல்போனையே பார்த்தபடி இருக்க…திடிரென்று ஒரு குரங்கு ஒருகையில் செல்போனை பிடித்தபடி பார்க்க மற்றோரு கையால் கிளைகளை பிடித்தபடி கீழே இறங்க முயற்சிக்க கால்சட்டைபோட்ட மற்றோரு குரங்கு அதன் பின்னால் மரத்திலிருந்து இறங்கியது.
யாரும் சத்தம்போடாதீங்க ..குரங்கு மரத்தைவிட்டு கீழே இறங்குது ..அமைதியாக இருங்க என்று சொன்னபோது கண்ணாயிரம் மகிழ்ச்சியில் ஏ ..குரங்கு இறங்குது.. குரங்கு இறங்குது என்று வேகமாக செல்போன் முன்வந்து கத்த அதைப்பார்த்த குரங்கு அரண்டுபோய் மீண்டும் மரத்தின் உச்சிக்கு ஓடியது.
அவ்வளவுதான்…பூங்கொடி…ஆ..என்று கண்ணாயிரத்தைப் பார்த்து கத்திவிட்டு செல்போனில் வீடியோ காலை நிறுத்தினார்.
கண்ணாயிரம் ஒன்றும் புரியாமல் ..பூங்கொடியேயே பார்த்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.